Last Updated : 21 Mar, 2018 06:18 PM

 

Published : 21 Mar 2018 06:18 PM
Last Updated : 21 Mar 2018 06:18 PM

கல்லெறிந்த கைகள் குருத்தோலை தாங்கின

குருத்தோலை ஞாயிறு - மார்ச் 25

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு யூதேயா தேசத்தின் தலைநகரமாக இருந்தது எருசலேம். அதன் அருகில் யோர்தான் நதியின் அக்கரையில் இருந்த ஒரு கிராமத்தின் பெயர் பெத்தானியா. அது இயேசுவுக்கு மிகவும் பிடித்த கிராமம். காரணம் அங்கேதான் இயேசுவின் அன்புக்குப் பாத்திரமான லாசர் என்பவரும் அவருடைய இரு சகோதரிகளான மார்த்தாள், மரியாள் ஆகியோரும் வசித்துவந்தனர். இவர்கள் இயேசுவின் போதனைகளை ஏற்று அவரை மெசியா என்று நம்பினார்கள்.

இயேசு பெத்தானியா வழியே செல்லும்போதெல்லாம், அவரையும் சீடர்களையும் வரவேற்று, தங்கள் இல்லத்துக்கு அழைத்துச் சென்று உபசரிப்பதை லாசரின் குடும்பம் பெரிய மகிழ்ச்சியுடன் செய்துவந்தது. லாசரின் அன்பைக் கண்ட இயேசு அவரைத் தன் நண்பனாகக் கருதினார். அப்படிப்பட்ட லாசர் நோய்வாய்ப்பட்டு இறந்துபோனார்.

அப்போது இயேசு தூரத்தில் இருந்த சமாரியாவில் போதித்துக்கொண்டிருந்தார். ஆனால், லாசர் நோயால் அவதிப்பட்டுக்கொண்டிருக்கும்போதே அவருடைய சகோதரிகள் இயேசுவுக்கு ஆள் அனுப்பி. “ எஜமானே, உங்கள் பாசத்துக்குரிய நண்பன் வியாதியால் கஷ்டப்பட்டுக்கொண்டு இருக்கிறான்” என்று தகவல் அனுப்பினார்கள்.

இயேசு விரைந்துவந்து தங்கள் சகோதரனை நோயிலிருந்து மீட்டெடுப்பார் என்று அந்தச் சகோதரிகள் நம்பினார்கள். ஆனால், அவர்கள் அனுப்பிய செய்தியைக்கேட்ட இயேசு, “இந்த நோயின் முடிவு இறப்பு அல்ல, நம் தந்தைக்கு மகிமைதான் உண்டாகும்; இதன் மூலம் தந்தைக்கு மகனுக்கும் இடையிலான உறவின் மகிமை இவ்வுலகுக்குப் புலப்படும்” என்றார். லாசர் கவலைக்கிடமாக இருக்கிறார் எனத் தகவல் கிடைத்தும் உடனே செல்லாமல் மேலும் இருதினங்கள் அங்கேயே போதித்துக்கொண்டிருந்தார்.

கல்லெறிந்த ஊருக்குப் போகவேண்டாம்

அதன் பின்னர் அவர் தன் சீடர்களிடம், “ வாருங்கள் மீண்டும் யூதேயாவுக்குப் போகலாம்” என்றார். அதற்குச் சீடர்கள், “ரபீ சமீபத்தில்தானே யூதேயா மக்கள் உங்களைக் கல்லெறிந்து கொல்லப் பார்த்தார்கள், மறுபடியுமா அங்கே போகப் போகிறீர்கள்?” என்று ஆச்சரியத்தோடு கேட்டார்கள். அதற்கு அவர் “நம்முடைய நண்பன் லாசர் இறந்துவிட்டான்.” என்று அவர்களிடம் வெளிப்படையாகவே சொன்னார்.

