Published : 11 Sep 2014 01:09 PM
Last Updated : 11 Sep 2014 01:09 PM

நீங்கள் கடன் கொடுத்தவரா? வாங்கியவரா?

ஆண்டவராகிய கடவுள் எப்போதுமே ‘மன்னிக்கிறவராக’ இருக்கிறார், ஆனால் அவரது படைப்பாக இருக்கும் மனிதர்கள் அவரைப்போல் எப்போதும் மன்னிப்பதில்லை என்று சங்கீதப் புத்தகம்(86:5) குறிப்பிடுகிறது.

நம் உறவுகளோ, நண்பர்களோ, நமக்கு எதிராக செய்த தவறுகளை அவரோடு பேசித் தீர்க்காவிட்டால், மனக்கசப்பு உருவாகும். இறுதியில் அவர்கள் செய்த தவறுகள் மன்னிக்கவே முடியாததுபோல் நமக்குத் தோன்றும்.

இதனால்தான் மற்றவர்கள் நமக்கு எதிராக செய்யும் தவறுகளை, காலம் தாழ்த்தாமல் உடனுக்குடன் மன்னிக்க வேண்டும் என்கிறது விவிலியம். குறிப்பாக ரத்த உறவுகள் செய்யும் தவறுகளை எத்தனை விரைவாக மன்னிக்க முடியுமோ அத்தனை விரைவாக மன்னிப்பது உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் அமைதியைக் கொண்டுவரும்.

அதனால்தான் “ஒருவரையொருவர் பொறுத்துக்கொள்ளுங்கள், தாராளமாக மன்னியுங்கள்” என கொலோசெயர்(3:13) எடுத்துச் சொல்லுகிறது.

குடும்ப வாழ்வில், தம்பதியர் தங்கள் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்கிறார்கள். மாறாக தவறுகளை அப்படியே நினைவில் வைத்துக் கொண்டு “நீங்கள் எப்போதுமே இப்படித்தான் என்றோ, நான் சொல்வதை நீ காதுகொடுத்துக் கேட்பதே இல்லை என்றோ பரஸ்பரம் குத்திக்காட்ட மாட்டார்கள்.

“குற்றத்தை மன்னிப்பது மகிமை” என்பதைக் கணவன், மனைவி இருவருமே நம்புவார்கள் என்கிறது நீதிமொழி(19:11). ஆனால் இந்த மகிமையை பிரச்சினைகள் விஸ்வரூபம் எடுத்தபிறகே பலரும் உணரத் தலைப்படுகிறார்கள்.

அப்படிப்பட்ட சூழ்நிலையில் கணவன், மனைவி இருவருமே பேசா மடந்தைகளாகிவிடுகிறார்கள்; வாழ்க்கைத் துணையின் உணர்ச்சிகளை மதிக்காத கல்நெஞ்சக்காரர் ஆகிவிடுகிறார்கள். பாசமோ பிணைப்போ இல்லாத ஒரு பந்தத்திற்குள் சிக்கிவிட்டதாக இருவரும் நினைக்கிறார்கள்.

ஆனால் ஒருவருக்கு ஒருவர் தவறிழைத்து விட்டதாக நினைத்தால் அதை மறப்பதும் மன்னிப்பதும், இல்லற வாழ்வை இன்னும் இனியதாக்கி விடுகிறது.

மன்னிப்பின் அவசியத் தேவை

நம்மைப் புண்படுத்துகிறவர்கள் அல்லது நமக்கு எதிராக பாவம் இழைப்பவர்கள் யாராயினும் அவர்களை மன்னிக்க நாம் மனமுள்ளவர்களாக இருக்க வேண்டும்; அப்போதுதான் சமாதானத்தின் அமைதி உங்களை ஒரு அரணாகக் காக்கும்.

மற்றவர்கள் எத்தனை முறை புண்படுத்தினாலும் அத்தனை முறையும் மன்னிப்பதே உயர்ந்தது. மன்னிப்பதே மனித இனத்தின் மகத்தான குணமாக இருக்க வேண்டும் என்பதைப் புரிந்துகொள்ள ஒரு கதை மூலம் விளக்கினார் இயேசு.

கடன் வாங்கிவிட்டு திரும்பச் செலுத்தமுடியாமல் அல்லல் பட்டுவந்த ஒரு அடிமையைப் பற்றிய கதை அது.

