Last Updated : 24 Apr, 2019 10:15 AM

 

Published : 24 Apr 2019 10:15 AM
Last Updated : 24 Apr 2019 10:15 AM

தேனியின் பிரமாண்டம்... வீரபாண்டி திருவிழா!

தேனி மாவட்டத்தின் மிகப் பிரமாண்டமான திருவிழா இதுதான். வீரபாண்டி கெளமாரியம்மன் கோயில் திருவிழாவின் போது, அம்மனுக்கு வேண்டிக்கொண்டால், எல்லா நல்லதுகளையும் இனி பார்த்துப்பார்த்துச் செய்வாள். நம் எல்லோருக்கும் தாயாகத் திகழ்பவள், ஒரு அம்மாவைப் போலவே கனிவும் கருணையுமாக நன்மைகள் வழங்குவாள் என்று பூரிக்கின்றனர் பக்தர்கள்.

அகிலத்துக்கே சக்தி கொடுப்பவள்தான் அன்னை. ஆனால் அசுரனை அழிக்க இன்னும் சக்தி வேண்டுமே... அஷ்டசக்திகளில் ஒருத்தியான கெளமாரி, அதற்காக அந்த அடர்ந்த வனத்தில், சிவலிங்க பூஜை செய்து கொண்டிருந்தாள். இதை அறியாமல் இருப்பானா அசுரன்?

அவளை பூஜை செய்யவிடாமல் தடுக்க நினைத்தான் அசுரன். அவளை நெருங்கினான். கண்கள் மூடி தவமிருக்கும் நிலையிலேயே இதையெல்லாம் உணர்ந்திருந்தாள் கெளமாரி. அருகில் இருந்த அருகம்புல்லை எடுத்து, அவன் மீது வீசினாள். அருகம்புல், மிகப்பிரமாண்டமான ஆயுதமானது. அவனை நோக்கிச் சென்றது. அந்த அசுரனை இரண்டாகப் பிளந்துபோட்டது. அவன் துடிதுடிக்க செத்துப்போனான்.

அப்போது வானில் இருந்து தேவர்கள் மகிழ்ந்தனர். பூச்சொரிந்தனர். அந்த பூமியே குளிரும்படி மழை பெய்தது. கண்ணாக இருந்து காத்தருளிய சிவனாருக்கு, கண்ணீஸ்வரர் எனும் திருநாமம் அதனால்தான் அமைந்தது. அந்த கெளமாரிக்கு கோயில் எழுப்பி, இன்றைக்கும் வழிபட்டு வருகிறார்கள் பக்தர்கள்.

தேனி மாவட்டம் வீரபாண்டியில் அமைந்துள்ளது கெளமாரி அம்மன் கோயில்.

இந்தக் கோயில் குறித்து இன்னொரு சரிதமும் உண்டு.

மதுரையை தலைமையகமாகக் கொண்டு ஆட்சி செய்துவந்தான் வீரபாண்டியன் எனும் மன்னன். முந்தைய வினைப்பயனால், திடீரென அவன் கண்பார்வையை இழந்தான். மந்திரிமார்களும் குருமார்களும் சொன்னபடி, ஏராளமான கோயில்களுக்குச் சென்றான். புனித தலங்களில் நீராடினான்.

ஒருநாள் அவன் கனவில் தோன்றிய ஈசன், கெளமாரியை வணங்கு. கண்பார்வை பெறுவாய் என அருளினார். சிலிர்த்து எழுந்த மன்னன், முல்லை நதி பாயும் வனப்பகுதியில், கெளமாரி அம்மனின் இருப்பிடத்துக்கு வந்தான். நதியில் நீராடினான். அவளின் சந்நிதிக்கு வந்து வேண்டினான். நெடுஞ்சாண்கிடையாக பிரார்த்தனை செய்தான். மன்னனின் ஒரு கண்ணில் ஒளி வந்தது. அங்கே இருந்த கண்ணீஸ்வரரையும் வேண்டி வணங்கினான். இன்னொரு பார்வையும் கிடைக்கப் பெற்றான். இதில் நெகிழ்ந்து நெக்குருகிப் போன மன்னன், சந்நிதியாக மட்டும் இருந்த கண்ணீஸ்வரருக்கும் கெளமாரிக்கும் ஆலயம் எழுப்பித்தான் என்கிறது ஸ்தல வரலாறு.

தேனியில் இருந்து சின்னமனூர் செல்லும் வழியில், 6 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது வீரபாண்டி எனும் கிராமம். இங்கே சாலையோரத்தில், ஆற்றங்கரையை ஒட்டியே அழகுற அமர்ந்து ஆட்சி செய்துகொண்டிருக்கிறாள் கெளமாரியம்மன்.

வருடந்தோறும் சித்திரை மாதத்தில் வெகு விமரிசையாக நடைபெறுகிறது திருவிழா. இந்த விழாவின் போது, சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள், வந்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்.

தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம் எனும் ஊரிலும் கெளமாரி அம்மன் கோயில் கொண்டிருக்கிறாள். இவள் அக்கா. இவளுடைய தங்கைதான் வீரபாண்டியில் கோயிலில் குடியிருந்து அருளாட்சி செய்துகொண்டிருக்கிறாள். முதல் ஒருவாரம் கம்பம் கெளமாரிக்கு விழா அமர்க்களப்படும். அதன் பிறகு வீரபாண்டி கெளமாரியம்மனுக்கு திருவிழா, கோலாகலமாக நடைபெறும். இந்த விழா ஒருவாரம் சீரும்சிறப்புமாக நடந்தேறிய பிறகு, பெரியகுளத்தில் அமைந்துள்ள அம்மனுக்கு விழா விமரிசையாக நடைபெறும்.

தேனி, சின்னமனூர், கோம்பை, தேவாரம், பண்ணைபுரம், உத்தமபாளையம், கம்பம், அல்லிநகரம், பெரியகுளம், தேவதானப்பட்டி, வருசநாடு, இந்தப்பக்கம் ஆண்டிப்பட்டி வரைக்கும் உள்ள மக்கள், வீட்டில் ஏதேனும் சிக்கல், பிரச்சினை என்றால், எவருக்கும் நோவு என்றால், வீரபாண்டி கெளமாரியிடம் வேண்டிக்கொள்வார்கள். ‘இதையெல்லாம் சரிபண்ணு தாயே. உன் சந்நிதிக்கு வரேன்’ என்று பிரார்த்தனை செய்வார்கள்.

அதன்படி நிறைவேற்றித் தருவாள் கெளமாரி. சித்திரைத் திருவிழாவின் போது, அக்கினிச்சட்டி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள் பக்தர்கள். அதேபோல், அலகு குத்திக்கொண்டு வழிபடுகிற பக்தர்களும் இருக்கிறார்கள். ஆயிரம்கண் பானை எடுத்துவந்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்.  

முல்லையாற்றங்கரையில் உள்ள சேற்றுமண் எடுத்து உடலெங்கும் பூசிக்கொண்டு ஊர்வலமாக வந்து, நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். ‘மண்ணோடு மண்ணாப் போயிருக்க வேண்டிய உயிரை, நோயிலிருந்து காப்பாத்திட்ட தாயே’ என்று சேற்றுமண் நேர்ச்சை என்கிறார்கள் பக்தர்கள்.

ஏராளமான பக்தர்கள், ஆடு நேர்ந்துவிடுவார்கள். கோழி கொடுப்பார்கள். அதேபோல், ஆலயத்தில் கருப்பண்ணசாமியின் சந்நிதியும் அமைந்துள்ளது. கருப்பசாமியை வேண்டிக்கொண்டு, ஆடு, கோழி பலியிடுவது, பிறகு அதைச் சமைத்து எல்லோருக்கும் பிரசாதமாக வழங்குவதும் நடைபெறும்.

சித்திரை மாதத்தின் இறுதியில், மே மாதத்தின் முதல் வாரத்தில் திருவிழா தொடங்கும். தினமும் ஒவ்வொரு வாகனத்தில் அம்மன் திருவீதியுலா வருவார். அன்னவாகனம், சிம்மவாகனம், காமதேனு வாகனம், கருட வாகனம், குதிரை வாகனம் என ஒய்யாரமாக அமர்ந்து வீதியுலா வரும் அழகைக் காணக் கண் போதாது. ஓர் வெள்ளிக்கிழமை நாளில், விழாவின் போது, பிரமாண்டமான பூப்பல்லக்கில் வீதியுலா வருவார் கெளமாரியம்மன்.

கோயில் திருவிழா என்றாலே, கொண்டாட்டங்களுக்கும் கேளிக்கைகளுக்கும் குறைவிருக்காது. இன்றைக்கும் மாறாமல் இங்கே கேளிக்கைகளும் உற்சாகங்களும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. திருவிழாவையொட்டி ஏராளமான கடைகள் முளைத்திருக்கும். பெண்களுக்கு, குழந்தைகளுக்குத் தேவையான பொருட்கள் விற்பனைக்கு இருக்கும். ராட்டினம் முதலானவை தவறாமல் இடம்பிடித்திருக்கும்.

விடியவிடிய கூத்து, கச்சேரி, நேர்த்திக்கடன், தரிசனம் என வீரபாண்டிப் பகுதியே அமர்க்களப்படும். பக்கத்தில் உள்ள மாவட்டக்காரர்களும் சென்னை மாதிரியான பெருநகரங்களில் குடியேறிவிட்டவர்களும் மறக்காமல், வீரபாண்டித் திருவிழாவுக்கு வருவார்கள். அப்படியே சுருளி அருவி, தேக்கடி, கும்பக்கரை அருவி என சுற்றிவிட்டு வருவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர்.

தேனி மாவட்டத்தின் மிகப் பிரமாண்டமான திருவிழா இதுதான். வீரபாண்டி கெளமாரியம்மன் கோயில் திருவிழாவின் போது, அம்மனுக்கு வேண்டிக்கொண்டால், எல்லா நல்லதுகளையும் இனி பார்த்துப்பார்த்துச் செய்வாள். நம் எல்லோருக்கும் தாயாகத் திகழ்பவள், ஒரு அம்மாவைப் போலவே கனிவும் கருணையுமாக நன்மைகள் வழங்குவாள் என்று பூரிக்கின்றனர் பக்தர்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x