Last Updated : 21 May, 2019 11:21 AM

 

Published : 21 May 2019 11:21 AM
Last Updated : 21 May 2019 11:21 AM

கஷ்டமெல்லாம் தீர்ப்பாள் கொப்புடையம்மன்

ஒருகாலத்தில் அந்தப் பகுதி முழுவதும் காரை மரங்கள் அடர்ந்த, செழித்த வனப்பகுதியாக இருந்தது. ஊர் அமைப்பதற்காக இந்தக் காட்டை அழித்து திருத்தி, மக்கள் குடியேற வசதியாக நகரத்தை உண்டு பண்ணினார்கள். காரை வனப்பகுதியில் ஏற்பட்ட ஊரில் மக்கள் குடியேறியதால் ஊருக்கு காரைக்குடி என்று பெயர் அமைந்தது. 

காரைக்குடியில், செஞ்சை காட்டுப்பகுதியில் கோயிலின் உபகோயிலான காட்டம்மன் கோயில் உள்ளது. இந்த காட்டம்மனின் தங்கையே கொப்புடையம்மன்.கொப்புடையம்மனுக்கு பிள்ளைகள் இல்லை. ஆனால் காட்டம்மனுக்கோ ஏழு பிள்ளைகள். 

இந்த பிள்ளைகளைப் பார்க்க கொப்புடையம்மன் வரும்போது கொழுக்கட்டை முதலான உணவுப்பண்டங்களை தானே செய்து குழந்தைகளுக்கு கொடுக்க எடுத்து வருவாள். ஆனால் காட்டம்மன் மலடியான தன் தங்கை தன்னுடைய பிள்ளைகளை பார்க்கக் கூடாது என்று நினைத்து பிள்ளைகளை ஒளித்து வைப்பாள். 

இதனை அறிந்த தங்கை கொப்புடையம்மன் ஒளித்து வைத்த பிள்ளைகளை கல்லாக்கிவிட்டு பின்னர் அங்கிருந்து கோபத்தோடு காரைக்குடி வந்து தெய்வமாகிவிட்டாள் என்று கொப்புடையம்மன் ஸ்தல வரலாறு தெரிவிக்கிறது.

காரைக்குடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளை செட்டிநாடு என்று சொல்லுவார்கள். செட்டிமக்கள் அதிக அளவில் வாழும் இந்த ஊரையும் ஒட்டுமொத்த மக்களையும் காத்தருள்கிறாள் கொப்புடையம்மன்.

சிவகங்கை மாவட்டத்தில் முக்கிய நகரமாகத் திகழ்கிறது காரைக்குடி. ஊரின் மையப்பகுதியில், கோயில் கொண்டபடி தன்னை நாடி வருவோருக்கெல்லாம் அருளையும்பொருளையும் வாரி வழங்கிக்கொண்டிருக்கிறாள் கொப்புடையம்மன்.

ஆதிசங்கரர் இந்தக் கோயிலுக்கு வந்து வழிபாடு செய்துள்ளார் எனக்கூறப்படுகிறது.

கொப்பு என்றால் கிளை என்று அர்த்தம். இவள் நின்ற கோலத்தில் நான்கு கரங்களுடன் ஜுவாலைக் கிரீடத்துடன் பஞ்சலோக உற்ஸவக் கோலத்தில் காட்சி தருகிறாள். வலது கை அபயம் அளிக்கும் தோற்றத்தோடும், வலது மேல்கை சூலத்தை ஏந்தியபடியும் இடது மேல் கை பாசமேந்தியபடியும் இடது கீழ்கை கபாலத்தை தாங்கியும் விளங்குகிறது.

காளி, துர்கை போன்ற உக்கிர தெய்வங்கள் வடக்கு நோக்கி அருள்பாலிப்பதே வழக்கம். அனால் இங்கு அம்மன், துர்கை அம்சத்துடன் கிழக்கு பார்த்து வீற்றிருக்கிறாள். எனவே இவளை வணங்கினால் கல்வியில் சிறந்து விளங்கலாம். சகல செல்வமும் பெற்றுத் திகழலாம். மனதில் பயமெல்லாம் விலகி தைரியத்துடன் வாழலாம் என்பது ஐதீகம்.


இக்கோயிலில் மற்றுமொரு விசேஷம்...  காவல் தெய்வம் கருப்பண்ணசாமி வேறெங்கும் இல்லாத கோலத்தில் குதிரையில் அமர்ந்தபடி அருள்பாலிக்கிறார். மூலஸ்தானத்தில் இருக்கும் அம்மனே உற்சவ மூர்த்தியாகவும் திகழ்கிறார்.

கோயிலுக்கு அருகிலேயே குளம் உள்ளது. இங்கே தெப்ப உத்ஸவம் பிரசித்தம். அதேபோல், பூச்சொரிதல் விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள். அப்போது பால்குடம் ஏந்தி, முளைப்பாரி எடுத்து, தங்கள் நேர்த்திக்கடனைச் செலுத்துவார்கள்.


 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x