வாழ்க்கைத் துணை தரும் விரதம்

வாழ்க்கைத் துணை தரும் விரதம்
Updated on
1 min read

பங்குனி உத்திரம் மார்ச்: 30

இந்துக்கள் அனுஷ்டிக்கும் முக்கியமான விரத நாட்களில் பங்குனி உத்திர தினமும் ஒன்று. பங்குனி உத்திரம் என்பது பங்குனி மாதத்தில் உத்திர நட்சத்திரத்தைக் குறிக்கிறது. இந்தத் தினத்தில் அனுஷ்டிக்கும் விரதத்தைத் திருமண விரதம் என்று சொல்வார்கள். இந்த ஆண்டுக்கான பங்குனி உத்திரம் நாளை (30-ம் தேதி) வருகிறது.

இத்தினத்தில் மேற்கொள்ளும் விரதம் மிகவும் விசேஷமானது. நீண்டநாள் ஒற்றுமையுடன் வாழ அருளைப் பெற நினைக்கும் தம்பதியர் விரதம் இருந்து சிவனுக்கும் சிவபார்வதிக்கும் அபிஷேகம் செய்வார்கள். தம்பதிகள் மட்டுமல்ல; திருமணமாகாதவர்களும் இந்த விரதத்தைக் கடைப்பிடிக்கலாம். அப்படிச் செய்தால், நல்ல வாழ்க்கைத் துணை கிடைப்பார் என்பது நம்பிக்கை.

குலதெய்வ வழிபாடு மேற்கொள்ள விரும்புபவர்களும் பங்குனி உத்திரம் அன்று மேற்கொள்ளலாம். குலதெய்வ வழிபாட்டுக்கு உகந்த நாளாகவும் பங்குனி உத்திரம் தினம் இருக்கிறது. இத்தினத்தில் குலதெய்வக் கோயில்களுக்குச் சென்று வழிபாடு செய்தால், குலம் சிறக்கும். மூதாதையரின் ஆசியும் கிடைக்கும். வீட்டில் பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் பிள்ளைகள் இருந்தால், கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்யலாம். இந்த வழிபாடு மூலம் நற்பலன்கள் கிடைக்கும் என்பதும் நம்பிக்கை.

பங்குனி உத்திர நாளில் பல சிறப்புகள் நடந்திருக்கின்றன. மகா லட்சுமி விரதம் இருந்து, மகா விஷ்ணுவின் திருமார்பில் இடம் பிடித்ததும் இந்தத் தினத்தில்தான். இந்திராணியைப் பிரிந்து வாழ்ந்த இந்திரன், மீண்டும் அவருடன் சேர்ந்ததும் இத்தினத்தில்தான்.

எனவே, நல்ல வாழ்க்கை கிடைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், விரதம் இருக்கலாம். மதியம் மட்டும் உணவை எடுத்துக்கொள்ளலாம். இந்த அளவு கடைப்பிடிக்க முடியாதவர்கள் காலையிலும் இரவிலும் பால், பழம் சாப்பிடலாம். அத்தோடு இத்தினத்தில் சிவபார்வதியின் திருநாமத்தை 108 முறை துதியாகச் சொல்லி வேண்டலாம். வழிபாட்டின்போது மாங்கனி வைத்து வழிபடலாம். இல்லையேல் தேன் கதலியோடு, தேனும் தினை மாவும் நெய்வேத்தியமாகப் படைத்து பூஜைக்குப் பின் அதைச் சாப்பிடலாம்.

இந்த விரதத்தை முருகனை வேண்டியும் செய்யலாம். அதோடு அன்னதானம், வஸ்திர தானம் செய்வதும் சிறப்பானது. ஜாதக தோஷத்தால் திருமணம் தடைபட்டவர்கள் வழிபாடு மேற்கொள்ளவும் சிறந்த நாள் இது. செவ்வாய் தோஷம் காரணமாகத் திருமணத் தடங்கலைச் சந்திப்பவர்கள் பங்குனி உத்திரத்தன்று முருகனை மனமுருகி வணங்கினால் திருமணத் தடைகள் நீங்கி, திருமணம் சுபமாக முடியும் என்பது ஐதீகம். மாலை வேளையில் கோயிலுக்குச் சென்று தீபம் ஏற்றியும் முருகனை வழிபடலாம். பொதுவாக அன்றைய தினத்தில் மேற்கொள்ளும் முருகன் வழிபாடு சகல வளங்களையும் வழங்கும்.

பங்குனி உத்திர நாளில் சிவாலயங்களிலும் அறுபடை வீடுகளிலும் திருமண வைபவங்கள் நடைபெறும். முருகன் கோயில்களில் காவடி ஆட்டங்களால் பக்தர்கள் பரவசம் அடைவார்கள். அன்றைய தினத்தில் இந்த வைபவங்களில் பங்கேற்றும் முருகனின் ஆசியைப் பெற்று அனுகூலமடையலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in