இயேசு பெத்தானியா போய்ச் சேர்ந்தபோது, லாசரின் உடல் கல்லறையில் வைக்கப்பட்டு ஏற்கெனவே நான்கு நாட்கள் ஆகியிருந்தன. ஆனால், ஊருக்குள் செல்லாமல் இயேசு ஒரு மரநிழலின் கீழ் சீடர்களோடு அமர்ந்திருந்தார்.

இயேசு வந்துவிட்டதைக் கேள்விப்பட்டபோது அவரைச் சந்திக்க மார்த்தாள் விரைந்து போனாள். ஆனால், துக்கம் கேட்க வந்திருந்தவர்களுக்காக மரியாள் வீட்டிலேயே உட்கார்ந்திருந்தாள். மார்த்தாள் இயேசுவை நெருங்கி அழுகையை அடக்கமுடியாமல், “எஜமானே, நீங்கள் இங்கே இருந்திருந்தால் என் சகோதரன் இறந்திருக்க மாட்டான். ஆனாலும், நீங்கள் கடவுளிடம் எதைக் கேட்டாலும் அவர் உங்களுக்குத் தருவாரென்று இப்போதும் நம்புகிறேன்” என்று சொன்னாள். இயேசு அவளிடம், “உன் சகோதரன் எழுந்திருப்பான்” என்று சொன்னார்.

அதற்கு மார்த்தாள், “கடைசி நாளில் உயிர்த்தெழுதல் நடக்கும்போது அவன் உயிரோடு வருவான் என்று எனக்குத் தெரியும்” என்று சொன்னாள். அப்போது இயேசு, “நானே உயிர்த்தெழுதலும் வாழ்வுமாக இருக்கிறேன். என்மேல் விசுவாசம் வைக்கிறவன் இறந்தாலும் உயிர்பெறுவான். உயிரோடிருந்து என்மேல் விசுவாசம் வைக்கிற யாரும் இறந்துபோகவே மாட்டார்கள். இதை நம்புகிறாயா?” என்று கேட்டார். அதற்கு அவள், “ ஆமாம், எஜமானே. நீங்கள்தான் கடவுளுடைய மகனாகிய கிறிஸ்து, நீங்கள்தான் இந்த உலகத்துக்கு வரவேண்டியவர் என்பதை நம்புகிறேன்” என்று சொன்னாள். உடனே விரைந்து சென்ற மார்த்தாள் மரியாளை அழைத்து வந்தாள்.

கண்ணீர் சிந்திய இயேசு

இயேசு இருந்த இடத்துக்கு மரியாள் வந்து, அவரைப் பார்த்ததும் அவருடைய காலில் விழுந்து, “எஜமானே, நீங்கள் இங்கே இருந்திருந்தால் என் சகோதரன் இறந்திருக்க மாட்டான்” என்று கதறி அழுதாள். அவள் அழுவதையும் அவளோடு வந்த யூதர்கள் அழுவதையும் இயேசு பார்த்தபோது உள்ளம் குமுறினார், மனம் கலங்கினார். “அவனை எங்கே வைத்திருக்கிறீர்கள்?” என்று கேட்டார்.

அதற்கு அவர்கள், “எஜமானே, வந்து பாருங்கள்” என்று அழைத்துப் போனார்கள். அப்போது இயேசு கண்ணீர்விட்டு அழுதார். அதனால் யூதர்கள், “பாருங்கள், அவன்மேல் இவருக்கு எவ்வளவு பாசம்!” என்று பேசிக்கொண்டார்கள். ஆனால் அவர்களில் வேறு சிலர், “குருடனுடைய கண்களைத் திறந்த இவரால் லாசரின் சாவைத் தடுக்க முடியவில்லையா?” என்று கேட்டார்கள்.

