Published : 20 Jun 2019 11:01 AM
Last Updated : 20 Jun 2019 11:01 AM

தெய்வத்தின் குரல்: அன்பே அருள்

சரீரம்தான் சத்தியம் என்பதற்கு மேலே போகமுடியாதவனாக அசுரனான விரோசனன் இருக்கிறான். ஆனால் அவனையும்கூட இப்போது நம்மில் பெரும்பாலோர் இருக்கிறதுபோல எந்த விதத் தத்துவ சிந்தனையுமில்லாமல், வெறும் அரட்டையிலும் சோம்பேறித்தனத்திலும் பொழுதைப் போக்கும் விருதா ஆசாமியாக இல்லாமல், எது சத்தியம் என்று கொஞ்சமாவது ஆராய்ந்து, அது சரீரம்தான் என்று தப்பாகவாவது ஒரு கொள்கைக்கு வருவதற்குக் குருவான ப்ரஜாபதி உதவி செய்திருக்கிறார். எதையுமே கழித்துக்கட்டிவிடாமல் கொஞ்சமாவது அபிவிருத்தி செய்து பார்க்கலாம் என்ற நோக்கத்திலேயே அக்கால குருமார்கள் சிஷ்யர்களை ஏற்றுக் கொண்டதற்கு இது சாட்சி.

சிஷ்யன் என்று வரும்போது ரொம்பவும் உதவாக்கரைகூட யோக்கியதையை சம்பாதித்துக் கொள்வதற்காக, அந்நாளில் பரிச்ரமப்பட்டிருக்கிறானென்பதும் இங்கே தெரிகிறது – அசுரன் விரோசனனும்கூட பிரஜாபதியின் வார்த்தைக்குக் கட்டுப்பட்டு, தத்துவத்தை ஆராய்வதற்கான யோக்யதையை சம்பாதித்துக் கொள்வதற்காக முப்பத்திரண்டு வருஷம் பிரம்மசர்யம் அநுஷ்டித்தான் என்று உபநிஷத் சொல்கிறது.

தத்துவம் கற்கப் போன அசுரன்

தேவராஜன் இந்திரனும் தத்துவம் தெரிந்துகொள்வதற்காக விரோசனனுடனேயே பிரஜாபதியிடம் போனவன்தான். ஆனால் விரோசனன் மாதிரி சரீரத்தோடு இவன் நின்றுவிடாமல், ப்ருகு கதையில் பார்த்தோமே, அப்படி சரீர சௌக்கியத்தோடு நிறைவு பெற்றுவிட முடியாமல் மறுபடி பிரஜாபதியிடம் வருகிறான்.

இதற்கு மேற்பட்ட உண்மைக்கு அதன் அர்ஹனாவதற்காக (தகுதியுள்ளவனாவதற்காக) அவர் அவனை மறுபடி முப்பத்திரண்டு வருஷம் அவரோடேயே வசித்து பிரம்மசர்யம் காக்கச் சொல்கிறார்.

மஹா பெரிய தேவ ராஜாவானாலும் சரி, இப்படி கடுமையாக விதிக்கு உட்படுத்தி, அதனாலேயே பெறக்கூடிய பரிசுத்தியை சிஷ்யன் பெறுமாறு பண்ணி அப்புறம்தான் உசந்த தத்துவங்களை உபதேசிப்பார்கள். இந்த மாதிரி மொத்தம் நூற்றியொரு வருஷம் இந்திரன் இந்திரியக் கட்டுப்பாட்டோடு இருந்த பிற்பாடுதான் பிரஜாபதி அவனுக்கு முடிவான ஆத்ம தத்துவத்தைப் போதிக்கிறார்.

தகுதி பார்க்காமல் வித்யையைக் கொடுப்பதால்தான் சயன்டிஸ்ட்கள் ஆத்ம ஹானிக்கான நூதன நூதனக் கண்டுபிடிப்புகளைப் பண்ணுவது, டாக்டர்கள் மஹா பாவங்களுக்கு ஆதரவு தந்து ஊக்குவதான சிகிச்சைகள் தருவது என்பதெல்லாம் சகஜமாகி வருகின்றன. இதற்கான அநேக காரணங்களில் ஒன்று, ஸ்தாபன ரீதியில் பல மாணவர்களுக்குக் கல்வி புகட்டும்போது, ஒவ்வொருத்தருக்கும் தனிப்பட்ட கவனம் (Individual attention) செலுத்த முடியாமலிருப்பதுமாகும்.

இப்படிக் கண்குத்திப் பாம்பாகக் கவனிப்பது எத்தனையோ சிரமம். இதில் எத்தனையோ பொறுப்பு. “இவன் யாருடா ஓயாமல் நம்மைப் பரீக்ஷை பண்ணி இம்சித்துக் கொண்டிருக்கிறான்” என்று சிஷ்யனின் எரிச்சலை வேறு வாங்கிக்கொள்ளவேண்டும்.

