இரக்கத்தின் வடிவம்

இரக்கத்தின் வடிவம்
Updated on
1 min read

உயிர் இரக்கமே மோட்ச வீட்டின் திறவுகோல் என வாழ்ந்துவந்த வள்ளலார் இராமலிங்கரின் சொற்பொழிவு வியாசர்பாடியில் நடைபெற்றுக்கொண்டிருந்தது. அவர் சொற்களெல்லாம் கோயில் மணியோசையின் தெளிவோடு வெளிப்பட்டுக் கொண்டிருந்தன. மாலையில் தொடங்கிய உரை இரவு பத்து மணிக்கு முடிந்தது.

கேட்டவர்கள் தன்னை மறந்த நிலையில் இருந்தார்கள். ஒவ்வொரு நிமிடமும் பயனுள்ளதாகக் கழிந்ததில் அனைவரும் மகிழ்ந்தனர். கூட்டம் முடிந்ததும் வள்ளலார் தன் அன்பர்களுடன் வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார். தெருவில் சில விளக்குகள் எரிந்தாலும் குறைவான வெளிச்சத்தில் பயணத்தைத் தொடர்ந்தார். அது செடி, கொடிகள் அடர்ந்த பாதை. திடீரென்று சாலையின் ஓரத்திலிருந்து “ உஸ்..உஸ்…” என்ற சத்தம் கேட்டது.

ஓர் அன்பர், “ ஐயோ பாம்பு…பாம்பு “ என அலறியடித்துக் கொண்டு ஓடத்தொடங்கினார். உடன் வந்த அனைவரும் திசைக்கு ஒருவராக ஓடினர். அவர்கள் எழுப்பிய பேரோசையைத் தொடர்ந்து இராமலிங்கர் வழியில் ஒரு நாகப்பாம்பு படம் எடுத்தபடி நின்றது. இராகலிங்கர் எந்தவித அச்சமும் இன்றி அந்தப் பாம்பின் ஒவ்வொரு அசைவையும் கனிவோடு பார்த்தபடி நின்று கொண்டிருந்தார்.

சீற்றத்துடன் வந்த அந்தப் பாம்பு இராமலிங்கரின் கால்களைச் சுற்றிக் கொண்டது. தொலைவில் இருந்த அன்பர்கள் செய்வது அறியாமல் திகைத்து நின்றுவிட்டனர்.

இராகலிங்கர் மெல்லக் குனிந்து “ நாகமே, நீ இங்கிருந்துச் சென்றுவிடு” எனக் கனிவாகச் சொன்னார். அன்பின் சுவை கலந்த அவரின் சொற்களைக் கேட்ட நாகம் மெல்ல அவர் கால்களை விட்டு நீங்கிச் சென்று மறைந்தது.

ஞானியின் பாதத்தைப் பூசிக்கும் மெய் அன்பரின் செயல்போல அக்காட்சி இருந்ததைக் கண்டு அனைவரும் மெய் சிலிர்த்து நின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in