லாசர் அடக்கம் செய்யப்பட்டிருந்த குடவரைக் கல்லறை கல்லால் மூடப்பட்டிருந்தது. “இந்தக் கல்லை எடுத்துப் போடுங்கள்” என்று இயேசு சொன்னார். அப்போது மார்த்தாள் இயேசுவிடம் “எஜமானே, அடக்கம் செய்து நான்கு நாட்கள் ஆகிவிட்டன, துர்நாற்றம் அடிக்குமே?” என்று சொன்னாள். அதற்கு இயேசு, “நீ நம்பிக்கை வைத்தால் தந்தையின் மகிமையைப் பார்ப்பாய் என்று உனக்குச் சொன்னேன், இல்லையா?” என்று கேட்டார்.

இயேசு கூறியபடி கல்லை எடுத்துப் போட்டார்கள். அதன்பின், இயேசு வானத்தை அண்ணாந்து பார்த்து, “தந்தையே என் ஜெபத்தைக் கேட்டதற்காக உங்களுக்கு நன்றி சொல்கிறேன்.” அப்படிக் கூறிய பின்பு, “லாசருவே, வெளியே வா!” என்று சத்தமாகக் கூப்பிட்டார். அப்போது, இறந்தவன் உயிரோடு வெளியே வந்தான்; அவனுடைய கால்களும் கைகளும் துணிகளால் சுற்றப்பட்டிருந்தன. முகத்திலும் ஒரு துணி சுற்றப்பட்டிருந்தது.

இயேசு அவர்களிடம், “இவனுடைய கட்டுகளை அவிழ்த்துவிடுங்கள், இவன் போகட்டும்” என்று சொன்னார். அவ்வாறே செய்தார்கள். இறந்த லாசர் எழுந்தான், இயேசுவைக் கண்டு கட்டி அணைத்துக்கொண்டான். சகோதரிகளைக் கண்டு ஆனந்தக் கண்ணீர் வடித்தான்.

வெகுண்டு எழுந்த மதவாதிகள்

மரியாளைக் கண்டு துக்கம் கேட்க வந்திருந்த யூதர்கள் நிறையப் பேர் இயேசு செய்ததைக் கண்டு அவர்மேல் நம்பிக்கை வைத்தார்கள். ஆனால், இயேசுவின் மீது அவருடைய சீடர்கள் மீது முன்பு கல்லெறிந்து கொல்ல முயன்ற கூலிக் கூட்டத்தினரில் சிலர் பரிசேயர்களிடம் போய், இயேசு இறந்துபோன லாசரை உயிரோடு எழுப்பியது பற்றிச் சொன்னார்கள். இதனால் முதன்மை குருமார்களும் பரிசேயர்களும் நியாய சங்கத்தைக் கூட்டி, இயேசுவைக் கொல்வதற்குத் திட்டம் தீட்டத் தொடங்கினர்.

இயேசுவைத் தேடிய மக்கள்

லாசர் உயிரோடு நடமாடுவதைக் காண மக்கள் கூட்டம் கூட்டமாக வந்துசென்றார்கள். இதனால் லாசரைக் கொன்று இயேசுவுக்குக் களங்கம் கற்பிக்க மதவாதிகள் திட்டமிட்டார்கள். இயேசுவை யாராவது கண்டால் உடனே நியாயச் சங்கத்தாரிடம் தெரிவிக்க வேண்டும் என்று அவர்கள் கட்டளை பிறப்பித்து இருந்தார்கள். இயேசு யூதர்கள் மத்தியில் வெளிப்படையாக நடமாடாமல் பெத்தானியாவிலிருந்து புறப்பட்டுச் சென்று எப்பிராயீம் என்ற நகரத்தில் தன் சீடர்களோடு தங்கி போதித்துவந்தார்.

