Last Updated : 08 Jun, 2019 12:51 PM

 

Published : 08 Jun 2019 12:51 PM
Last Updated : 08 Jun 2019 12:51 PM

தாய்மார்களின் கண்ணீரைத் துடைப்பான் ஞானமுருகன்!

சுவாமிமலை திருத்தலம் குறித்த இன்னொரு சுவாரஸ்யம்...

சிவனாரின் நெற்றிக் கண்ணில் இருந்து தீப்பொறிகளாக அவதரித்தவர் முருகக் கடவுள். தன் மடியில் தவழவில்லையே... பூமாதேவியின் மடியில் தவழும்படி ஆகிவிட்டதே என வருந்தினாளாம் பார்வதிதேவி. இதனால் பூமாதேவியைச் சபித்தாள் பார்வதிதேவி. இந்தச் சாபத்தில் இருந்து விமோசனம் பெறுவது எவ்விதம் எனத் தவித்தாள் தேவி.

எங்கெல்லாமோ அலைந்து, இறுதியாக சுவாமிமலைக்கு வந்தாள். பிறகு மைந்தன் முருகக் கடவுளை வணங்கி, சாபவிமோசனம் பெற்றாள் என்கிறது ஸ்தல புராணம். ஆகவே, இங்கே... சுவாமிமலையில், கண்ணீருடன் வரும் தாய்மார்களைக் கண்டு பொறுத்துக் கொண்டு இருக்கமாட்டான் கந்தக்கடவுள். அவர்களின் கண்ணீரை, பெற்ற பிள்ளை போல் காத்தருளி, துடைப்பான் என்கின்றனர் பக்தர்கள்!

இன்னொரு விஷயம்... சாபத்துடன் வந்த பார்வதிதேவி, இங்கே வந்து தவமிருந்து கந்தனின் அருள் பெற்று, சாபவிமோசனம் பெற்றாள். இதையடுத்து திருக்கயிலாயம் செல்ல, இந்த இடம் விட்டுப் பிரிவதற்கு மனமே இல்லையாம். ஆகவே, இங்கே இந்தத் தலத்தில் நெல்லி மரமாக நின்று, இன்றைக்கும் தன் வழிபாட்டைத் தொடர்கிறாள் என்பதாக ஐதீகம்.

நெல்லிக்கு தாத்ரி என்றொரு பெயர் உண்டு. சுவாமிமலைக்கு தாத்ரிமலை, தாத்ரி க்ஷேத்திரம் என்றும் பெயர்கள் உள்ளன.

சுவாமிமலை, தம்பி முருகனின் படைவீடு. அருகில் உள்ள திருவலஞ்சுழி அண்ணன் கணபதியின் ஆலயம். இரண்டுமே அருகருகே இருப்பது சிறப்பு. இந்த இரண்டு தலங்களையும் ஒருசேர வழிபட்டால், குடும்பத்தில் ஒற்றுமை ஓங்கும். சந்தோஷம் நீடிக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை!

தாத்ரியை ஸ்தல விருட்சமாகக் கொண்ட தலம் சுவாமிமலை. இங்கே உள்ள தீர்த்தங்களும் சிறப்புகளைக் கொண்டு திகழ்கின்றன.

கீழக்கோயிலாகத் திகழும் மீனாட்சி அம்பாள் சமேத சுந்தரேஸ்வரர் கோயிலுக்கு அருகில் கிணறு போல் இருக்கிறது வஜ்ர தீர்த்தம். முருகப்பெருமானுக்கு, அவரின் அபிஷேகத்துக்கு இங்கிருந்தே நீர் எடுத்துச் செல்கிறார்கள். இதை சுவாமி கூபம் என்றும் க்ஷேத்திர கூபம் என்றும் சொல்கிறார்கள். இந்தத் தீர்த்த நீரைத் தெளித்துக் கொண்டால், சகல நோய்களில் இருந்தும் நிவாரணம் கிடைக்கும். தீராத நோயும் தீரும். பிரம்மஹத்தி முதலான தோஷங்கள் யாவும் விலகும் என்கின்றனர் ஆச்சார்யப் பெருமக்கள்.

