Published : 04 Apr 2019 11:07 AM
Last Updated : 04 Apr 2019 11:07 AM

தெய்வத்தின் குரல்: யார் சரியான குரு, சத்குரு?

சாரீரத்தை பூர்ணமாகிவிட்டால் குருவிடம் பூர்ண சரணாகதியும் வந்துவிடும். அப்போது அவர் வாய் வார்த்தையாக உபதேசிப்பது, அதை இவன் மூளை மட்டத்தில் இறக்கிக் கொள்வது, நன்றாக இறக்கிக் கொண்டோமா என்று சோதித்துக் கேள்விகள் கேட்பது என்பதற்கெல்லாம் கூட அவசியமே இல்லாமல் போய்விடும்.

குரு அநுபவத்தை அப்படியே நேராக சிஷ்யனின் இருதயத்துக்குள்ளே இறக்கிவிடுவார். மற்றவர்களுக்கு அவன் சொல்லிக் கொடுப்பதற்காகத்தான் அப்போது அவர் மூளை மட்டத்திலும் அவனுக்கு விளக்கங்கள் கொடுத்து உபதேசம் செய்வதாக இருக்கும்.

அந்த சரணாகதியைத்தான் சாஸ்திரம் தலைமையானதாக விதித்திருக்கிறது.

சரணாகதியில் இரண்டு தினுசு சொல்வதுண்டு: ‘மர்கட கிசோர ந்யாயம்' என்றும். ‘மர்கட கிசோரம்’ என்றால் குரங்குக் குட்டி, ‘மார்ஜார கிசோரம்’ என்றால் பூனைக்குட்டி. குரங்கு ஜாதியில் குட்டிதான் தாயைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருக்கும். அப்படி பக்தன் தன் முயற்சியால் பகவானைப் போய்ப் பிடித்துக் கொள்ளணும் என்பது மர்கட கிசோர ந்யாயம்.

பூனை ஜாதியைப் பார்த்தாலோ, குட்டி தன்னை ரக்ஷித்துக்கொள்ள வேண்டும் என்ற கவலையே இல்லாமல் அது பாட்டுக்குக் கிடக்கிறது. தாய்ப் பூனைதான் அதை வாயால் கௌவிக் கொண்டு இடம் இடமாக எடுத்துப்போகிறது. இப்படி ஸ்வய ப்ரயத்னம் இல்லாமல் பகவானே பார்த்துக்கொள்ளட்டும் என்று இருப்பதுதான் மார்ஜார கிசோர ந்யாயம்.

இந்த இரண்டு ந்யாயமும் பகவான் - பக்தன் என்ற ஜோடி விஷயமாகச் சொன்னது. இதை குரு - சிஷ்யன் என்ற ஜோடிக்கு வைத்துப் பார்க்கிற போது சுருக்கமாக ஒன்று மாத்திரம் சொல்லலாமென்று தோன்றுகிறது. முதலில் சிஷ்யன் குருவைத் தேடிப்போய் அவரைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்ளவேண்டும்.

ஏனென்றால் அவருக்கு இவன் தேவைப்படுவதைவிட இவனுக்குத்தானே அவர் அத்தியாவசியமாகத் தேவைப்படுகிறார்? அதனால் மர்கட கிசோர ந்யாயத்தில் இவனே பிடித்துக் கொள்ளணும். அப்படிப் பிடித்துக் கொண்டால் அவர் மார்ஜார கிசோர ந்யாயத்தை நடத்த அரம்பித்து விடுவார் அதாவது அவரே இவனுக்கு முழுப் பொறுப்பும் எடுத்துக்கொண்டு இவனை நடத்திப்போவார்.

'யார் சரியான குரு, சத்குரு? அவரை எப்படிக் கண்டுபிடித்து அடைவோம்?' என்று நிஜமான தாபத்துடன் ஒருவன் இருந்தானானால், ஈச்வரனே தூண்டிவிட்டு அப்படிப்பட்ட ஒருவர் இவனைத் தேடி வருவார் என்று சொல்லியிருக்கிறது. அதற்கு நிறைய எடுத்துக்காட்டுகளும் இருக்கிறது.

இதைப் பார்த்தால் - யாரைப் பிடிப்பது என்றே தெரியாமல் சிஷ்யன் தவித்தபோது குருவே வந்து பிடித்துக் கொள்கிறார் என்பதைப் பார்த்தால் - முதலில் மார்ஜார கிசோர ந்யாயம் மாதிரியான ஒன்றாகத் தோன்றுகிறது. ஆனால் குரு வந்த பிறகு சிஷ்யனும் அவரை மர்கட கிசோரமாகப் பிடித்துக்கொள்ளத்தான் வேண்டும்.

சிஷ்யனுக்காகத் தவிப்பார்

குருவுக்கும் சிஷ்யன் தேவைப்படத்தான் செய்கிறான். அவர் கற்றதை, அநுபவித்ததை யாருமே வாங்கிக்கொள்ள வராவிட்டால், அவருந்தான் அது தன்னோடு போய்விடப்படாதே என்று சிஷ்யனுக்காகத் தவிப்பார்.

குரு பண்ணவேண்டிய ஒன்றே ஒன்று, ஞானத்தைத் தருவது. அதற்காகத்தானே குரு என்று ஒருவரிடம் போவது? அதை அவர் எப்படிப் பண்ணுவாரோ, பண்ணிவிட்டுப் போகட்டும், ஆனால் நிச்சயமாக பண்ணுவார் என்ற நம்பிக்கையுடன் - 'ச்ரத்தாவான்'களாக - நம் காரிய மாக அவரைக் கெட்டியாய்ப் பிடித்துக் கொண்டிருப்போம்.

குரு- சிஷ்ய பாவம் தொடரும்

குட்டியும் தாயும் ஒரு காலத்திற்கு அப்புறம் ஒன்றையொன்று விட்டுவிடுவதுபோல் குரு - சிஷ்யர்கள் விடுவது என்பதே இல்லை. சிஷ்யன் - அத்யாத்மிகத்தில் குட்டியாக குருவிடம் வந்தவன் - அவருடைய அநுக்ரஹத்தால், அவர் தாயாக இருந்து ஊட்டுகிற ஞானப் பாலால் ஆத்ம ஞானியாகவே பூர்ண வளர்ச்சி பெற்ற பிறகுங்கூட குரு - சிஷ்ய பாந்தவ்யம் இருந்துகொண்டே இருக்கும்.

அத்வைதமாகக் கரைந்து போய்விடாமல் குரு - சிஷ்யாள் என்று பரம ப்ரியமான ஒரு உறவு எந்நாளும் இருக்கிறது!

ப்ரேமை என்பதன் பெருமை தெரிவதற்காக பராசக்தியின் லீலையில் இப்படி அத்வைதிகளுக்கும் குரு - சிஷ்ய த்வைதம் மாதிரியான ஒன்று சாச்வதமாக இருக்கிறது என்றே சொல்லத் தோன்றுகிறது. கருணை என்று குரு காட்டும் ப்ரேமை, பக்தி என்று சிஷ்யன் காட்டும் ப்ரேமை. சொல்ல வந்த விஷயம், சிஷ்யனானவன் குருவிடம் சரணாகதி செய்ய வேண்டும் என்பது. பல குருமார்கள் வாய்த்தாலும் அவர்களில் முக்யமானவரிடம் சரணாகதி, மற்றவர்களெல்லாரிடமும் ஆத்மார்த்தமான மரியாதை என்று இருக்க வேண்டும்.

(தெய்வத்தின் குரல் ஏழாம் பாகம்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x