Last Updated : 13 Mar, 2018 12:25 PM

 

Published : 13 Mar 2018 12:25 PM
Last Updated : 13 Mar 2018 12:25 PM

பங்குனி மாத தர்ப்பணம், பிரதோஷம், காரடையான்நோன்பு: நினைத்தது நடக்கும்!

பங்குனி மாத தர்ப்பணம், பிரதோஷம், காரடையான் நோன்பு என நாளைய தினம் 14.3.18 புதன்கிழமை அன்று மிக முக்கியமான, சாந்நித்தியமான நாளாக அமைந்திருக்கிறது. எனவே இந்த நாளில், முன்னோரை முழு ஈடுபாட்டுடன் வணங்குவோம். பெண்கள் காரடையான் நோன்பை செவ்வனே செய்யட்டும். எல்லோரும் சிவாலயம் சென்று பிரதோஷ பூஜையைத் தரிசிப்போம். வாழ்வில் நினைத்ததெல்லாம் நடந்தேறும் என்பது உறுதி என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் தர்ப்பணம் செய்து, முன்னோரை ஆராதிப்பது முக்கியம் என வலியுறுத்துகிறது தர்ம சாஸ்திரம். நாளை இரவு பங்குனி மாதம் பிறப்பதால், நாளைய தினமே மாதப் பிறப்பாக கணக்கெடுத்துக் கொள்கிறது, பஞ்சாங்கம். எனவே பங்குனி மாதப் பிறப்பையொட்டி, நாளைய தினமான 14.3.18 புதன்கிழமை அன்று தர்ப்பணம் செய்யவேண்டும் என்று அறிவுறுத்துகிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

அடுத்து, நாளைய தினம் பிரதோஷம். மாலை வேளையில் சிவன் கோயில்களில், நந்திதேவருக்கும் சிவலிங்கத் திருமேனிக்கும் சிறப்பு அபிஷேகங்களும் பூஜைகளும் நடைபெறும். பிரதோஷ நாளில், சிவ தரிசனம் செய்வது மிகுந்த பலனைத் தரும், பாவங்களையும் தோஷங்களையும் விலக்கி, புண்ணியங்களைப் பெருக்கும் என்கிறது சிவ புராணம்.

ஆகவே பிரதோஷ காலமான மாலை 4.30 முதல் 6 மணி வரையிலான நேரத்தில், அருகில் உள்ள சிவன் கோயிலுக்குச் செல்லுங்கள். நந்திக்கும் சிவலிங்கத்திற்கும் முடிந்த அளவு வில்வம் வழங்குங்கள். அரளிமாலை சார்த்துங்கள். நந்திதேவருக்கு அருகம்புல் மாலையும் சேர்த்து அணிவியுங்கள்.

மாதப் பிறப்பு தர்ப்பணம் என்பதால், முன்னோரை நினைத்து முடிந்த அளவு உணவுப் பொட்டலம் வழங்குங்கள். பிரதோஷம் என்பதால், சர்க்கரைப் பொங்கலோ வெண் பொங்கலோ, எலுமிச்சை சாதமோ புளியோதரையோ நைவேத்தியம் வழங்குங்கள். இரண்டுமே புண்ணியம் சேர்க்கும் என்கிறார்கள்.

மேலும் நாளைய தினம் காரடையான் நோன்பு கடைப்பிடிக்கப்படும் நாள். மாசியின் கடைசி நாளும் பங்குனியின் ஆரம்பநாளுமாக இணைந்த நேரத்தில், இந்த விரதம் இருப்பார்கள் பெண்கள்.

காரடையான் நோன்பு கடைப்பிடித்து, விரதம் மேற்கொண்டால், கணவரின் ஆயுள் நீடிக்கும். தம்பதி ஒற்றுமை மேலோங்கும். பிரிந்த தம்பதி கூட ஒன்று சேருவார்கள். தாலி பாக்கியம் வலுப்பெறும். தாலி பாக்கியம் நிலைத்திருக்கும் என்பது ஐதீகம்.

ஆகவே நாளைய தினமான புதன் கிழமையில் (14.3.18) பங்குனி மாதத் தர்ப்பணம் செய்து முன்னோரை ஆராதியுங்கள். பிரதோஷ தரிசனம் செய்யுங்கள். பெண்கள் மறக்காமல், காரடையான் நோன்பை மேற்கொண்டு, அம்பிகையை வழிபடுங்கள்!

எல்லா நலனும் வளமும் நிச்சயம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x