Last Updated : 29 Mar, 2018 12:33 PM

 

Published : 29 Mar 2018 12:33 PM
Last Updated : 29 Mar 2018 12:33 PM

மயிலையின் தீர்த்தமும் விசேஷம்! அறுபத்து மூவர் விழா அற்புதம்!

மயிலையின் அழகு கபாலீஸ்வரர் கோயில். அந்தக் கோயில் பகுதியையே அழகாக்குவது... அந்தத் திருக்குளம். பிரசித்தி மிக்க கோயிலின் தீர்த்தப் பெருமை வியக்க வைக்கிறது.

மயிலாப்பூரில் அறுபத்து மூவர் விழா நடைபெறும் இன்றைய நாளில்... (29.3.18) அந்தத் தீர்த்தத்தின் பெருமையையும் உணர்ந்து, தரிசிப்போம்.

அந்தக் காலத்தில்... துறைமுகப் பட்டினமாக திகழ்ந்தது மயிலை கிராமம். மூன்று முறை கடல் பொங்கி, பெரும் நிலப்பகுதியை விழுங்கியதால், மயிலையின் பரப்பளவு சுருங்கியதாகச் சொல்வார்கள் ஆய்வாளர்கள்.

புராதனப் பெருமை கொண்ட ஸ்ரீகபாலீஸ்வரர் கோயில், சாந்தோம் கடற்கரை அருகில் இருந்தது. அருணகிரி நாதர் தனது திருப்புகழில் ‘கடலக் கரை திரையருகே சூழ் மயிலைப்பதிதனில் உறைவோனே’ என்று பாடிப் புகழ்கிறார்.

எனவே அருணகிரிநாதர் காலத்தில், கோயிலானது கடற்கரைக்கு அருகிலேயே இருந்திருக்க வேண்டும் என அறிய முடிகிறது.

‘பிற்காலத்தில், இந்தக் கோயில் போர்ச்சுகீசியர்களால் அழிக்கப்பட்டது என சரித்திர ஆய்வாளர்கள் குறிப்பு எழுதியுள்ளனர். இதற்கு சாட்சியாக, கோயில் சம்பந்தப்பட்ட பல பகுதிகளும் பொருட்களும் சாந்தோம் கடற்கரையில் இந்தியத் தொல்பொருள் துறை ஆய்வாளர்களால் கண்டறியப்பட்டன!

தற்போது கோயில் இருக் கும் இடத்தில் முன்பு அருள் பாலித்தது ஸ்ரீசிங்காரவேலர் மட்டுமே என்றும் சொல்வார்கள். இதற்குச் சான்றாக கபாலீஸ்வரரின் கருவறை விமானத்தை விட சிங்காரவேலரின் கருவறை விமானம் சற்றே உயரமாக இருப்பதை இன்றைக்கும் காணலாம்!

தற்போதுள்ள ஸ்ரீகபாலீஸ்வரர் கோயில், சுமார் 300 வருடங்களுக்கு முந்தையது என்று சொல்வர். வள்ளல் நைனியப்ப முதலியாரின் மகன் முத்தியப்ப முதலியார். கோயிலுக்கு திருப்பணிகள் பல செய்து, எழுப்பித் தந்ததாகச் சொல்கிறது ஸ்தல வரலாறு. சிவபெருமான் மீது கொண்ட பக்தியால், கோயிலையும் அருகில் உள்ள கபாலி தீர்த்தக் குளத்தையும் அமைத்தார்.

இதில் ஒரு சுவாரஸ்யம்... கோயிலுக்கு அருகே திருக்குளம் ஒன்றை அமைக்க விரும்பினார் முதலியார். இதற்கான நிலத்தை அப்போது இந்தப் பகுதியை ஆண்டு வந்த நவாப் ஒருவர், சில நிபந்தனைகளின் பேரில் அளித்தார். அவற்றை ஏற்ற முதலியார், மூன்றே நாட்களுக்குள் இந்தத் திருக்குளத்தை அமைத்தாராம். நவாபின் நிபந்தனைகள் இன்றும் அனுசரிக்கப்படுவதாக, ‘மயிலை கற்பகம்’ எனும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கலிங்க தேச அரசன் தருமனின் மகன் சாம்பவன் என்பவன், தனது பெரும் பாவங்கள் தீர இங்கு வந்து, பங்குனி உத்திரத்தன்று இந்தத் தீர்த்தத்தில் நீராடி, ஸ்ரீகபாலீஸ்வரரை வணங்கி, முக்தி அடைந்ததாக தல புராணம் விவரிக்கிறது. ‘இந்தக் குளம் உட்பட மயிலையின் பிற தீர்த்தங்களிலும் நீராடினால், இம்மையிலும் மறுமையிலும் நன்மை பெறலாம்!’ என்கிறது ‘தீர்த்தச் சருக்கம்’ எனும் நூல்.

குளமும் நடுவே உள்ள நீராழி மண்டபமும் கொள்ளை அழகு. குளத்தின் மேற்குக் கரையில், எட்டுக்கால் மண்டபம் அருகில் ஜ்யேஷ்டாதேவியின் சிலை உள்ளது. குளத்தின் வடமேற்கு மூலையில் ‘மூன்று கால்’ மண்டபம், தென் கரையில் ‘ஞானப்பால்’ மண்டபம், வடக்கில் சிவலிங்க மண்டபம் ஆகியவை உள்ளன.

இந்தத் திருக்குளத்தில்தான்... மாட்டுப் பொங்கல் அன்று அம்பாள் நீராடுவதும் அறுபத்துமூவர் விழாவன்று சம்பந்தருக்கும், சிவநேசருக்கும் அபிஷேகமும் சிறப்புற நடைபெறும்! தைப்பூச நாளில், இங்கே தெப்போத்ஸவம் நடைபெறும் அழகே அழகு!

பங்குனி- பிரம்மோற்ஸவத்தின்போது, குளத்தின் மேற்குக் கரையில்- ஞானசம்பந்தர், பூம்பாவையை உயிர்ப்பித்த வைபவமும், தீர்த்தவாரியும் விமர்சையாக நடந்தேறும்!

கண்கொள்ளாக் காட்சி நடைபெறும் அறுபத்து மூவர் வீதியுலா இன்று. ஆகவே இன்று மாலையில் (29.3.18) மயிலாப்பூர் செல்லுங்கள். கபாலீஸ்வரரை கண்ணாரத் தரிசியுங்கள். அறுபத்து மூவரையும் தரிசித்து மனதார வேண்டிக் கொள்ளுங்கள். இழந்ததையெல்லாம் பெறுவீர்கள். நினைத்ததெல்லாம் நடந்தேறும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x