Last Updated : 05 Mar, 2018 10:22 AM

 

Published : 05 Mar 2018 10:22 AM
Last Updated : 05 Mar 2018 10:22 AM

ஜோதிடம் அறிவோம் 19 இதுதான்... இப்படித்தான்! பலம் சேர்க்கும் அம்மன் வழிபாடு!

புனர்பூ தோஷங்களைப் பார்த்தோம். அதற்கான பரிகாரங்களைப் பார்க்கலாம்.

புனர்பூ தோஷம் என்பது சனிபகவான் மற்றும் சந்திரபகவான் இணைவதால் ஏற்படும் தோஷம் என்பதை நாம் அறிவோம்.

சனிபகவான் ஒரு ராசியைக் கடக்க இரண்டரை ஆண்டுகள் ஆகும்.

அதேசமயம் சந்திரன் ஒரு ராசியைக் கடக்க வெறும் இரண்டே கால் நாட்கள் மட்டுமே ஆகும்.

சனி, ஈஸ்வரன் பட்டம் பெற்று “சனீஸ்வரன்” என்று அழைக்கப்படுகிறார் என்ற கதை விளக்கம் உண்டு, ஆனால் நான் அதற்குள் செல்லவில்லை,

உண்மையில் “சனை” என்றால் மெதுவாக என்று அர்த்தம்,

“சரம்” என்றால் வேகம் என்று பொருள். நகருதல் என்றும் அர்த்தம்.

எனவே இவரை “சனைச்சரம்” என்றுதான் அழைக்கப்பட்டார், இதுவே மருவி சனீஸ்வரன் என்று நிலைத்தது.

சனைச்சரம் என்றால் மெதுவாக நகர்பவர் என அர்த்தம் ஆகும்.

ஆனால் சந்திரன் “ மன காரகன்” மனம் என்பது எவ்வளவு வேகமானது என்பதை நான் சொல்லத்தேவையில்லை. நீங்களே அறிந்ததுதான்.

இப்போது உங்களுக்கேப் புரிந்திருக்கும்,

இரட்டை மாட்டு வண்டியில் ஒருமாடு வேகமானதாகவும், மற்றொரு மாடு மெதுவானதாகவும் இருந்தால் வேலைக்கு ஆகுமா?

அதுபோலத்தான் இந்தக் கிரக இணைவு.

மனம், எண்ணம் வேகமாக இருக்கும், ஆனால் உடல் ஒத்துழைக்காது.

அதாவது இரவு படுப்பதற்க்குமுன் “நாளைக்கு நேரமா எந்திரிக்கனும். 7 மணிக்கெல்லாம் அவரை பார்த்துவிட்டு, 9 மணிக்கெல்லாம் EB பில் கட்டிட்டு, 10 மணிக்கு ஆபீஸ் போயிரனும்”

என்றெல்லாம் பிளான்பண்ணி , காலையில எந்திரிக்கிறதே 8 மணியாத்தான் இருக்கும். மொத்த பிளானும் காலி!

இதுதான் ஐயா நிதர்சனம். இதைப் பரிகாரங்களால் மட்டுமே நிவர்த்தி செய்ய முடியாது.

உங்கள் பழக்கவழக்கத்தால் மட்டுமே மாற்றியமைக்க முடியும்.

மிக முக்கியமாக “ தியானம் பெருமளவு மாற்றத்தை ஏற்படுத்தும்.”

என்னால் தியானத்தில் அமர முடியவில்லை, அமர்ந்தாலும் ஏதேதோ கற்பனைகள் ஓடுகிறது, என்பவர்களுக்கு...

“தியானத்தில் அமர்ந்து ஏதாவது ஒரு மந்திரத்தை உச்சரிக்கிறீர்களா? ஆம் என்றால் இனி எந்த மந்திர உச்சாடனமும் செய்யாதீர்கள்.

“ கண்களை மூடி உங்கள் கவனத்தை உங்கள் மூக்கு நுனியை மட்டும் கவனியுங்கள், அதாவது எந்த மூக்கின் வழியாக (வலதா,இடதா) சுவாசம் நடைபெறுகிறது என்பதை மட்டும் கவனியுங்கள்”

சத்தியம் செய்கிறேன்... அதிகபட்சம் 15 நாட்களில் உங்கள் தியானத்தில் எந்தக் கற்பனைகளும், எண்ணங்களும் மனம் அலைபாயும் செயல்களும் வரவே வராது.

