Published : 25 Apr 2019 11:31 AM
Last Updated : 25 Apr 2019 11:31 AM

சரும நோய் தீர்க்கும் எண்ணெய் பிரசாதம்

‘‘ஏனமாய் நிலங்கீண்ட என்னப்பனே கண்ணா

என்றுமென்னையாளுடை வானநாயகனே மணிமாணிக்கச்சுடரே

தேனமாம்பொழில்தண் சிரீவரமங்கை

வானமாமலையே அடியேன் தொழ வந்தருளே’’

- என்று நம்மாழ்வார் அருளிய திருவாய்மொழிப் பாசுரம், நாங்குநேரி வானமாமலை கோயிலின் சிறப்புகளைப் பறைசாற்றுகிறது.

108 வைணவத் திருத்தலங்களில் 58-வது தலமாக விளங்கும் நாங்குநேரி வானமாமலை பெருமாள் கோயில் பல சிறப்புகளைத் தன்னகத்தே கொண்டு விளங்குகிறது. இத்தலத்தில் வானமாமலை என்கிற தோத்தாத்திரி நாதர் என்ற திருநாமத்துடன் பெருமாள் மூலவராக பட்டாபிஷேகக் கோலத்தில்  வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். ஆதிசேஷன் குடை பிடிக்க வைகுண்டத்தில் மகாவிஷ்ணு வீற்றிருப்பது போன்ற திருக்கோலத்தில், சுவாமியை இத்தலத்தில் தரிசிக்கலாம்.

தாயாரின் திருநாமம் ஸ்ரீவரமங்கை. தன்னை நாடி வருபவர்களுக்கு வேண்டும் வரங்களை தருவதாக பக்தர்கள் இவரை கொண்டாடுகின்றனர். உற்சவரின் திருநாமம் தெய்வநாயகப்பெருமாள்.

ஜீயர் மடத்தால் வழங்கப்படும் எண்ணெய்

இத்தலத்தில் மட்டுமே ஆண்டுமுழுவதும் வானமாமைலை பெருமாளுக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் நடைபெறுகிறது. அபிஷேகம் செய்யப்படும் எண்ணெய் சேகரிக்கப்பட்டு நாங்குநேரி வானமாமலை ஜீயர் மடத்தால் பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படுகிறது.

இந்தப் பிரசாத எண்ணெயானது சகல நோய்களையும் தீர்க்கும் அருமருந்தாகத் திகழ்கிறது. தீராத சருமநோயால் பீடிக்கப்பட்டவர்கள் இந்த எண்ணெயை வாங்கி நாள்தோறும் சிறிது  பருகுவதுடன், கோயில் அருகிலுள்ள சேற்றுத்தாமரை தீர்த்தத்திலிருந்து எடுக்கப்பட்ட மண்ணையும், எண்ணெயையும் கலந்து சருமத்தில் பூசி வந்தால் நாட்பட்ட சரும நோய்களும் பறந்து போகும் என்று நம்பப்படுகிறது.

இந்த எண்ணெய்க் கிணறு அருகே அகத்தியர் தனிச் சந்நிதியில் வீற்றிருக்கிறார். எண்ணெய் பிரசாதத்தின் மகிமை பற்றி அகத்தியர் தான் இயற்றிய `அகத்தியம்’ என்ற நூலில் புகழ்ந்து பேசியுள்ளார்.

தை அமாவாசை அன்று வானமாலை பெருமாளுக்கு ஒரு கோட்டை எண்ணெய்க் காப்பு  உற்சவம் நடைபெறும். அன்று இரவில் கருட வாகனத்தில் பெருமாள் பவனி வருவார். அதற்கடுத்த இரண்டு நாட்கள் தெப்பத் திருவிழா நடைபெறும்.

இந்தத் தலத்தில் பங்குனி திருவிழா, வானமாமலை ஸ்ரீ மதுரகவி ராமானுஜ ஜீயர் சுவாமிகள் அனுக்கிரகத்துடன், மார்ச் 11-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.  10-ம் திருநாளான மார்ச் 20-ம் தேதி ஸ்ரீ வரமங்கை தாயார் சமேத தெய்வநாயகப் பெருமாளை தங்கத்தேரில் எழுந்தருளச் செய்து, ஜீயர் சுவாமிகள் வடம்பிடிக்க தேரோட்டம் விமரிசையாக நடைபெறுகிறது. அன்று மாலையில் பெருமாள் தாயாருக்குத் திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x