இன்று வாஸ்து வழிபாடு; கடன் தீரும்; கவலை மறையும்!

இன்று வாஸ்து வழிபாடு; கடன் தீரும்; கவலை மறையும்!
Updated on
1 min read

இன்று வாஸ்து வழிபாடு செய்ய உகந்த நாள். வாஸ்து பகவானுக்கான நாள். வீட்டை சுத்தமாக்கி, வாஸ்து பகவானை வணங்குங்கள். கடன் தீரும். கவலைகள் மறையும்.

‘எது எது எங்கெங்கே இருக்கணுமோ.. .அதது அங்கங்கே இருக்கணும்’ என்று சொல்வோம். ஆனால் இது எதற்குப் பொருந்துகிறதோ இல்லையோ... வாஸ்துவுக்கு சர்வநிச்சயமாகப் பொருந்தும்.

வாஸ்து பகவானுக்கு உரிய நாளில், அவருக்கு உரிய நேரத்தில் வீட்டை சுத்தமாக வைத்திருப்பதே வாஸ்து பகவானை வழிபடுவற்கு இணையானது என்கிறார்கள். வீடுதான் வாஸ்து பகவான்; வாஸ்து பகவானே வீடு!

வீட்டை சுத்தமாக பெருக்கிவிட்டு, நன்றாகத் துடைத்து, முடிந்தால் எல்லா சுவாமிப் படங்களுக்கும் பூக்களைக் கொண்டு அலங்கரித்து, விளக்கேற்றி வழிபடுங்கள். உங்களுக்குத் தெரிந்த ஸ்லோகங்களை, ஜபங்களைச் செய்துகொண்டிருங்கள்.

சாம்பிராணி ஏற்றி, பீரோ துவங்கி குழந்தைகளின் புத்தக அலமாரி, பூஜையறை, சமையலறையில் உள்ள அரிசி மற்றும் தானியங்களுக்கு சாம்பிராணிப் புகையைப் பரவவிடுங்கள்.

வீட்டு வாசல் நிலைக் கதவின் மேற்பகுதியில், மஞ்சள், சந்தனம், குங்குமம் பூசி, அதற்கு ஊதுபத்தியும் சாம்பிராணியும் காட்டி வணங்குங்கள்.

இன்று 23ம் தேதி செவ்வாய்க்கிழமை வாஸ்து பூஜை செய்ய உகந்த நாள். வாஸ்து பகவானுக்கு உரிய நாள். காலை 8.54 முதல் 9.30 மணி வரை வாஸ்து நேரம் என்கிறர்கள் ஜோதிடர்கள். அதேசமயம், இந்த நாள் முழுவதும் வாஸ்துக் கடவுளை வணங்குவது கூடுதல் பலம் சேர்க்கும் என்பது ஐதீகம்.

ஆகவே, இந்த நாளில், வீட்டையே கோயிலாக்கி, வீட்டையே வாஸ்து பகவானாக்கி வழிபடுங்கள். ஒட்டடை அடித்து, வீடு துடைத்து சுத்தப்படுத்துங்கள். மாலையில் வீட்டு வாசலில் விளக்கேற்றுங்கள். சாம்பிராணி புகையை வீடு முழுவதும் பரவச் செய்யுங்கள்.

வீட்டில் உள்ளவர்களை நடுக்கூடத்தில் அதாவது ஹாலில் அமர வைத்து எலுமிச்சையில் தீபமேற்றி, திருஷ்டி சுற்றிப் போடுங்கள். பிறகு வீட்டையே எலுமிச்சை தீபத்தால் திருஷ்டி கழியுங்கள்.  

சர்க்கரைப் பொங்கல், கேசரி முதலான இனிப்பு உணவை நைவேத்தியமாகப் படைத்து, அக்கம்பக்கத்தாருக்கு வழங்குங்கள். ஆனந்தமாய் வாழ்வீர்கள். கடன் முதலான தொல்லைகளில் இருந்து விடுபடுவீர்கள். கஷ்டங்கள் யாவும் பஞ்செனப் பறந்துவிடும். சகல ஐஸ்வர்யங்களும் பெருகும். சந்தோஷம் குடிகொள்ளும்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in