ஹஜ் பயணத்திற்குத் தயாராகுங்கள்

ஹஜ் பயணத்திற்குத் தயாராகுங்கள்
Updated on
1 min read

இஸ்லாத்தின் அடிப்படையான ஐந்து கடமைகளில் இறுதிக் கடமை ஹஜ் என்னும் புனிதப் பயணம் மேற்கொள்ளுதல். பண வசதியும், உடல் நலமும் உள்ள முஸ்லிம் ஒவ்வொருவரும் தன் வாழ்நாளில் ஒருமுறையேனும் ஹஜ் செல்வது அவசியமாகும்.

உலக நாடுகள் அனைத்திலிருந்தும் சவுதி அரேபியாவிலுள்ள மக்கா நகருக்கு ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ளத் தயாராகி வருகின்றனர். தமிழகம் உள்பட, இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலிருந்தும் ஏராளமானோர் ஹஜ் பயணம் மேற்கொள்ள உள்ளனர்.

துல்ஹஜ் மாதம் 8-ம் பிறை தொடங்கி 12-ம் பிறைவரை மொத்தம் ஐந்து நாட்கள் ஹாஜிகள் செய்யவேண்டிய ஹஜ் நடைமுறைகளைக் காண்போம்.

முதலாவது நாள்

மீகாத்தை (ஹஜ் செய்ய ஆரம்பிக்கும் எல்லை) அடைந்ததும் இஹ்ராம் (ஹஜ்ஜூக்கான ஆடை) அணியவேண்டும். அதன் பின்னர் ‘தல்பியாவைத்’ தொடர்ந்து முழங்கவேண்டும். “வந்துவிட்டேன் யா அல்லாஹ்! உனது அழைப்பை ஏற்று வந்துவிட்டேன். ஈடிணையற்ற உன் அழைப்பை ஏற்று வந்துவிட்டேன். புகழ் அனைத்தும் உனக்கே! அருட்கொடையும் அரசாட்சியும் உனதே! உனக்கு ஈடு இணை இல்லை” என்பதே தல்பியாவின் பொருள்.

கஃபா என்னும் இறை ஆலயத்தை மொத்தம் ஏழு சுற்றுகள் சுற்றவேண்டும். ஒவ்வொரு சுற்றிலும் அமைதியாக உள்ளச்சத்துடன் ‘துஆ’ மற்றும் ‘திக்ர்’ செய்யவேண்டும்.

இரண்டாம் நாள்

காலையில் மினாவிலிருந்து புறப்பட்டு அரஃபாவை அடையவேண்டும். இதுவே ஹஜ்ஜின் மிகப் பிரதான நிலையாகும். பிறை ஒன்பது பகலில் தங்குவது சிறப்பு. பகல் நேரத்தில் அங்கு இடம்பெறும் ஹஜ்ஜூடைய உரையை செவி மடுப்பதோடு அந்த ஜமாஅத்தில் சேர்ந்து தொழுவது சிறப்பாகும்.

மூன்றாம் நாள்

முஜ்தலிபாவிலிருந்து தல்பியாவுடன் புறப்பட்டு மினாவை அடைகிறவர்கள் பெரிய ஷைத்தானை அடைந்து, தக்பீர் கூறி, தங்கள் கையிலிருக்கும் பொடிக்கற்கள் ஷைத்தானின் அடையாளமாக நடப்பட்டிருக்கும் தூணைச் சுற்றியுள்ள குழிக்குள் விழுமாறு எறிவார்களாக! ஏழு கற்களையும் எறிந்த பின்னர் குர்பானி கொடுக்கும் இடம் சென்று குர்பானி கொடுக்கவேண்டும்.

நான்காம் நாள்

சூரியன் சாய்ந்தவுடன் 21 பொடிக் கற்களுடன் சென்று முதலில் சிறிய ஷைத்தான், அடுத்து நடு ஷைத்தான், கடைசியில் பெரிய ஷைத்தான் என தலா ஏழு கற்களை எறியவேண்டும். ஒவ்வொரு கல் எறிதலுக்குப் பிறகும் ஒதுங்கியிருந்து மற்றவருக்கு இடைஞ்சல் இல்லாமல் துஆ செய்யலாம்.

ஐந்தாம் நாள்

சூரியன் மறைவதற்கு முன்னர் மக்கா திரும்பிவிடலாம். சூரியன் மறைந்துவிட்டால் மினாவில் தங்கி 13-ம் பிறை அன்றும் கல் எறிந்துவிட்டே வரவேண்டும். மினாவிலிருந்து திரும்பியவர்கள் விடைபெறும் பிரார்த்தனையை முடித்துக்கொண்டு வீடு திரும்பலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in