அப்போது யூதர்களுடைய புனிதப் பண்டிகையான பாஸ்கா நெருங்கிக்கொண்டிருந்தது. தூய்மைச் சடங்கு செய்துகொள்வதற்காகக் கிராமப்புறத்திலிருந்து நிறையப் பேர் பாஸ்காவுக்கு முன்பே தேவாலயம் அமைந்திருந்த எருசலேமுக்குப் போனார்கள். அங்கே அவர்கள் இயேசுவைத் தேடினார்கள். இயேசுவைக் காண மாட்டோமா என்று ஏங்கினார்கள். இயேசுவை எங்கே பார்க்கலாம் என்று கிராமவாசிகள் விசாரிக்கத் தொடங்கினார்கள். இது மதவாதிகளை மேலும் எரிச்சல் அடையச் செய்தது. “அவர் பாஸ்கா பண்டிகைக்கு எருசலேமுக்கு வர மாட்டாரா, நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” என்று பரஸ்பரம் கேட்டுக்கொண்டார்கள்.

இயேசுவின் பவனி

பாஸ்கா பண்டிகைக்கு ஏழு நாட்களுக்கு முன்பு மீண்டும் இயேசு எருசலேம் நகரத்துக்குள் வந்தார். அது நிசான் மாதத்தின் 9-⁠ம் நாள் ஞாயிற்றுக்கிழமை. இயேசு எருசலேமுக்குப் பவனி வருகிறார். தீர்க்கதரிசி சகரியா புத்தகத்தின் 9:9-⁠ல் ‘சீயோன் மகளே, சந்தோஷத்தில் துள்ளு! எருசலேம் மகளே, வெற்றி முழக்கம் செய்! இதோ உன் ராஜா உன்னிடம் வருகிறார்! அவர் நீதியுள்ளவர்; மீட்பு தருகிறவர். அவர் தாழ்மையுள்ளவர்; அவர் கழுதைக் குட்டியின் மேல் ஏறிவருகிறார்.’ என்று கூறப்பட்டிருக்கும் வசனங்கள் நிறைவேறும்படியாக இயேசு, ஒரு கழுதைக் குட்டியின் மீது ஏறி எருசலேமுக்குள் வந்தார்.

நகரத்தை அவர் நெருங்குகையில் அவரைச் சுற்றி கூடிவந்த திரளான மக்களில் பெரும்பான்மையர் தங்கள் மேல் அங்கிகளையும் துப்பட்டிகளையும் பாதையில் விரித்தார்கள். பலர் ஒலிவ மரக்கிளைகளை வெட்டி அவற்றைத் தரையில் பரப்பினார்கள். இன்னும் சிலர் பலர் அவற்றைக் கைகளில் ஏந்திக்கொண்டு “கடவுளின் பெயரால் வருகிறவராகிய ராஜா ஆசீர்வதிக்கப்பட்டவர்” என்று கூறி ஆர்ப்பரித்தார்கள்.

சில வாரங்களுக்கு முன்பு இறந்த லாசரை, இயேசு உயிருடன் எழுப்பியதை அந்தக் கூட்டத்திலிருந்த பலர் கண்டிருந்தார்கள். அப்போதிலிருந்து இவர்கள் அந்த அற்புதத்தைப் பற்றி மற்றவர்களிடம் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். அதனால் இயேசு எருசலேமுக்குள் நுழைந்தபோது முழு நகரமும் இயேசுவை வரவேற்கும் பேரணியால் நிறைந்தது.

முன்பு மதவாதிகளின் கூலிகளாக இயேசுவின் மீது கல்லெறிந்து கொல்லத் துரத்தியவர்கள், இப்போது மனமாற்றம் பெற்றவர்களாகக் கைகளில் ஒலிவ மரக் கிளைகளுடன் இயேசுவை வரவேற்கிறார்கள். கல்லெறிந்த கைகள் இப்போது குருத்தோலை தாங்கிச் சென்றன.“இதோ, உலகமே அவனுக்குப் பின்சென்று போயிற்றே (மத்தேயு 21:10)” என்று புலம்பிக்கொண்டிருந்தனர் மதத்தின் பெயரால் வயிறு வளர்த்துக்கொண்டிருந்தவர்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x