விவிலிய மாந்தர்கள்: ஓநாய்களுக்கு நடுவே ஓர் ஆட்டுக்குட்டி!

விவிலிய மாந்தர்கள்: ஓநாய்களுக்கு நடுவே ஓர் ஆட்டுக்குட்டி!
Updated on
3 min read

இயேசு தன்னைப் பின்தொடர்ந்து வந்த 150 சீடர்களில் 12 அப்போஸ் தலர்களை மட்டும் தேர்ந்தெடுத்தார். அந்தப் பன்னிருவரையும் தனது வல்லமையால் ஆசீர்வதித்து, எல்லாவிதமான நோய்களையும் உடல் பலவீனங்களையும் குணமாக்குவதற்கும் அவர்களுக்கு அதிகாரம் கொடுத்தார்.

அந்த 12 பேரையும் மக்கள் மத்தியில் அனுப்புவதற்கு முன்பாக, பல அறிவுரைகளைக் கூறி அதன்படி நடக்க வேண்டும் என்று இயேசு உத்தரவிட்டார். அவர் கூறிய அறிவுரைகளில் முக்கியமானது ‘ஓநாய் நடுவே ஆடு’.

“இதோ! ஓநாய்கள் நடுவில் ஆடுகளை அனுப்புவதுபோல் உங்களை அனுப்புகிறேன். நீங்கள் என்னுடைய சீடர்களாக இருப்பதால், உங்களை ஆளுநர்களுக்கும் ராஜாக்களுக்கும் முன்னால் நிறுத்துவார்கள். எப்படிப் பேசுவது என்றோ என்ன பேசுவது என்றோ கவலைப்படாதீர்கள். நீங்கள் என்ன பேசவேண்டுமோ அது அந்த நேரத்தில் உங்களுக்கு அருளப்படும். நீங்கள் என் சீடர்களாக இருப்பதால் எல்லா மக்களும் உங்களை வெறுப்பார்கள்; ஆனால், முடிவுவரை சகித்திருப்பவர்தான் மீட்புப் பெறுவார்” என்றார்.

இயேசுவின் காலத்துக்குப் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த எரேமியாவின் வாழ்க்கை இயேசுவின் இறை அறிவுரைக்கு அப்படியே பொருந்திப் போகக்கூடியது.

யார் இந்த எரேமியா?

இஸ்ரவேல் தேசமாகிய யூதேயாவில் ஆனதோத் நகரத்தைச் சேர்ந்த தேவாலயக் குருவாகிய இல்க்கியாவின் மகனாக ஒரு குருத்துவக் குடும்பத்தில் எரேமியா பிறந்தார். கடவுள், அவரை யூதா மக்களுக்குக்கான தீர்க்கதரிசியாகத் தேர்ந்தெடுத்தார். விவிலியத்தில் இடம்பெற்றிருக்கும் எரேமியா புத்தகத்தை எழுதியவர் எரேமியாதான்.

அதில், கடவுள் தன்னுடைய செய்தியை மக்களிடம் சொல்லும்படி கூறியவை எரேமியாவின் தீர்க்கதரிசனமாக இடம்பெற்றிருக்கின்றன. அவற்றுடன் அந்தச் செய்திகளைச் சொல்லத் தொடங்கியபோது அவரது வாழ்நாள் முழுமையும் அவர் பெற்ற வாழ்க்கை அனுபவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

யூதேயாவின் இழிநிலை

கடவுள் எதற்காக எரேமியாவைத் தேர்ந்தெடுத்து யூதேயா மக்களிடம் அனுப்பினார்? மக்கள் வானுலகத் தந்தையின் ஆலயம் எனப் பெயர் சூட்டப்பட்ட அவரது ஆலயத்தில் விதவிதமான சிலைகளைப் பிரதிஷ்டை செய்து அதைத் தீட்டுப்படுத்தினார்கள். வழிபாடு என்ற பெயரில், பென்-இன்னோம் பள்ளத்தாக்கில் இருந்த தோப்பேத் என்ற இடத்தில் ஆராதனை மேடுகளைக் கட்டி, அங்கே தங்களுடைய பிள்ளைகளை உயிரோடு தீயிட்டுக் கொளுத்தி நரபலி கொடுத்தார்கள்.

பாலியல் முறைகேடு சர்வ சாதாரணமாக இருந்தது. புனித நாளான ஞாயிற்றுக்கிழமையிலும் காசுக்காக அலைந்துகொண்டிருந்தார்கள். இதனால் யூதேயா மக்களை அழிக்க முடிவு செய்த கடவுள், அதற்குமுன் அவர்கள் திருந்த எரேமியா வழியாக ஒரு வாய்ப்பை வழங்கினார். எரேமியா இளைஞனாக இருந்தபோது அவரை அழைத்தார் கடவுள்.

‘கெட்டது செய்வதை நிறுத்தி தீய வாழ்க்கையிலிருந்து திரும்ப வேண்டும்’ என்று யூதேயர்களிடம் போய் எரேமியாவைச் சொல்லச் சொன்னார். அதற்கு எரேமியா, “தந்தையே... நான் சின்னப் பையன், மக்களிடம் எப்படிப் பேச வேண்டும் என்று கூட எனக்குத் தெரியாதே” என்றார்.

