

உ
பநிடதங்களில் நடக்கும் உரையாடல்கள், கேள்வி பதில் தன்மையிலான விளக்கங்கள் அனைத்துமே ஆண்களுக்குள் நடைபெறுவதாகவே அமையும். பெண்களுக்கு இவ்வாறான விவாதங்களில் இடமே இல்லையா என்ற கேள்வி மனதில் எழும். அதற்கான விடை பிரஹதாரண்யக உபநிடதத்தில் உள்ளது.
108 உபநிடதங்களில் காலத்தால் முற்பட்ட முதல் மூன்று உபநிடதங்களில் பிரஹதாரண்யக உபநிடதம் முக்கியமானது. இது சுக்லயஜூர் வேதத்தைச் சார்ந்தது. வேத ஞானம் மிக்க ஜனக மன்னரின் அமைச்சரான மித்திரரும் வேதங்களில் தேர்ச்சி பெற்றவர். அவருடைய மகளான மைத்ரேயி இயல்பாகவே வேத சாஸ்திரங்களில் ஈடுபாடு மிக்கவளாகவும், அறிவு பூர்வமான தேடல் மிக்கவளாகவும் விளங்கினாள்.
வேத சாஸ்திரத்தில் தேர்ச்சி பெற்ற மைத்ரேயியின் அத்தையான கார்க்கி, ஜனகர் நடத்தும் வேள்விக்கு அவளை அழைத்துச் செல்கிறார். அங்கு வரும் ஜனகரின் குருவான யாக்ஞவல்க்கியரின் ஞானத்தைக் கண்டு மைத்ரேயி வியப்படைகிறாள். கன்னிப் பெண்ணான தான் அவரிடம் சிஷ்யையாக அமைய முடியாது என்பதை உணர்ந்து, அவரின் மனைவியாகும் விருப்பத்தை வெளியிடுகிறாள். அவருடைய முதல் மனைவியான காத்யாயனி மைத்ரேயியின் விருப்பத்தைப் புரிந்து கொண்டு திருமணத்திற்கு உதவுகிறார்.
யாக்ஞவல்க்கியரின் மனைவியான மைத்ரேயி, அவரிடம் ஆவலுடன் வேத சாஸ்திரங்களைப் பயிலத் துவங்கினாள். காலம் செல்லச் செல்ல தேர்ச்சி பெற்றவள் ஆனாள். குறிப்பிட்ட காலத்திற்குப் பின்னர், யாக்ஞவல்க்கியர் தான் உலகநியதிப்படி சந்நியாச வாழ்க்கையை மேற்கொள்ளப் போவதாகவும், தான் செல்வதற்கு முன் இரு மனைவியரையும் அழைத்துப் பேசுகிறார். அப்பொழுது அவருக்கும் மைத்ரேயியிக்கும் நடைபெற்ற உரையாடல் பிருகதாரண்யக உபநிடதத்தில் இடம்பெற்றுள்ளது.
எனக்குப் பிரியமானவளே! நான் சந்நியாச வாழ்க்கைக்குள் செல்ல விரும்புகிறேன். அதனால், உனக்கும் காத்தியாயினிக்கும் பாகம் பிரித்து வைத்து விடுகிறேன்.
நாதா! செல்வத்தால் நிறைந்த இப்பூமி எல்லாம் எனக்கு இருந்தாலும் அதனால் நான் அமிருதத்வத்தை (சாகாநிலையை) அடைவேனா?
உலகியல் சாதனங்களுடன் வாழ்பவர்களின் வாழ்க்கை எவ்வாறானதோ, அவ்வாறே இருக்கும் உன் வாழ்க்கையும். செல்வத்தைக் கொண்டு அமிருதத்துவத்திற்கு ஆசைப்படவும் இயலாது.
எதனால் நான் அம்ருதத்துவத்தை அடைய முடியாதோ, அதை வைத்துக் கொண்டு என்ன செய்வது? தாங்கள் எதை அறிய விரும்புகிறீர்களோ, அதை எனக்கு கூற வேண்டும்.