மனம் ஒருமுகப்படும். இப்போது உங்களுக்குப் பிடித்த மந்திரத்தை மனதால் உச்சாடனம் செய்யுங்கள். அனைத்தும் உங்கள் வசப்படும்.

இதுவே சித்தர்கள் சொன்ன ரகசியம்.

சரி இப்போது ஆலயப் பரிகாரங்களை பார்க்கலாம்,

திருமலையில் உள்ள சீனிவாசபெருமாள் சனி அம்சம் என கருதப்படுபவர், அதேசமயம் அந்த திருமலை சந்திர ஸ்தலம் என்று போற்றப்படுகிறது.

எனவே வளர்பிறை காலத்தில் திங்கட்கிழமை அன்று இரவு முழுவதும், அல்லது பௌர்ணமி நாளில் இரவு முழுவதும் திறந்தவெளியில் இருந்து பெருமாளை தரிசனம் செய்துவிட்டு வாருங்கள்,

அதன் பிறகு ஏற்படும் அற்புதத்தைப் பாருங்கள்.

திருமலையில் ஶ்ரீவராகசாமி ஆலயம் திருக்குளத்திற்கு அருகே உள்ளது. அவரையும் தரிசித்து விட்டு, குளத்தில் உள்ள மூன்றாவது படியில் அமர்ந்து சிறிது நேரம் தியானம் செய்யுங்கள், நீங்கள் கேட்டதெல்லாம் கிடைக்கும்,

ஏன் அந்த படி?

அங்கே கொங்கணர் சித்தர் உள்ளார். ரசவாதம் அறிந்தவர். மக்கள் வறுமையில்லாமல் இருக்கவேண்டும் என்று ஒரு மலையையே தங்கமாக மாற்ற முயன்றவர். அந்த முயற்சி ஆரம்பிக்கும் போதே சிவனால் தடுக்கப்பட்டு திருமலைக்கு அனுப்பப்பட்டவர். அவர் அங்கே ஜீவசமாதி ஆனவர்.

இப்போது புரிகிறதா! ஏன் திருப்பதி சென்று வந்தால் திருப்பம் ஏற்படுகிறதென்று?

சரி திருப்பதி சென்று வருகிறோம். வேறு ஏதாவது பரிகாரம் உண்டா? உண்டு.

சனி சந்திரன் சேர்க்கை என்பது மன உறுதியைக் குலைக்கும், எனவே காலை சூரியோதயத்தில் அதிலும் அருணோதயத்தில்( சூரிய பகவானின் தேரோட்டி அருணன் ஆவார், சூரிய உதயத்திற்கு முன்பு தேரோட்டியான அருணனே முதலில் தோன்றுவார்) ஆதித்யஹிருதயம் படிக்கவோ அல்லது கேட்கவோ செய்யுங்கள். அது மன உறுதியைக் கொடுக்கும். எடுக்கின்ற முயற்சியில் தெளிவும் வெற்றியும் கிடைக்கும்.

ஶ்ரீஅனுமனுக்கு வெண்ணெய் சாற்றி வழிபட மன உறுதி கிடைக்கும்.

சக்திவடிவான அம்மன் ஆலயங்களில் தொடர்ந்து வழிபாடு செய்ய நல்ல பலன் கிடைக்கும்,

ஐயப்பனுக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் செய்து வழிபட நல்லது நடக்கும்.

எல்லை மற்றும் காவல் தெய்வங்களான அதிலும் பெண் தெய்வங்களை வழிபட அற்புதமானப் பலன்கள் கிடைக்கும் ( திரௌபதி அம்மன், மாரியம்மன், மாகாளி போன்ற தெய்வங்கள்).

இன்னும் சில..

மாற்றுதிறானாளிகளுக்கு முடிந்தவரை உதவுங்கள். வசதி இருந்தால் மூன்றுசக்கர வாகனம், ஊன்றுகோல், இன்னபிற வசதிகளை செய்து தாருங்கள்.

ஆன்மிக நடைப்பயணம் செல்பவர்களுக்கு வசதிகளைச் செய்து தாருங்கள். தண்ணீர் பந்தல், நீர்மோர் வழங்குதல் போன்ற தானங்களைச் செய்யுங்கள்; வாழ்க்கை சிறப்பாகும்.

இன்னும் சில தோஷங்கள், பரிகாரங்களை அடுத்தடுத்து பார்ப்போம்.

- தெளிவோம்

(இதன் அடுத்த அத்தியாயம் 7.3.18 அன்று வெளியாகும்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x