

கு
ம்பகோணம் அருகே நாச்சியார் கோயில் சீனிவாச பெருமாள் கோயிலில் ஆண்டுக்கு இரு முறை கல்கருட சேவை நடைபெற்று வருகிறது.
நாச்சியார்கோயிலில் வஞ்சுளவல்லி தாயார் உடனாய சீனிவாசபெருமாள் கோவில் உள்ளது. 108 திவ்யதேசங்களில் 20-வது திவ்யதேசமாகவும், சோழநாட்டுத் திருப்பதிகள் 40-ல் 14-வது திருப்பதியாகவும் போற்றப்படுகிறது.
பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவரான திருமங்கை ஆழ்வாருக்கு சீனிவாச பெருமாளே நேரில் ஆச்சாரியனாய் வந்து பஞ்சமஸ்காரம் செய்வித்த தலமாகவும் நாச்சியார் கோயில் சீனிவாச பெருமாள் கோயில் இருக்கிறது.
இங்கு மூலவராகவும் உற்சவராகவும் விளங்கும் கல்கருட பகவான் ஆண்டுக்கு இரண்டு முறை உற்சவராக வீதியுலா வருவது பிரசித்திபெற்றது.
தை மாதத்தில் நடைபெறும் முக்கோடி தெப்பத் திருவிழாவின் போதும், பங்குனி மாதத்தில் நடைபெறும் பெருந்திருவிழாவின் போதும் இங்கு கல்கருட சேவை நடைபெறும்.
பத்து நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் நான்காம் நாள் விழாவின் போது கருடசேவை நிகழ்ச்சி நடைபெறும். அன்று மாலை 6 மணியளவில் கருட பகவான் சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் சன்னிதியிலிருந்து முதலில் நான்கு பேர், அடுத்து எட்டு பேர், 16 பேர், 32 பேர், 64 பேர் என கருடபகவானைச் சுமந்து (அந்த அளவுக்கு எடை கூடிக்கொண்டே இருக்குமாம்) கருட பகவான் வாகன மண்டபத்தில் எழுந்தருளும் காட்சி பக்தர்கள் வெள்ளத்தில் கருடபகவான் நீந்தி வருவது போல் கருடசேவையின் போது இருக்கும். ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலின் வெளிப்புறமும் உள்புறமும் காத்திருந்து தரிசனம் செய்வார்கள்.
இத்தகைய பிரச்சித்தி பெற்ற கல் கருட சேவை பங்குனித் திருவிழா மார்ச் 26-ம் தேதி மாலை நடைபெறுகிறது.