அதற்குக் கடவுள் அவரிடம், ‘பயப்படாதே! நீ என்ன பேச வேண்டும் என்று நான் உனக்குச் சொல்லித் தருவேன். நான் உனக்கு உதவுவேன்’ எனத் தைரியம் தந்தார். தனது வயதைப் பொருட்படுத்தாமல் ஓநாய்கள் நடுவே செல்லும் ஒரு ஆட்டுக் குட்டியைப் போல் கடவுளின் செய்தியைச் சுமந்துகொண்டு மக்களிடமும் மதத் தலைவர்களிடமும் செல்ல முடிவுசெய்தார்.

ஒரு ஜாடியைப் போல் நொறுங்கும்

அப்போது கடவுள் ‘ஊர்தோறும் உள்ள மூப்பர்களையும் ஆலய குருவையும் ஓரிடத்தில் திரட்டு. அவர்கள் முன்னால் ஒரு மண் ஜாடியைப் போட்டு உடை. ‘எனது பேச்சைக் கேட்டு மனந்திருந்தாவிட்டால், எருசலேம் இப்படித்தான் நொறுங்கிப் போகும்’ என்று சொல்’ என்று சொன்னார். எரேமியா அவ்வாறே செய்தார். அப்போது, ஊர் மூப்பர்களுக்குக் கோபம் பொத்துக்கொண்டு வந்தது.

ஆலய குருவான பஸ்கூர் எரேமியாவை அடித்துத் துவைத்து அவருடைய கைகளையும் கால்களையும் ஒரு மரச் சட்டத்தில் ஒரு வைக்கோல் பொம்மையைப் போல மாட்டித் தொங்கவிட்டார். வேதனையில் இரவு முழுவதும் எரேமியாவால் நகர முடியவில்லை. மறுநாள் காலையில் பஸ்கூர் எரேமியாவை “பிழைத்துப் போ” என்று கூறி அவிழ்த்து விட்டார்.

 அப்போது எரேமியா, “இனி கடவுள் தரும் செய்திகளைக் குறித்துப் பேச மாட்டேன்” என்று சொன்னார். ஆனால் அதன்படி அவர் நடக்கவில்லை. “ கடவுளின் செய்தி எனக்குள் நெருப்பைப் போல் எரிந்துகொண்டிருக்கிறது.

அதை மக்களிடம் எடுத்துச் செல்லாமல் என்னால் இருக்க முடியாது” என்று சொன்னார். அதன்படியே மக்களைச் சந்தித்து அவர்களைத் தொடர்ந்து எச்சரித்து வந்தார்.

தண்டனையும் தப்பித்தலும்

ஆண்டுகள் உருண்டோடின. யூதேயாவை ஒரு புதிய அரசன் ஆட்சி செய்தார். நிலைமை மேலும் மோசமானது. குருமார்களும் போலித் தீர்க்கதரிசிகளும் எரேமியாவின் இறைச் செய்தியை வெறுத்தார்கள். அதிகாரிகளிடம் எரேமியாவை இழுத்துக்கொண்டு போய் “எரேமியாவின் அதிகப் பிரசங்கித்தனத்தை எங்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

இவனுக்கு மரண தண்டனை கொடுங்கள்” என்று வற்புறுத்தினார்கள். அதற்கு எரேமியா, “நீங்கள் ஒரு அப்பாவியைத்தான் கொல்லப் போகிறீர்கள். கடவுள் கூறியதையே நான் உங்களுக்குச் சொல்கிறேன். நானாக எதுவும் சொல்லவில்லை”என்றார். அதைக் கேட்ட அதிகாரிகள், “இவனுக்கு மரண தண்டனை கொடுப்பது சரியில்லை” என்று மறுத்தார்கள்.

இதற்குப் பிறகும் தன் உயிரைக் குறித்து எரேமியா கிஞ்சித்தும் கவலைப் படவில்லை. கடவுளுடைய செய்தியைச் சொல்லிக்கொண்டே இருந்தார். இப்போது அதிகாரிகளுக்கு எரிச்சல் வந்தது. அவர்கள் அரசனிடம் போய் “எரேமியாவைக் கொல்ல வேண்டும்” என்றார்கள். அதற்கு அரசன், அனுமதி கொடுத்தான். அவர்கள் எரேமியாவை, ஒரு பாழுங்கிணற்றில் போட்டார்கள். அவர் செத்துப்போய்விடுவார் என்று நினைத்தார்கள். அவர் சேற்றுக்குள் மூழ்கத் தொடங்கினார்.

இப்போது கடவுள் எபெத்மெலேக் என்ற அரண்மனை அதிகாரியின் மனத்தில் ஒளி உண்டாக்கினார். அவர் அரசனிடம் போய் “ எரேமியாவைக் கிணற்றுக்குள் போட்டுவிட்டார்கள்.

அவரை அப்படியே விட்டுவிட்டால் அவர் இறந்துவிடுவார்” எனப் பதறினார். எபெத்மெலேக்கின் உணர்வுக்கு மதிப்பளித்த அரசன், “உடனே தேவையான ஆட்களை அழைத்துக்கொண்டு போய் எரேமியாவைக் கிணற்றிலிருந்து தூக்கிவிடுங்கள்” என்று உத்தரவிட்டார். எரேமியா காப்பாற்றப்பட்டார். கடவுளின் செய்திகளை எடுத்துச் செல்லும் தனது இறைப்பணியை அவர் தொடர்ந்தார். அவரது தீர்க்கதரிசனங்கள் அனைத்துமே நடந்தேறின.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in