காற்றில் கீதங்கள் 20: இறையில் ஒருமுகமாகும் க்வாஜா!

காற்றில் கீதங்கள் 20: இறையில் ஒருமுகமாகும் க்வாஜா!
Updated on
1 min read

காற்று, கடவுள் இரண்டையுமே நாம் உணர மட்டுமே முடியும். பேசுவது, பாடுவது எல்லாமே காற்றின் இருப்பை உணர்த்தும் விஷயம்தான். இறையைப் பற்றி பாடும்போது இசை எனும் அரூபத்துக்கு ரூபம் கிடைக்கிறது.

எல்லாப் புகழும் இறைவனுக்கே என்று தனக்கு புகழ் கிடைக்கும் எந்த மேடையிலும் சொல்பவர் ஏ.ஆர்.ரஹ்மான். உலகம் முழுவதும் அவருடைய இசையைக் கேட்டு மக்கள் உற்சாகமாக ஆடிப்பாடுவதை நிறைய மேடை நிகழ்ச்சிகளில் கண்டிருக்கிறோம்.

ஆனால், அமைதியான தீர்க்கமான அவருடைய சூபி இசைப் பாடலைக் கேட்டு இறை அனுபவத்தில் ரசிகர்கள் மூழ்கியிருந்ததை சிட்னியில் அவர் நடத்திய இசை நிகழ்ச்சியில் காணமுடிகிறது.

ஹார்மோனியத்தின் ஸ்ருதி கட்டைகளில் அவருடைய விரல்களின் நுனியில் ஆதார இசை பிறக்க, `க்வாஜா ஜி... க்வாஜா.. க்வாஜா ஜி... க்வாஜா’ பாடலைத் தொடங்க, ஒட்டுமொத்த ரசிகர் கூட்டமும் அந்த இறை அனுபவத்தில் லயிக்கிறது.

’’ஏழைகளுக்கும் உதவி தேவைப்படுபவர்களுக்கும் இரங்கும் இறைவனே.. வா வந்து என் இதயத்தில் தங்கு...’’ என்று பரிபூரணமான இறைவனை உருக்கமாக வேண்டும் வரிகளை, அதன் உருக்கம் சிறிதும் வழுவாமல் பாடும் ஏ.ஆர்.ரஹ்மானின் குரலில் மொத்த கூட்டமும் கட்டுண்டு கிடக்கிறது.

இந்தப் சூபி பாடலை எழுதிப் பாடியவர் க்வாஜா மொய்னுதீன் சிஷ்டி. இந்தியா மட்டுமின்றி பாகிஸ்தானிலும் மக்களாலும் வழிபடப்படும் இவருடைய தர்கா ஷெரிஃப் அஜ்மீரில் உள்ளது.

எல்லா மதத்தினரும் இந்த தர்காவில் வழிபாட்டுக்கு வருகின்றனர். இந்த உலகத்துக்குக் கிடைத்த மகத்தான சூபி ஞானிகளில் ஒருவரான க்வாஜா மொய்னுதீன் சிஷ்டியே இந்த சூபி பாடலில் `க்வாஜா’ என்று கருதப்படுகிறார்.

பதிமூன்றாம் நூற்றாண்டில், வட இந்தியாவில் உள்ள அஜ்மீரில் வாழ்ந்த ஒரு துறவி க்வாஜா மொய்னுதீன் சிஷ்டி. ஈரானிலிருந்து இந்தியா வந்து மிகப்பெரிய சூபி மரபை உருவாக்கியவர் இவர். இவரது இன்னொரு பெயர் ‘கரீப் நவாஸ்’ என்பதாகும். அதற்கு ‘ஏழைகளின் பாதுகாவலர்’ என்று அர்த்தம்.

ஏ.ஆர்.ரஹ்மான் பாடும் க்வாஜா பாடைலக் காண:

https://bit.ly/2Yiz1Cz

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in