Published : 17 Sep 2014 10:22 AM
Last Updated : 17 Sep 2014 10:22 AM

உள்ளாட்சி தேர்தல் நேர்மையாக நடைபெற தேவையான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்: பாஜக தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவு

உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தல் நேர்மையாகவும், வெளிப்படையாகவும் நடைபெறும் வகையில் தேர்தல் ஆணையம் தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக பா.ஜ.க. மாநில தலைமை அலுவலகச் செயலாளர் கே.சர்வோத்தமன் மனு தாக்கல் செய்திருந்தார்.

“தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 281 பதவிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. ஆளும் கட்சிக்கு சாதகமான விதத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டதால், தமிழ்நாட்டின் முக்கியமான அரசியல் கட்சிகள் தேர்தலில் போட்டியிடாமல் தேர்தலையே புறக்கணித்து விட்டன. இந்நிலை யில் எங்கள் கட்சி சார்பில் 122 இடங்களுக்கு வேட்பாளர்களை நிறுத்த முடிவு செய்தோம். எனினும் வெறும் 83 பேர் மட்டுமே தற்போது களத்தில் உள்ளனர். வேட்பு மனு தாக்கல் செய்தவர்களை ஆளும் கட்சியினர் கடத்திச் சென்றும், மிரட்டியும், போலி கையெழுத்துகளை இட்டும் எங்கள் கட்சி வேட்பாளர்கள் பலரது வேட்பு மனுக்களை தள்ளுபடி செய்ய வைத்துள்ளனர்.

ஆளும் கட்சியினர் ஏராளமான முறைகேடுகளை செய்துள்ளதால், வரும் 18-ம் தேதி நடைபெறும் இடைத்தேர்தல் வெறும் கண் துடைப்பாகவே அமையும். ஆகவே, வரும் 18-ம் தேதி உள்ளாட்சி இடைத்தேர்தலை நடத்துவதற்கு மாநில தேர்தல் ஆணையத்துக்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை விதிக்க வேண்டும். தேர்தல் அறிவிக்கையை ரத்து செய்து விட்டு, மீண்டும் புதிதாக அறிவிக்கை வெளியிடும்படி நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என்று மனுவில் கோரப்பட்டிருந்தது.

இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி எம்.சத்தியநாராயணன் ஆகியோரைக் கொண்ட முதன்மை அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, “தேர்தல் ஆணை யத்துக்கு வந்த புகார்கள் பற்றி தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. குறிப்பிட்டபுகார்கள் பற்றி ஆராய சில அதிகாரிகள் நியமிக்கப்பட் டுள்ளனர். மேலும் தேர்தல் நேர்மையாகவும், நியாயமாகவும் நடை பெறுவதை உறுதி செய்யும் வகையில் இம்மாதம் 12-ம் தேதி அனைத்து தேர்தல் அதிகாரி களுக்கும் தேர்தல் ஆணையம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது” என தேர்தல் ஆணையம் சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளதாவது:

“தங்களது சுற்றறிக்கையில் கூறியுள்ள அம்சங்களை தேர்தல் ஆணையம் தீவிரமாக அமல்படுத்திட வேண்டும். தேர்தலை நேர்மையாகவும், வெளிப்படையாகவும் நடத்துவதற்கான எல்லாவித ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் மேற்கொள்ள வேண் டும். வேட்பாளர்கள் தங்கள் குறைபாடுகளை தெரிவிக்க உரிமை உண்டு. அவர்களின் புகார்கள் பற்றி சட்டப்படி பரிசீலித்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பா.ஜ.க. சார்பில் தெரிவிக்கப்படும் புகார்கள் பற்றி அக்கட்சி நிர்வாகிகளிடம் தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தி, அவர்களது புகார்களில் உண்மை இருந்தால் அது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x