

ராமாயணத்தில் சீதா மாதாவுக்கு அளிக்கப்பட்ட இடம் மகத்தானது. சீதை இல்லை என்றால் சுந்தரகாண்டம் இல்லை. ராவணனால் அசோகவனத்தில் சிறைபிடிக்கப்பட்டாள். தன்னை மணம் புரிந்து கொள்ளும்படி ராவணன் சீதையிடம் தினசரி நிர்ப்பந்தம் செய்து பேசுவான்.
நாம் ஒரு செயலை தினசரி, யாராவது செய்யச் சொல்லி வற்புறுத்தினால் ஒரு நாள் செய்து விடுவோம். ஆனால் ராவணன் சீதையிடம் வந்தபோது ஒரு புல்லைக் கிள்ளி ராவணன் முன் போடுகிறாள்.
“இந்தப் புல்லைப் போல உன்னையும் என்னால் முடிக்க முடியும். ஆனால் ராமனே என்னை ரக்ஷிப்பான். என்னை மட்டுமல்ல நீயும் அவன் சரணம் பற்றினால் உன்னையும் ரக்ஷிப்பான்.” என்று ராவணனையே வெல்கிறாள். மனத்தில் ராம நாமம் ஜபித்ததால் ராம நாம மகிமை அவளைக் காத்தது.
உலகத்தில் தாரக மந்திரம் இரண்டு : ஒன்று ஓம்,மற்றொன்று ராம். சீதை இடைவிடாது சிந்தையிலே ராம ராம ராம என்று நாமத்தை ஜபித்தாள். அவள் சக்தியாலே ராவணனை அழித்திருக்கலாம்.
ஆனால் தன் பதிக்குப் பெருமை சேர்க்கும் விதமாக ராம நாமம் சொல்லிக் காத்திருந்தாள். காசியிலே இறக்கும் உயிர்களுக்கு அவற்றின் காதில் ராம நாமம் ஓதி மோட்சம் தருகிறாள் விசாலாட்சியான உமாதேவி. நமக்கு ஞானேந்திரியங்கள், கர்மேந்திரியங்கள் பத்து உள்ளன.
அவற்றை விட்டு நல்வழி வாழ ராம நாமம் நமக்கு வேண்டும். நம் இந்திரியங்களை அடக்கி வெறுத்து இறைவனை அடையும் வழியைத் தேட வேண்டும். இடைவிடாது நாம ஜபம் பண்ணுவதின் மூலம் நாம் நல்வழி தேடலாம்.
‘நன்மையும் செல்வமும் நாளும் சேருமே
திண்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
ஜென்மும் மரணமும் இன்றி தீருமே,
இம்மையே ராமா” என்று அந்த இரண்டு எழுத்தின் மகிமையைக் கம்பர் கூறுகிறார். ராம நாமத்தினால் நல்ல கதிக்குச் செல்லலாம் என்று திருக்கோளூர் பெண்பிள்ளை கூறுகிறாள். சீதா மாதா தசமுகனை செற்றியதுபோல் நான் எனது பத்து இந்திரியங்களைக் கூட வெறுக்கவில்லையே சுவாமி. வீணான எண்ணங்களில் உழல்கின்றேனே என்று வருந்துகிறாள்.
(தொடரும்)
கட்டுரையாளர்,
தொடர்புக்கு : uyirullavaraiusha@gmail.com