எந்த விதமான பிரதிபிரயோஜனத்தையும் கருதாமலே, ‘வித்யை பரவ வேண்டும், பரவ வேண்டுமென்றாலும் (இப்போது எல்லாவற்றையும் எல்லாருக்கும் அவிழ்த்துக்கொட்டி மதிப்பைக் குறைப்பது போலவும் இல்லாமல்) தக்கவர்களுக்குத்தான் வித்யையைத் தரவேண்டும்; அதற்காக, நிர்தாட்சண்யமாகத் தகுதியைச் சோதித்துப் பார்க்கவேண்டும்; அந்தத் தகுதி என்பது புத்தியைக் குறித்ததாக மட்டுமில்லாமல், மாணவனின் நடத்தையை, குணத்தைக் குறித்ததாகவுமிருக்க வேண்டும்; முடிந்த மட்டும் தகுதியைப் படிப்படியாக அபிவிருத்தி பண்ணப் பிரயாசைப் படவேண்டும்’ என்று ஆதிகால குருமார்கள் இருந்திருக்கிறார்கள்.

குணங்களுக்கு மேலான குணம்

இந்தக் கண்டிப்புக்கு மஹா பெரிய தேவராஜனும் உடன்பட்டான், ஏன், அசுர ராஜன் விரோசனன்கூட உடன்பட்டான் என்பது அக்காலத்தில் மாணவர்களுக்கு வித்யையில் இருந்த ஆர்வத்தைக் காட்டுகிறது. அதோடு நிற்கவில்லை. ‘இவ்வளவு கண்டிப்புச் செய்ய இவர் யோக்யதாம்சமுள்ளவர்தான்.

இத்தனை யோக்யதாம்சமுள்ள வருக்கு நாம் கீழ்ப்படிந்து போவதில் நமக்கு ச்ரேயஸ்தானே தவிர குறைவு இல்லை’ என்று சீடர்கள் நினைக்கும்படியான உத்தம புருஷர்களாக ஆச்சாரியர்கள் இருந்ததும் இதிலிருந்து தெரிகிறது. இதிலே இன்னொரு முக்கியமான அம்சமும் இருக்கிறது. ‘உத்தம புருஷர்’ என்றால் அப்பழுக்கில்லாத சுத்த வாழ்க்கை, நேர்மை, தபஸ், வைராக்கியம் ஆகியவை மட்டும் இருந்தால் போதுமா என்ன? இவை பிறத்தியாரிடம் மரியாதையையும் பக்தியையும்தான் தூண்டும்.

ஆனால் அவரோடேயேகூட இருந்து வாழ்ந்து கொண்டிருக்க வேண்டும் என்று மாணவன் விரும்பும்படியாக இவை மாத்திரம் அவனை அவரிடம் ஆகர்ஷித்துவிடுமா என்ன? தபஸ்வி, மஹாபுத்திமான், கடும் நேர்மையாளர் என்றால் தூர இருந்து நமஸ்காரம் பண்ணத் தோன்றுமே ஒழிய, கூட இருந்து வாசம் பண்ணுகிற ஆசை ஏற்படாதே! இந்த விருப்பத்தை உண்டாக்குவதற்கு குருவானவர் மற்ற எல்லா யோக்யதாம்சங்களுக்கும் மேலாக அன்பு உள்ளத்தவராக, அருள் சுபாவமுள்ளவராக இருந்தாக வேண்டும். உத்தம புருஷ லக்ஷணங்களில் முதலாக வருவது இந்த அன்புதான், அருள்தான். அன்பேதான் திவ்ய சக்தியைப் பெற்றுப் பிறரை ரக்ஷிக்க வலிமை பெறுகிறபோது அதை அருள் என்றும் அனுகிரகம் என்றும் சொல்கிறோம்.

பரஸ்பரப் பிரியம்

நம்முடைய சாஸ்திர, புராணங் களிலிருந்து இந்த அன்புடைமையில், அருளுடைமையில் அந்நாள் ஆச்சாரியர்கள் ஆதர்ச புருஷர்களாக இருந்திருப்பது தெரிகிறது. குரு சிஷ்யர்களுக்கிடையிலே பரஸ்பரப் பிரியம் போகவே கூடாது என்றுதான் பாடம் ஆரம்பிக்கும்போதே மந்திரப்பூர்வமாக வேண்டிக்கொண்டிருக்கிறார்கள். “நாங்கள் ஒருத்தருக்கொருத்தர் பகைத்துக் கொள்ளாமல் இருக்கவேண்டும்” என்பது பாட ஆரம்பத்திலும், முடிவிலும் வருகிற உபநிஷத் பிரார்த்தனை.

“அடிக்கிற கைதான் அணைக்கும்” என்பதற்கு அப்படியே ரூபகமாக அந்த ஆசார்யர்கள் இருந்திருக்கிறார்கள். கண்டிப்புச் செய்ய வேண்டிய இடத்தில் எப்படி நிர்தாக்ஷிண்யமாகக் கண்டித்தார்களோ ,அப்படியே அன்பைக் கொட்ட வேண்டிய சமயத்தில் கொட்டினார்கள்.

(தெய்வத்தின் குரல் நான்காம் பகுதி)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x