கோயிலுக்கு அருகில், காவிரியின் கிளை நதி ஓடுகிறது. இதை குமாரதாரை என்கின்றனர். ‘எல்லாரும் எங்கிட்ட வந்து, பாவங்களைக் கழுவுறாங்க. அத்தனைப் பாவத்தையும் சுமந்துட்டிருக்கிற நான், இதையெல்லாம் எங்கே கொண்டுபோய் கழுவுறது’ என்று அலுத்துக் கொண்டாளாம் கங்காதேவி. பிறகு சிவபெருமானின் அறிவுரைப்படி, இங்கே வந்து காவிரியுடன் கலந்து குமரக்கடவுளை வழிபட்டு புனிதம் அடைந்தாள் என்று சொல்கிறது புராணம். ஆகவே இந்தத் தீர்த்தத்தில், குமார தாரை தீர்த்தத்தில் நீராடுவதாலும் தலையில் தெளித்துக் கொள்வதாலும் பாவம் அனைத்தும் விலகிவிடும் என்பது ஐதீகம்!

அடுத்து... கோயிலின் வடகிழக்குப் பகுதியில் உள்ளது சரவண தீர்த்தம். ஜமதக்னி முனிவரின் சாபத்தால், கரடி உருவத்தை அடைந்த தன் அப்பா, மீண்டும் மனித உரு எடுக்கவேண்டும் என்பதற்காக, சிறுவன் ஒருவனால் ஏற்படுத்தப்பட்ட தீர்த்தம் என்கிறது ஸ்தல புராணம். சிறுவனின் தந்தை இந்தத் தீர்த்தத்தில் நீராடி, முருகக் கடவுளை வழிபட்டார், பலன் பெற்றார். மீண்டும் மனித உரு பெற்றார்!

ஆலயத்தின் கிழக்கே உள்ளது நேத்ர தீர்த்தம். வேலாயுதத்தின் வேல் ஆயுதத்தால் உண்டாக்கப்பட்டதாகச் சொல்வர். இந்தத் தீர்த்தம் குறித்தும் தீர்த்தப் பெருமை குறித்தும் சப்த ரிஷி வாக்கியம் எனும் நூல் என்ன சொல்கிறது தெரியுமா?

சுமதி எனும் ஆண் (ஆமாம்... அப்படித்தான் அமைந்திருக்கிறது பெயர்), ‘பார்க்கக் கூடாததைப் பார்க்கக் கூடாது’ எனும் முன்னோரின் அறிவுரையைக் கேட்காததால்., பார்வையை இழந்தான். பார்வை இல்லாமல் தவித்துக் கலங்கியவன், பரத்வாஜ முனிவரின் அருளுரைப் படி, இந்தத் தீர்த்தத்தில் நீராடி, பார்வை பெற்றான். இதனால்தான் இந்தத் தீர்த்தத்துக்கு நேத்ர தீர்த்தம் என்று பெயர் அமைந்ததாம்!

கண்ணில் அடிக்கடி ஏதேனும் பிரச்சினை, கண் புரையில் பிரச்சினை, கண் பார்வையில் குறைபாடு என இருப்பவர்களுக்கு ஒளி கொடுக்கும் இந்தத் தீர்த்தத்தில் நீராடி முருகப் பெருமானை வணங்கினால் விரைவில் சிக்கல்களும் பிரச்சினைகளும் தீரும். பார்வையில் ஒளியேறும் என்பது ஐதீகம்! மேலும் சுவாமிமலை கோயிலில் நேத்ர கணபதி என்று திருநாமத்துடன் காட்சி தருகிறார் விநாயகப் பெருமான். அவரையும் அவரின் தம்பியையும் வணங்கிப் பிரார்த்தனை செய்தால், ஒளி படைத்த கண்களுடன் இனிதே வாழலாம்!

கார்த்திகை மாதத்தில், கார்த்திகேயனான முருகப் பெருமான் ஒரு ஞாயிற்றுக்கிழமையில் இங்குதான் தீர்த்தவாரி எழுந்தருள்கிறார் என்றால், தீர்த்தப் பெருமையை இன்னும் நன்றாகவே தெரிந்துகொள்ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x