காற்றில் கீதங்கள் 23: உண்மைக்கு உண்மை மீரான்!

காற்றில் கீதங்கள் 23: உண்மைக்கு உண்மை மீரான்!
Updated on
1 min read

இறைவனே மிகப் பெரியவன். அவனுடைய கருணைக் கடலே பிரம்மாண்டமானது. அதில் லயிக்க வும் துய்க்கவும் துணைபோவதே இசை.

இறைவனின் கருணையையும் காதலையும் ஒருங்கே பெறுவதற்கான முயற்சியில் ஈடுபடும் ஓர் இளைஞரின் முயற்சியே ஒரு சிறந்த இறைப் பாடலாகிறது. அடர்த்தியான புல்லாங்குழலின் ஒலியைக் கேட்டதுமே நம்முடலின் பதற்றம் குறைகிறது. அந்தக் குழலின் ஒலி முடியும் புள்ளியியில் ‘யா மீரா…’ என உமரின் குரல் தொடங்குகிறது. ஆர்ப்பரிக்கும் பிரம்மாண்டத்தின் சாட்சியாக விரிந்திருக்கும் கடலின் முன்பாக ஏகாந்தமாக ஒலிக்கிறது உமரின் குரல். பொருத்தமான இடங்களில் கோரஸாகச் சிலர் பாடினாலும், உமரின் குரலில் வெளிப்படும் ஏற்ற இறக்கங்களின் உருக்கம் கேட்பவரின் மனத்தைக் கரைக்கும்.

நீண்ட மூங்கில் கழியுடன் தர்கா நோக்கி நடைபோடும் யாத்ரிகர், இறைப் பாடல்களைப் பாடியபடிவரும் பக்ரிகள், தர்காவில் தொழுகைக்குப் போகும் மக்கள், மயிற்பீலியால் சாம்பிராணி புகையை விசிறிக் கொடுப்பவர், குறுக்கும் நெடுக்கும் ஓடும் குழந்தைகள் என உயிரோட்டமான பாடலுக்கான காட்சி வடிவமும் ஈர்க்கிறது. 

மஷூக் ரஹ்மான் எழுதியிருக்கும் இந்தப் பாடலின் வரிகள் இறையுடனான நெருக்கத்தைக் கேட்பவர்களுக்கும் அளிக்கும் வகையில் உள்ளன. ‘இறவா கதிரே உன் மீதே காதலானேன்’, ‘என்னைத் துண்டாடி காதல் செய்ய வேண்டுமே’, ‘மீட்சி இன்றி வாடும் என்னை... சூழ்ச்சி நீக்கி காப்பாய்...’ ஷாஜித் கான் இசையமைத்திருக்கும் இந்தப் பாடலுக்கான மெட்டும் நம்மை இறைத் தாலாட்டில் ஈடுபடவைக்கிறது.

அமின் பாயட்டின் சிதார் உமரின் குரலோடு சில இடங்களில் உரையாடுகிறது. சில இடங்களில் உமரின் குரலுக்குப் பதிலாகவே ஒலிக்கிறது. இந்த உரையாடலுக்கு ஒத்திசைவாக மஜித் யக்னே ராட், மோர்டஸா யக்னே ராட், சோகந் அப்பாஸி ஆகியோர் ஈரானிய டஃப் மேளத்தை அடக்கி வாசித்திருக்கின்றனர். பாடலின் ஒவ்வொரு சரணம் முடியும்போதும் ஆழ்கடலின் அமைதியை நம் மனம் உணர்கிறது. 

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in