Published : 11 Apr 2019 09:47 AM
Last Updated : 11 Apr 2019 09:47 AM

மகரம் - விகாரி வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்

மகர ராசி வாசகர்களே!

பிறர் செய்ய முடியாத சவாலான காரியங்களை ஏற்றுச் சாதித்துக் காட்டுவதில் வல்லவர்களான நீங்கள், சிறந்த பேச்சாளர்கள். உங்கள் ராசிக்கு 7-வது ராசியில் இந்த ஆண்டு பிறப்பதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். புதிய திட்டங்கள் நிறைவேறும். வீட்டில் அடுத்தடுத்து சுபநிகழ்ச்சிகள் நடக்கும். பிள்ளைகளின் போக்கில் நல்ல  மாற்றம் ஏற்படும். பழைய நகைகளை விற்று, புது டிசைனில் ஆபரணங்கள் வாங்குவீர்கள்.

நண்பர்கள், உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். ஷேர் மூலம் பணம் வரும். மனைவி வழியில் இருந்த பனிப்போர் நீங்கும். டி.வி., ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் போன்ற சாதனங்கள் வாங்குவீர்கள். வீட்டில் கூடுதலாக ஒரு தளம் கட்டுவீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வழக்கு சாதகமாகும். உங்கள் ராசிக்கு 2-ம் வீட்டில் சுக்கிரன் அமர்ந்திருக்கும் போது இந்த விகாரி வருடம் பிறப்பதால் இடைவிடாது போராடி வெற்றி பெறுவீர்கள்.

சாதுர்யமாக, சமயோஜிதமாக யோசித்து பழைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பீர்கள். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். விஐபிக்கள் உதவுவார்கள். டி.வி., ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின், செல்போன் போன்ற சாதனங்கள் வாங்குவீர்கள். புது வாகனங்கள் அமையும். தள்ளிப்போன திருமணப் பேச்சுவார்த்தை கூடி வரும். இழுபறியாக இருந்த வேலைகள் முடிவடையும்.

இந்த ஆண்டு முழுக்க சனி 12-ல் மறைந்து விரயச் சனியாகத் தொடர்வதாலும், கேதுவும் 12-ம் வீட்டில் நிற்பதாலும் வீண் பழி, பண இழப்பு, ஏமாற்றங்கள் வந்து போகும். தூக்கம் குறையும். தன்னம்பிக்கை குறையும். தாயாரின் உடல்நலம் பாதிக்கும். அவருக்கு முதுகுத் தண்டில் வலி, பல், முழங்கால், மூட்டு வலி வந்து செல்லும். தாய்வழி உறவினர்களுடன் பனிப்போர் வெடிக்கும்.

இளைய சகோதரர்கள் உங்களைத் தவறாகப் புரிந்து கொள்வார்கள். சந்தேகப் புத்தியால் நல்லவர்களை இழக்க வேண்டி வரும். யாரை நம்புவது என்கிற மனக்குழப்பத்துக்கு ஆளாவீர்கள்-. ஒருமுறைக்குப் பலமுறை யோசித்துச் சில முடிவுகளை எடுக்கப் பாருங்கள். பழைய கடனை நினைத்து அவ்வப்போது கலங்குவீர்கள்.

ராகு இந்த ஆண்டு முழுக்க 6-ம் வீட்டிலேயே தொடர்வதால் வி.ஐ.பிக்கள் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்ளுமளவுக்கு அவர்களுக்கு நெருக்கமாவீர்கள். உங்களை ஏமாற்றிக்கொண்டிருந்தவர்களை இனம்கண்டு ஒதுக்குவீர்கள். புராதனப் புத்தகங்கள், நாவல்கள் மீது நாட்டம் அதிகரிக்கும். ஆன்மிக வழிபாட்டில் மனம் லயிக்கும். வெளிமாநிலத்துப் புண்ணிய ஸ்தங்களுக்கும் சென்று வருவீர்கள். வெளி நாட்டிலிருக்கும் நண்பர்கள், உறவினர்களால் ஆதாயம் உண்டு. நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் காத்திருந்த அயல்நாட்டுப் பயணம் சாதகமாக அமையும். சித்தர்களைச் சந்தித்து ஆசி பெறுவீர்கள்.

14.04.2019 முதல் 18.05.2019 வரை குரு உங்கள் ராசிக்கு அதிசார வக்கிரமாகி 12-ம் வீட்டில் இருப்பதால் சின்னச் சின்னச் செலவுகள் அதிகமாகிக் கொண்டே போகும். ஆக்கப்பூர்வமான பணிகளுக்காக வெளியிலும் கொஞ்சம் கடன் வாங்க வேண்டியிருக்கும். புண்ணிய ஸ்தலங்கள் பலவற்றிற்கும் சென்று வருவீர்கள். பூர்வீகச் சொத்தில் பாகப்பிரிவினை நல்லவிதத்தில் முடியும். சிலருக்கு வெளிநாட்டுப் பயணம் அமையும்.

