Last Updated : 25 Apr, 2014 01:29 PM

 

Published : 25 Apr 2014 01:29 PM
Last Updated : 25 Apr 2014 01:29 PM

தத்துவ விசாரம்: ஐந்து வகை கோசங்கள் என்றால் என்ன?

வேதாந்தம் எனப்படும் தத்துவம் உபநிடதங்களின் சாரம். வேதங்களின் அந்தமாக விலங்கும் உபநிடதங்கள் இந்தப் பிரபஞ்சம் குறித்தும் அதன் ஆதாரம் குறித்தும் தேடலை மேற்கொள்கின்றன. இந்தத் தேடலில் பல்வேறு தத்துவங்களும் கருதுகோள்களும் முன்வைக்கப்படுகின்றன. கவித்துவமான முறையில் மிகச் சுருக்கமாகச் சொல்லப்படும் இந்தக் கருத்துகள் பல விதமான விவாதங்களுக்கும் விளக்கங்களுக்கும் வழிவகுக்கின்றன.

மனித வாழ்வையும் இந்தப் பிரபஞ்சத்துக்கும் அதற்கும் உள்ள தொடர்பையும் பற்றிச் சிந்திக்க விரும்புபவர்களுக்குப் பல விஷயங்களை அள்ளித் தருவது வேதாந்தம். ஆத்மா, பிரம்மம் ஆகிய விஷயங்கள் பற்றியும் உபநிடதங்கள் ஆழமாகப் பேசுகின்றன.

உபநிடத சிந்தனைகள் ஆத்மாவைப் பற்றி விளக்குவதற்கு முன்பு நம் உடலைப் பலவாறாகப் பகுக்கின்றன. மனித உடலை ஐந்து கோசங்களாகப் பிரித்துப் பார்க்கும் ஒரு பகுதி தைத்ரிய உபநிடதத்தில் வருகிறது.

பஞ்ச கோசங்கள் என்று இவை குறிப்பிடப்படுகின்றன. கோசம் என்றால் உறை; பஞ்ச என்றால் ஐந்து. அன்னமய கோசம், பிராணமய கோசம், மனோமய கோசம், விஞ்ஞானமய கோசம், ஆனந்தமய கோசம் ஆகியவையே இந்த கோசங்கள். இவற்றைப் பற்றிச் சுருக்கமாகப் பார்ப்போம்.

அன்னமய கோசம்

நம் ஸ்தூல உடல் அன்னம் அதாவது உணவால் தோன்றி, உணவால் வளர்ந்து, உணவின் மூலமாகிய மண்ணில் சிதைந்து அழிகிறது. இதுவே அன்னமய கோசம் எனப்படுகிறது. உடலுக்கும் வாழ்வுக்கும் உணவின் முக்கியத்துவம் என்னவென்பதை இது உணர்த்துகிறது.

பிராணமய கோசம்

வாயு (காற்று) உடலின் உள்ளும் புறமும் இருக்கிறது. உடலுக்குள் இது மூச்சுக் காற்றாக உள்ளது. இதன் இயக்கத்தாலேயே உடலின் எல்லா உறுப்புகளும் இயங்குகின்றன. இதன் மூலம் செயலாற்றும் புலன்கள், உயிர் வாழ்வதற்கு அவ்சியமான உள் உறுப்புகள், அவற்றின் இயக்கங்கள், ஆகியவை பிராணமய கோசம் என வகைப்படுத்தப்படுகின்றன.

மனோமய கோசம்

உணர்ச்சிகள், உணர்ச்சிகளுக்கு ஆதாரமான மனம், அதன் பல்வேறு அடுக்குகள், செயல்பாடுகள் ஆகியவை மனோமய கோசம் எனப்படும்.

விஞ்ஞானமய கோசம்

எது சரி, எது தவறு? எதைச் செய்யலாம், எதைச் செய்யக் கூடாது? எது உண்மை, எது பொய்? எது நிலைக்காது, எது நிலைக்கும்? இதுபோன்ற தர்க்க ரீதியான தேடல்களை நம் பகுத்தறிவும் சிந்தனைத் திறனும் மேற்கொள்கின்றன. அறிவின் இந்த இயல்புகளும் செயல்பாடுகளும் அடங்கிய உறை விஞ்ஞானமய கோசம் எனப்படும்.

ஆனந்தமய கோசம்

ஆனந்தமய கோசம் என்பது இந்த அடுக்குகளுக்கெல்லாம் அப்பாற்பட்டு இருக்கும் நிலை. இந்த நிலையை உணர்வதும் அடைவதும் ஆன்மிகத்தின் லட்சியம் என்று சொல்லலாம்.

மனித வாழ்வு என்பது இவை ஐந்தையும் உள்ளடக்கியது. ஐந்தாவது கோசம் நம் புலன் அறிவுக்கு அப்பாற்பட்டது. மற்ற நான்கு கோசங்களையும் நாம் உணரவும் அறியவும் முடியும். ஒவ்வொருவரும் உடல், மனம், அறிவு இதில் ஏதேனும் ஒன்றுடன் தம்மை அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள். அதற்கு மாறாக இவை ஒவ்வொன்றும் ஒரே உடலின், ஒரே வாழ்வின் வெவ்வேறு அடுக்குகள் என்பதை உணர்ந்தால் ஒருங்கிணைந்த விதத்தில் நம்மை நாமே அணுகிப் புரிந்துகொள்ளலாம்.

எல்லாமே சேர்ந்ததுதான் நம் வாழ்வு என்பதையும் எந்த ஒன்றுடனும் நாம் நின்றுவிடக் கூடாது என்பதையும் அனுபவபூர்வமாக உணர்பவர் எல்லாக் கோசங்களையும் தாண்டி ஆனந்தமய கோசத்தை உணர முடியும் என்பது இதன் உட்பொருள்.

தைத்ரிய உபநிடதத்தில் எது பிரம்மம் என்னும் தேடலில் அன்னமே பிரம்மம் என்று முதலில் உணரப்படும். பிறகு இது படிப்படியாக நகர்ந்து பிரணனே பிரம்மம், மனமே பிரம்மம், விஞ்ஞானமே பிரம்மம் என்ற முடிவுகள் எட்டப்படும். கடைசியில் ஆனந்தம் பிரம்மணோ வியஜானாத் (ஆனந்தமே பிரம்மம் என அறிக) என முடியும்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x