அரசனும் அடிமையும்

ஓர் அடிமை தன் ராஜாவுக்கு ஆறு கோடி தினாரி கடன்பட்டிருந்தான்; ஆறு கோடி நாட்கள் அவன் வேலை செய்தால்தான் அந்தக் கடனை அவனால் அடைக்க முடிந்திருக்கும் என்பது யதார்த்தம்.

அவன் நிலையை உணர்ந்த ராஜா அவ்வளவு பெரிய கடனை ரத்து செய்தார். அத்தனை பெரிய கடனிலிருந்து விடுவிக்கப்பட்ட அந்த அடிமையோ, தனக்கு வெறுமனே நூறு தினாரி கடன்பட்டிருந்த சக அடிமை ஒருவனைத் தேடிக் கண்டுபிடித்து, தனக்குக் கொடுக்க வேண்டிய கடனைத் திருப்பித் தரச்சொல்லி அவன் கழுத்தை நெரித்தான்.

அவனோ, கொஞ்சம் பொறுத்துக்கொண்டால் கடனைக் கொடுத்துவிடுவதாகச் சொல்லி, அவன் காலைப் பிடித்துக் கொண்டு கதறி அழ ஆரம்பித்தான்; அவனது கண்ணீருக்கு இரங்காத அந்த அடிமை தன் சக அடிமையைச் சிறையில் அடைக்கச் செய்தான்.

இதைக் கேள்விப்பட்ட ராஜா கொதித்துப்போனார். “நான் உனக்கு இரக்கம் காட்டியதைப் போல் நீயும் உன்னுடைய சக அடிமைக்கு இரக்கம் காட்டியிருக்க வேண்டாமா?” என்று அவனிடம் கோபத்துடன் கேட்டார். பிறகு, “அவன் எல்லாக் கடனையும் அடைக்கும்வரை சிறைக் காவலர்களிடம் அவனை ஒப்படைத்தார்”(மத்தேயு-18:21-34).

மேலும் இயேசு இந்தக் கதையைச் சொல்லி முடித்தபின் “அவ்வாறே, நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் சகோதரரை மனமார மன்னிக்காவிட்டால் என் பரலோகத் தந்தையும் உங்களை மன்னிக்க மாட்டார்” என்று அவர் சொன்னார்(மத். 18:35).

மன்னிப்பதே ஆரோக்கிய வாழ்வு

மன்னிக்கும் மனம் இல்லாவிட்டால் உடல்நலம் பாதிக்கப்படுகிறது. மன அழுத்தம் ஏற்படுகிறது, உறவுகளில், தோழமையில் விரிசல் உண்டாகிறது. தகவல் தொடர்பு அறுந்துவிடுகிறது.

தாராளமாய் மன்னிக்கும்போதோ அநேக நன்மைகள் விளைகின்றன. மோசமான உடல்நிலைக்குக் காரணமாய் இருக்கிற மனக் கொந்தளிப்புகள், குமுறல்கள் ஆகியவற்றுக்கு மாபெரும் வடிகாலாக மன்னிப்பு அமைகிறது; ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வித்திடுகிறது, அடுத்துவரும் நாட்களை மகிழ்ச்சியின் தொடர்ச்சி

மிக்கதாக மாற்றிவிடுகிறது. நீங்கள் மன்னிக்காதவர் எனில் நீங்கள் வராக்கடன்களின் அதிபதி. வராக்கடன்கள் உங்கள் பேரேட்டில் இருந்தாலும் அவை உங்கள் பொக்கிஷ அறையில் இருப்பதில்லை. அவற்றால் உங்களுக்குப் பயனில்லை.

மன்னிப்பவர் எனில் உறவுகளின், நண்பர்களின் வரவு உங்கள் பொக்கிஷத்தை ரத்தினங்கள்போல் ஜொலிக்கச் செய்கிறது.

நீங்கள் மன்னிப்பதன் மூலமே உங்களை மன்னிப்பவராக இருக்கும் பரலோகத் தந்தையுடன் உங்களுக்கான பந்தத்தை உறுதி செய்கிறது. நீங்கள் கடன் கொடுத்தவரா? வாங்கியவரா? சிந்திப்போம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x