எருமைக்கு உளுந்து வைத்து பிரார்த்தனை; அரசு வேலை, விரும்பிய வேலை நிச்சயம்!

எருமைக்கு உளுந்து வைத்து பிரார்த்தனை;
அரசு வேலை, விரும்பிய வேலை நிச்சயம்!
Updated on
1 min read

சனிக்கிழமைகளில் எருமை மாட்டுக்கு உளுந்து வைத்தால், அரசாங்க வேலை கிடைக்கும்; விரும்பிய வேலை கிடைக்கப் பெற்று இனிதே வாழ்வீர்கள் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

படித்த படிப்புக்கு வேலை, வாழ்க்கையை நகர்த்துவதற்கு வேலை, விரும்பியபடியான வேலை, அரசாங்க வேலை என்று வேலையில்தான் எத்தனையெத்தனை பிரிவுகள் உள்ளன.

‘கைநிறையக் காசு கிடைச்சாப் போதுமா? மனசுக்குப் பிடிச்ச வேலை வேணும். அதான் சந்தோஷம்’ என்று சொல்லுபவர்களும் இருக்கிறார்கள்.

அதேபோல், ‘காக்காசா இருந்தாலும் கவர்ன்மெண்ட் உத்தியோகம்’ என்றொரு சொலவடையே இருக்கிறது. ‘எப்பாடுபட்டாவது அரசு வேலை கிடைத்துவிட்டால், வாழ்க்கையே சிறப்பாகிவிடும்; அடுத்த தலைமுறையும் அதனால் வளர்ந்துவிடும்’ என்று உறுதியுடன் சொல்பவர்கள் இங்கே அதிகம்தானே.

இந்த நிலையில், நல்ல வேலை, அரசு வேலை, விரும்பிய வேலை என்று கிடைக்காமல் ஏக்கமும் தவிப்புமாக இருப்பவர்களுக்கு, அவர்களின் விருப்பங்கள் நிறைவேறுவதற்கு எளிய பரிகாரங்கள் இருக்கின்றன என்று தெரிவிக்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

தினமும் சூரிய உதயத்தின் போது, சூரிய நமஸ்காரம் செய்து வழிபட்டு வந்தால், நினைத்தது போலவே வேலை அமையும் என்று வழிபட்டுப் பலன் பெற்றவர்கள் சொல்கிறார்கள்.

அனுமனையும் பைரவரையும் தொடர்ந்து வழிபட்டு வந்தால் அரசு வேலை கிடைக்கும்; விரும்பிய வேலை கிடைக்கும் என்பது ஐதீகம்.

அனுமனுக்கு வெற்றிலை மாலை சார்த்தி வேண்டிக் கொள்ளுங்கள். அதேபோல், சுந்தரகாண்டம் பாராயணம் செய்வதும் மிகுந்த பலன்களைத் தரும்.

27 மிளகுகளை எடுத்து ஒரு துணியில் கட்டி, அந்தத் துணியை இலுப்பை எண்ணெய், நல்லெண்ணெய் என ஊற்றி பைரவருக்கு தீபமேற்றி வணங்கி வந்தால், விரைவில் நல்ல உத்தியோகம் கிடைக்கும்; அரசுப் பணிகளில் அமரும் பாக்கியம் கிடைக்கப் பெறலாம். நீங்கள் விரும்பிய வேலை கிடைப்பது உறுதி என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

பைரவருக்கு தீபமேற்றுவதை காலை 6 முதல் 7 மணிக்குள்ளேயும் இரவு 8 முதல் 9 மணிக்குள்ளேயும் செய்யவேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

சனிக்கிழமைகளில், உளுந்தை எடுத்து தண்ணீரில் ஊறவையுங்கள். பிறகு மதியம் 1 மணி முதல் 2 மணிக்குள் எருமைமாட்டுக்கு ஊறவைத்த உளுந்துத்தண்ணீரை வழங்குங்கள். இப்படி சனிக்கிழமைகளில் தொடர்ந்து வழங்கி வந்தால், அரசு வேலை கிடைப்பது உறுதி; நினைத்த வேலையில் சேருவது நிச்சயம்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in