ஜோதிடம் அறிவோம்! 21 -இதுதான் இப்படித்தான்! புத்திர தோஷம்... ஏன்? எதனால்?

ஜோதிடம் அறிவோம்! 21 -இதுதான் இப்படித்தான்!
 புத்திர தோஷம்... ஏன்? எதனால்?
Updated on
2 min read

இதுவரை பல விதமான தோஷங்களைப் பார்த்தோம்.

இப்போது நாம் பார்க்கப் போவது ‘புத்திரதோஷம்’. ‘சந்ததி விருத்தி’என்று தலைமுறை என்றும் பரம்பரை என்றும் பெருமைபடச் சொல்வார்கள். இந்த சந்தான பாக்கியம் குறித்தும் அந்த தோஷம் தொடர்பாகவும் கொஞ்சம் அலசுவோம்; ஆராய்வோம்!

இந்தத் தொடரின் ஆரம்பத்திலேயே ஒரு விஷயத்தைக் கூறினேன்.

அதாவது, இந்தத் தொடரின் நோக்கமே இந்தத் தோஷங்களைக் காட்டி உங்கள் பணத்தையும் நேரத்தையும் விரயம் செய்வது அல்ல! உங்களுக்கு மன ரீதியாக உளைச்சலை ஏற்படுத்தி நிம்மதியைக் கெடுத்துக் கொண்டிருக்கிற இந்த தோஷங்கள் எல்லாமே “கடந்து போகும்” என்று உங்களுக்கு உற்சாகத்தையும், விழிப்பு உணர்வையும் ஏற்படுத்துவதே தொடரின் நோக்கம்.

புத்திரதோஷம் பற்றி பார்ப்பதற்கு முன்னதாக, உங்களிடம் ஜோதிடம் சம்பந்தமாக சில தகவல்களை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

மருத்துவம் அந்தக் காலத்திலேயே இருந்து வந்தது. ஆங்கில மருத்துவம் என்பது நடுவே வந்தது. சொல்லப்போனால், சில நூற்றாண்டுகளுக்குள் வந்த விஷயம்.

அப்போது, அதாவது அந்தக் காலத்தில் மருத்துவரே ஜோதிடராகவும், ஜோதிடரே மருத்துவராகவும் இருந்தார்கள்.

ஒருவரின் நாடி பிடித்து நோயின் தன்மை, பாதிப்பின் அளவு, தீர்வு என்ன? என அனைத்தும் அறிந்து கொள்வார்,

அதற்குமுன் அவரின் ஜாதகத்தை பார்த்து நோயின் தன்மை, நோய் தீரும் காலம் என அனைத்தையும் சொன்னார்கள். அதுவும் எப்படித் தெரியுமா? திசா புத்தி, கோச்சாரம் பார்த்து முடிவு செய்தார்கள்.

சரி... அதுக்கு இப்போ என்ன? என்கிறீர்களா?

இப்போதும் அதேபோல் ஜாதகத்தை ஆராய்ந்து நோயின் தன்மை, அது தீரும் காலம் முதலானவற்றை நிர்ணயம் செய்ய முடியும்,

சரி... புத்திரதோஷத்திற்கும் இதற்கும் என்ன சம்பந்தம்? உண்மையில் புத்திர பாக்கியம் உண்டாக ஆண்,பெண் இருவர் உடற்கூறும் சரியாக இருக்க வேண்டும்.

இருவரில் ஒருவருக்கு பாதிப்பு என்றாலும் குழந்தை உருவாக தடையோ, தாமதமோ ஏற்படும்,

இதை மருத்துவ ஆலோசனை பெறுவதற்கு முன்பே எப்படிக் கண்டுபிடிப்பது?

எளிமையாகவும் உங்களுக்குப் புரியும்படியாகவும், என்ன மாதிரியான பரிகாரங்கள் என்பதையும் விரிவாகப் பார்க்கலாம்.

முதலில் “புத்திரதோஷம்”என்பது என்ன?

எந்த மாதிரியான பாதிப்புகளை கிரகங்கள் செய்கின்றன?

அதற்கு விலக்கு உண்டா? அப்படியெனில் என்ன?

1) ஆண் ஜாதகத்தில் 5 ஆம் பாவகம்

பெண் ஜாதகத்தில் 9 ஆம் பாவகம் புத்திர பாக்கியத்தைக் காட்டும்.

2) குரு பகவான் புத்திர பாக்கியத்தை தருபவர். அவர் நிலை என்ன என்பதும் பார்க்கப்பட வேண்டும்.

3) ஐந்தாம் பாவக அதிபதி நிலை என்ன என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.

4) உயிர் ஜனனம் என்னும் ஆன்ம காரகன் சூரியன் நிலை கவனிக்கப்பட வேண்டும்.

5) ஊழ்வினை காரணமாக நாம் பிறப்பெடுக்கக் காரணமான ராகுகேது என்ன செய்கிறார்கள் என்பதையும் பார்க்கவேண்டும்.

6) ஆணின் உயிர் உற்பத்தியான விந்து, பெண்ணின் கருமுட்டை இவற்றின் காரகமான சுக்கிரன் என்ன ஆனார் என கவனமாகப் பார்க்க வேண்டும்.

7) வேகம், வீரியத்திற்கு காரணமான செவ்வாயின் நிலை கவனிக்கப்பட வேண்டும்.

8) உடல் தகுதியைக் காட்டும் சந்திரனையும் பார்க்கவேண்டும்.

9) இவை அனைத்தும் மட்டுமின்றி நவாம்சம் என்னும் அம்ச கட்டத்தையும் ஆராய வேண்டும்.

இதெல்லாம் எங்களுக்கு எப்படித் தெரியும்? நாங்கள் என்ன ஜோதிடமா படித்திருக்கிறோம்? என்பவர்களுக்கு...

நான் இங்கே ஜோதிடம் கற்றுக்கொடுக்க வரவில்லை. உங்களை கற்றுக் கொள்ளச் சொல்லவுமில்லை.

உங்கள் குழப்பங்களுக்கு எளிமையாக, புரியும்படியாக, தெளிவு பெறும் வகையில் விவரிக்கப் போகிறேன்.

எளிமையான பரிகாரங்கள் மூலம் உங்கள் பிரச்சினை தீர அதற்கு உரிய தெய்வங்களை உணர்த்தப் போகிறேன். அவ்வளவுதான்!

“நோய்நாடி நோய் முதல்நாடி” என்றொரு புகழ்பெற்ற வாசகம் உண்டு.

நோய்நாடி - அதாவது மருத்துவரைப் பார்ப்பது.

நோய் முதல்நாடி - அதற்கு முன்னதாக ஜோதிடரைப் பார்ப்பது.

என்ன... பார்ப்போமா?

-தெளிவோம்

இதன் அடுத்த அத்தியாயம் வரும் 14.3.18 புதன்கிழமை அன்று வெளியாகும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in