

‘அ
ம்மே சரணம் தேவீ சரணம்’ என்னும் சரணகோஷம் அம்மனிடம் நம்மை அழைத்துச் செல்லும் குமரி மாவட்ட மண்டைக்காட்டு அம்மன் கோயில் பெண்களின் சபரிமலையாகக் கருதப்படுகிறது.
விளவங்கோடு வட்டம் குளச்சல் துறைமுகத்திலிருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவில் மண்டைக்காடு அருள்மிகு பகவதி அம்மன் கோயில் அமைந்துள்ளது.
மண்டைக்காடு வனமாக இருந்த காலத்தில் இவ்விடத்தில் ஒரு தெய்விக ஒளிவீசுவதைக் கண்ட சித்தர் ஒருவர், அவ்விடத்தில் அமர்ந்து ஸ்ரீசக்கரம் வரைந்து தவம் செய்தார். பின்னர், அந்த இடத்திலிருந்து மறைந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. ஸ்ரீசக்கரம் வரைந்த இடத்தில் புற்று ஒன்று வளர்ந்தது. அதை மாடுமேய்க்கும் சிறுவர்கள் உடைத்தபோது அதிலிருந்து ரத்தம் வழிந்தது. அச்செய்தி அறிந்த மக்கள் அங்கே கோயில் கட்டி வழிபடத் தொடங்கினர்.
ஆரம்ப காலத்தில் ஓலைக்கூரையாக இருந்த கருவறை பிற்காலத்தில் கட்டிடமாகக் கட்டப்பட்டது.1805-ல் திருவிதாங்கூர் திவானாக இருந்த வேலுத்தம்பி தளவாய் இக்கோயிலை அரசுடைமையாக்கினார். கேரள பாணியில் அமைந்த இக்கோயிலில் கொடிமரம், கருவறை, நமஸ்கார மண்டபம் ஆகியவை அழகுற அமைந்துள்ளன. கருவறையில் காணப்படும் மண் புற்றே பகவதி தேவியாகும். இது ஒவ்வொரு நாளும் வளர்ந்து வருகிறது என்பதால் சந்தனக் காப்பு செய்து அம்மனை வடக்கு நோக்கி ஸ்தாபித்தபின் வளர்ச்சி நின்றது என்பது ஐதீகம். கருவறைக்கு வடகிழக்கில் ஒரு விநாயகர் கோயில் உள்ளது.
மாசி மாதத்தில் நடைபெறும் 10 நாள் கொடை விழா மிகவும் பிரசித்தி பெற்றது. மாசித் திருவிழா மாசி மாதம் கடைசிச் செவ்வாய்க்கிழமை நிறைவடையும் வகையில் பத்து தினங்களுக்குமுன் காடேற்று விழாவுடன் ஆரம்பிக்கும். ஆறாம் திருவிழாவான வெள்ளிக்கிழமையன்று வலியபடுக்கை என்னும் மகா பூஜை இரவு 12.00 மணிக்கு நடக்கும்.
பத்தாம் திருவிழாவான செவ்வாய்க்கிழமை ஒடுக்கு பூஜை அன்று, பக்கத்திலுள்ள சாஸ்தா கோயிலில் தயாரிக்கப்பட்ட பருப்பு உட்பட்ட 11 வகை கறிக் குழம்புகள், சோறு ஆகியவற்றை 11 பானைகளில் கோயில் பூசாரிகள் 11 பேர் தலையில் சுமந்து வந்து கோயிலின் கருவறையில் வைப்பார்கள்.
மார்ச் மாதம் 4-ம் தேதி முதல் மார்ச் 13 வரை கொடை விழாவுடன் மாசித் திருவிழா நடைபெற்றது.