நீ எப்பொழுதும் எனக்கு பிரியமானவளாகவே இருந்திருக்கிறாய். கணவனை ஒரு மனைவி காதலிப்பது ஆத்மாவின் பொருட்டே அப்பிரியம் உண்டாகிறது. மனைவியை ஒரு கணவன் காதலிப்பதும், ஆத்மாவின் பொருட்டே. அதனாலேயே, புத்திரர்களும், செல்வமும் பிரியத்துக்குரியதாகிறது. எனவே, ஆத்மாவே பார்க்கப்பட வேண்டும், கேட்கப்பட வேண்டும், நினைக்கப்பட வேண்டும். அறியப்பட வேண்டும்.
வீணை வாசிக்கப்படுகையில், வெளியாகும் ஸ்வரங்களை தனியாக எடுத்துக் கொள்ள இயலாது. நீரில் இடப்பட்ட உப்புக்கட்டி கரைந்து விடும். திரும்ப எடுக்க இயலாது. அதே போல், ஆத்மா பரமாத்மாவுடன் லயித்த பின் மீண்டும் இவ்வுலகத்திற்கு திரும்புவதில்லை. அதன் பின் அறிவு இல்லை. இதுவே நான் உனக்கு கூறுவது.
மறைந்து போன பின் அறிவு இல்லை என்பது என்னை மயங்கச் செய்கிறது.
இரண்டு என்ற பாவனை எந்நிலையில் இருக்கிறதோ, அந்நிலையில் தான் ஒருவன் மற்றொன்றை முகர்கிறான். ஒருவன் மற்றொன்றைக் காண்கிறான். ஒருவன் மற்றொன்றை அறிகிறான். எல்லாமே ஆத்மாவாக அறியப்படுகையில், ஒருவன் எதை முகர்வான்? எதைப் பார்ப்பான்? எதனால் இது எல்லாம் அறியப்படுகிறதோ, அதை எதனால் அறியக்கூடும்?பிரியமானவளே! அறிபவனை எதைக் கொண்டு அறிய முடியும்? ஆத்மா ஒன்றை மட்டும் அறிந்து விட்டால், உலகில் அறிய வேண்டியது எதுவும் இல்லை.
ஆத்மா அழிவற்றது. அப்பரம்பொருள் மாயைகளால் பல ரூபங்களை அடைந்தது. அது தான் பிரம்மம். ஆதியில்லாதது. முடிவில்லாதது. அகமில்லாதது. புறமில்லாதது. “அயமாத்மா ப்ரஹ்ம” – இவ்வாத்மாவே பிரம்மம், எல்லாவற்றையும் அனுபவிப்பது.
அவ்வாறான அறிதலே எங்களுக்கும் வேண்டும்!! அம்மெய்யான செல்வமே எங்களுக்கு வேண்டும்!!
இவ்வாறான உரையாடலுக்குப் பின், யக்ஞவல்கியர் சந்நியாசம் மேற்கொள்கிறார். வாழ்வின் உண்மையை அறிந்து கொண்ட மைத்ரேயி தானும் தவ வாழ்க்கை மேற்கொண்டாள். தனது மிகுந்த அறிவால், வேதாந்தினி என்றும், பிரம்ம வாதினி என்றும் மைத்ரேயி அழைக்கப்பட்டுள்ளாள்.
இவ்வாறாக, வேதாந்த தேடலில் விருப்பம் இருந்த மைத்ரேயிக்கு தான் விரும்பிய வாழ்வை அமைத்துக் கொண்டு வாழும் வாய்ப்பு உபநிடத காலத்தில் இருந்திருக்கிறது. ஞானம் அடைவதிலும், அறிவுத் தேடலிலும் பாலின பேதம் பார்க்கப்படவில்லை, பெண்ணாய் இருப்பது எவ்வகையிலும் தடையாய் இல்லை என்பது இன்றும் நாம் அழுத்தமாய் உணர வேண்டிய செய்தியாகும்.