Published : 18 Sep 2014 02:51 PM
Last Updated : 18 Sep 2014 02:51 PM

யார் உரிமை உடையவர்?

புத்தரின் இளவயது பற்றி நாம் அதிகம் கேள்விப்பட்ட கதைதான். அவர் யார், எப்படிப்பட்டவர் என்பதைச் சுருக்கமாகப் புரிய வைத்துவிடும் கதை. கதையின் அடிப்படையில் பெரிய மாற்றம் இல்லை. ஆனால், உண்மையில் அது கொஞ்சம் மாறுபட்டுத்தான் நடந்திருக்கிறது.

ஒருநாள் புத்தரும் அவருடைய சித்தப்பா மகன் தேவதத்தனும் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது வானத்தில் அன்னப் பறவைகள் வேகமாகப் பறந்து போவதைக் கண்டார்கள். தேவதத்தன் தனது வில்வித்தைத் திறமையைக் காட்ட விரும்பி, ஒரு பறவையைக் குறிபார்த்து அம்பை எய்தான். பறவையின் இறக்கையில் பட்டு அம்பு சிறகிலேயே தைத்துக் கொண்டது. அந்தப் பறவை சிறிது தொலைவில் தோட்டத்தில் விழுந்தது.

பறவை கீழே விழுந்ததைக் கண்ட சித்தார்த்தன் ஓடிச்சென்று பறவையை அன்புடன் தூக்கி, அப்பறவை படும் துன்பத்தைக் கண்டு மனம் வருந்தினான். பிறகு அதை மடியின் மேல் வைத்துக்கொண்டு சிறகில் குத்தியிருந்த அம்பை மெதுவாக வெளியே எடுத்தான். பிறகு காயத்தில் தைலம் தடவி, அதற்கு இரை கொடுத்தான். சில நாட்களில் பறவை நலமடைந்தது.

பறவையைத் தா!

தேவதத்தன், அன்னப் பறவையை வாங்கிவரச் சித்தார்த்தனிடம் ஆட்களை அனுப்பினான். அவர்கள் வந்து, "தேவதத்தன் அம்பு எய்து வீழ்த்திய அன்னப் பறவை உங்களது தோட்டத்தில் விழுந்தது. அதைத் தரும்படி கேட்கிறார்" என்று கூறினார்கள்.

அதற்குச் சித்தார்த்தன் "அம்பு தைத்த அன்னப் பறவை இறந்து போயிருந்தால், அது திருப்பிக் கொடுக்கப்பட வேண்டும். அது இறந்து போகாமல் உயிருடன் இருப்பதால் அது தேவதத்தனுக்கு உரியதல்ல" என்றான்.

இதைக் கேட்ட தேவதத்தன் மீண்டும் ஆட்களை அனுப்பி, "பறவை உயிருடன் இருந்தாலும் இறந்துபோனாலும் அது எனக்கே சொந்தம். என்னுடைய வில்வித்தையின் திறமையாலே அதை வீழ்த்தினேன். அதனால் அது எனக்கே உரியது; உடனே அதைத் தர வேண்டும்" என்றான்.

யாருடையது பறவை?

அதற்குச் சித்தார்த்தன், "எல்லா உயிர்களையும் காப்பாற்ற வேண்டும் என்பது என் கொள்கை. புண்பட்ட இப்பறவையை நான் எடுத்துக் காப்பாற்றினேன். இது எனக்குச் சொந்தமானதல்ல என்று கருதினால், சாக்கிய குலத்துப் பெரியவர்களைக் கேளுங்கள். அவர்கள் முடிவுப்படி செய்கிறேன்" என்றான்.

அதன்படியே சாக்கிய குலத்துப் பெரியவர்களிடம் இது பற்றி கேட்கப்பட்டது. அவர்களில் வயது முதிர்ந்த ஒரு பெரியவர் கூறினார், "யார் அன்புடன் போற்றி காக்கிறார்களோ அவர்களே ஒன்றுக்கு உரிமையாளரும் உடைமையாளரும் ஆவார். அழிக்கிறவர்கள் உரிமையுடையவர் அல்ல" என்று அவர் கூறிய இந்தத் தீர்ப்பை எல்லோரும் ஒப்புக்கொண்டார்கள். பறவை சித்தார்த்தனிடமே தங்கியது.

நன்றி: மயிலை சீனி,
வேங்கடசாமியின் ‘கவுதம புத்தர்’
தொகுப்பு: ஆதி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x