குருபகவான் 19.05.2019 முதல் 27.10.2019 வரை லாப வீட்டிலேயே தொடர்வதால் தொட்டது துலங்கும். திருமணம், சீமந்தம், கிரகப்பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகள் வீட்டில் ஏற்பாடாகும். கோயில் கும்பாபிஷேகத்துக்குத் தலைமை தாங்குவீர்கள்-.

செலவுகளைக் குறைக்கத் திட்டமிடுவீர்கள். பிதுர்வழிச் சொத்து கைக்கு வரும். உறவினர்கள் சிலர் உங்களின் அதிரடியான வளர்ச்சியைக் கண்டு பொறாமைப்படுவார்கள். 28.10.2019 முதல் 27.03.2020 வரை 12-ம் வீட்டில் குரு அமர்வதால் எதிர்பாராத பயணங்கள் அதிகரிக்கும். கனவுத் தொல்லை, தூக்கமின்மை வந்து செல்லும். எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியவில்லையே என்று ஆதங்கப்படுவீர்கள்.

பைனான்ஸ் தொழில் செய்பவர்கள் தகுந்த பத்திரம், ஆவணம் இல்லாமல் யாருக்கும் பணம் தரவேண்டாம். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்தியோகத்தின் பொருட்டு அவர்களைப் பிரிய வேண்டிய சூழ்நிலை உருவாகும். கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவரின் ஆலோசனைக்கேற்ப உணவு முறைகளை அமைத்துக்கொள்வது நல்லது. தந்தையாருக்கு நெஞ்சு வலி, அசதி, சோர்வு வந்துபோகும். அவருடன் அவ்வப்போது மனத்தாங்கல் வரும். தந்தைவழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்துசெல்லும்.

magaramjpg

வியாபாரிகளே! எதைத் தொட்டாலும் நட்டத்தில் முடிந்ததே! இனிப் புதுப் புதுத் திட்டங்களால் போட்டியாளர்களைத் திணறடிப்பீர்கள். தேங்கிக் கிடந்த சரக்குகளைச் சாமார்த்தியமாக விற்றுத்தீர்ப்பீர்கள். பழைய வேலையாட்களை மாற்றிவிட்டுப் புதியவர்களை நியமித்தாலும் அவர்கள் மீது ஒரு கண் வையுங்கள். வாடிக்கையாளர்களைக் கவரச் சலுகைத் திட்டங்களை அறிவிப்பீர்கள். கொடுக்கல்வாங்கலில் இருந்த சிக்கல்கள் தீரும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்களிடையே கருத்துவேறுபாடுகள் மறையும். விலகிச் சென்ற பங்குதாரர்கள் மீண்டும் இணைவார்கள்.

உத்தியோகஸ்தர்களே! பதவி உயர்வு கிடைக்காமல் தவித்தீர்களே! அதிகாரிகளால் அலைக்கழிக்கப்பட்டீர்களே! சக ஊழியர்களாலும் தர்மசங்கடமான சூழ்நிலைக்குத் தள்ளப் பட்டீர்களே! இனி அந்த அவல நிலை மாறும். எதிர்பார்த்த பதவியுயர்வு, சம்பள உயர்வு எல்லாம் இப்பொழுது கிட்டும். சக ஊழியர்கள் உங்களிடம் அன்பாகப் பேசினாலும் மேலதிகாரியிடம் உங்களைப் புகார் செய்து கொண்டுதான் இருப்பார்கள்.

பெண்களுக்கு: மே மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை குரு சாதகமாவதால் தடைகள் யாவும் விலகும். குடும்பத்தில் நிம்மதி உண்டு. மகனுக்கு நல்ல மணப்பெண் அமைவார். மகளுக்கு வேலை கிடைக்கும். மாமியார் மனம்விட்டுப் பேசுவார். நாத்தனாரின் நர்த்தனம் குறையும். சகோதரர்கள் வகையில் பயனடைவீர்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். ஆடை, அணிகலன்கள் சேரும். சனியின் போக்கு சரியில்லாததால் வேலைச்சுமை, மறைமுக எதிர்ப்பு, வீண் கவலைகள் வந்து செல்லும். மாமியார் குறைப்பட்டுக் கொள்வார்கள். திடீர்ப் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும்.

பரிகாரம்: அருகிலிருக்கும் பாபா கோயிலுக்கு வியாழக்கிழமைகளில் சென்று வணங்குவதுடன் ரோஸ் மில்க்கைத் தானமாகக் கொடுங்கள். நன்மை தொடரும்.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x