

ஜீவாத்மா பரமாத்மாவின் மீது கொள்ளும் காதலே தெய்விகக் காதல். இந்த அனுபவத்தை ஆழ்வார்கள், நாயன்மார்களின் பாடல்களில் உணரலாம். கிருஷ்ண பக்தியை இந்த அடிப்படையில் அணுகுவதுதான் ஜெயதேவரின் அஷ்டபதி.
ஏராளமான அருளாளர்கள் இந்த வழியில் மிகச் சிறந்த படைப்புகளை அளித்து லௌகீக வாழ்க்கையிலிருந்து மனிதன் விடுபடுவதற்கான இலக்கியச் சேவையைச் செய்திருக்கின்றனர்.
இந்த அருளாளர்களின் வழியில் வந்தவர்தான் ஸ்ரீபாத வல்லப ஆச்சார்யா. கிருஷ்ணதேவராயரின் அவையில் இடம்பெற்றிருந்த இவர் வியாச சூத்ர பாஷ்யம், பாகவத சுபோதினி, சித்தாந்த ரகசியா போன்ற பல அரிய நூல்களை சம்ஸ்கிருதத்தில் எழுதியவர்.
இவை எல்லாவற்றையும்விட, இவரை பக்தர்களுக்கு மிகவும் நெருக்கத்தில் கொண்டுவந்தது, இலக்கிய உலகுக்கு இவரின் கொடையான `மதுராஷ்டகம்’. மதுரம் என்றால் இனிப்பு என்று அர்த்தம். அஷ்டகம் என்றால் எட்டு பத்திகளில் அமையும் பாடல்.
இறைவனின் திருநாமமும், இருப்பிடமும், நினைவும், தரிசனமும் எப்படி இனிக்கிறது? என்பதை அணுஅணுவாக விவரிக்கும் பாடல் `அதரம் மதுரம்.. வதனம் மதுரம்..
நயனம் மதுரம்... ஹசிதம் மதுரம்’.
இந்தப் பாடலை இசை மேதை
எம்.எஸ்.சுப்புலட்சுமி காந்தக் குரலில் பாடியிருப்பார்.
இதோ, அதே பாடலை ஷ்ரேயா கோஷல் தன்னுடைய சன்னமான குரலில் பாடி கேட்பவர்களின் மெய்யை சிலிர்க்க வைக்கிறார். இந்தப் பாடலும் பாரம்பரியமான சதுஸ்ர தாளத்தில் கட்டமைக்கப்பட்டிருந்தாலும்,
முகப்பு இசையிலேயே வீணை, புல்லாங்குழல், வலம்புரிச் சங்கு, பாஸ் கிடார், டிம்பொனி என்று நம்முடைய செவிக்கு ஒரு சமபந்தி போஜனம் கிடைத்துவிடுகிறது.
இப்படியொரு அட்டகாசமான இசைக் கோவையில் தொடங்கினாலும் முடியும் போது, பாரம்பரியமான பஜனை பத்ததி சம்பிரதாயத்தோடு முடித்திருப்பதில் மரபும் நவீனமும் சங்கமிக்கின்றன. `மதுராபதி... அகிலம் மதுரம்’ என்னும் வரியைப் பாடும்போது, ஷ்ரேயா கோஷலின் மதுரமான குரலை நீங்களும் உணரலாம்.
ஷ்ரேயா கோஷலின் மதுரகானத்தைக் காண இணையச் சுட்டி: