Published : 25 Apr 2019 11:43 AM
Last Updated : 25 Apr 2019 11:43 AM

தெய்வத்தின் குரல்: இம்மை மறுமை காவிரி

இம்மை என்று எடுத்துக் கொண்டால் இந்தத் தமிழ் தேசத்துடைய இயற்கை வளத்துக்கு முதல் காரணமாயிருப்பது காவிரிதான். அந்தக் காவிரி இங்கே வரக் காரணம் யார்? பிள்ளையார்தானே? அவர் காக்கா ரூபத்தில் கொடகுக்குப் போய் அகத்தியருடைய கமண்டலுவைக் கவிழ்த்துவிட்டதில்தானே காவிரி உண்டாயிற்று? அவருடைய சம்பந்தத்தால் இம்மைக்குப் பயிர் - பச்சையும் உயிருக்கு ஜீவாதாரமான தீர்த்தமும் நமக்குத் தாயாராகக் காவிரி தருகிறாள்.

திருத்தலங்கள்

இம்மைக்கான இவற்றைத் தருவதோடு மட்டும் நிற்காமல் காவேரி மறுமைக்கும் பரமோபகாரம் பண்ணியிருக்கிறாள். எப்படியென்றால் River Valley Civilization என்கிறபடி ஒரு பெரிய நதியை ஒட்டிய கரைகளில்தான் கஷ்டமில்லாமல் வயிற்றுக்கானது கிடைத்துவிடுவதால் ஜனங்கள் விச்ராந்தியாக உசந்த  சிந்தனைகளில் ஈடுபட்டு ஒரு பெரிய நாகரிகத்தை உண்டாக்க நிரம்ப வசதி ஏற்பட்டிருக்கிறது. அப்படி நம்முடைய கலாசாரம் உன்னதமாக ரூபமாவதற்குக் காவேரியே உபகாரம் பண்ணியிருக்கிறாள். காவேரி என்றால் முடிவாக அவளைப் பாயவிட்ட விக்நேச்ரவரர்தான்.

இந்த தேசத்தினுடைய ஆத்மிக பாரம்பர்ய விசேஷத்தினால் இங்கே ஒரு கலாசாரம் உண்டாகிறதென்றால் அது ஏதோ கண்ணுக்கு, காதுக்கு மாத்ரம் சில்பம், சித்ரம், நாட்டியம், கானம் என்று முடிந்து போகாமல் இவற்றின் வழியாக ஆத்மாவை உசத்திக் கடைத்தேற்றுவதாகவே இருக்கும். நம்முடைய மறுமைக்கும் பரமோபகாரம் பண்ணுவது.

நம்முடைய சில்பம், சித்ரம், ஆடல், பாடல் முதலான எல்லாக் கலைகளும், அறிவியலுங்கூடத்தான், அர்ப்பணமாயிருப்பது கோயிலில்தானே? .அப்படிப்பட்ட கோயில்கள் தமிழ்நாட்டிலுள்ளது போல வேறே ஒரு நாட்டிலும் இல்லை, தமிழ்நாட்டிலும் மிகப் பெருவாரியான கோயில்கள் காவேரியின் கரையைத் தொட்டுக் கொண்டிருக்கும் பிரதேசத்தில்தான். குறிப்பாக, சோணாடு என்கிற சோழ நாட்டில்தான்.

108-ல் நாற்பது திவ்ய தேசங்கள்

அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவர் தேவாரம் பாடிய ஷேத்ரங்களைப் ‘பாடல் பெற்ற தலங்கள்' என்பார்கள். அப்படி மொத்தம் 274. அதில் கிட்டத்தட்ட முக்கால்வாசி, 90 ஸ்தலங்கள், சோழ நாட்டின் காவேரிக்கு வடக்கு- தெற்குக் கரைகளில் இருக்கிறவைதான். ஆழ்வார்கள் பெருமாள் மேல் திவ்யப்பரபந்தம் பாடின க்ஷேத்ரங்களை ‘திவ்ய தேசம்' என்பார்கள். அப்படி 108.

அதில் சைவ க்ஷேத்ரங்கள் அளவுக்குச் சோழநாட்டில் இல்லாவிட்டாலும், 108-ல் நாற்பது திவ்யதேசம் காவேரி வடகரை, தென்கரைகளில் இருக்கின்றன. அடுத்தாற்போல் வரும் தொண்டை நாட்டில் அதில் ஏறக்குறைய பாதியான இருபத்திரண்டுதான்.

சைவர்கள் தங்கள் க்ஷேத்ரங்களுக்குள் முதலிடம் கொடுத்துக் ‘கோயில்' என்றே குறிப்பிடுவது சிதம்பரம். அது காவிரிக் கரையில் இல்லை. வைஷ்ணவர்கள் இதே மாதிரி ‘கோயில்' என்று முதல் ஸ்தானம் தந்து சொல்கிறது ஸ்ரீரங்கம்.

அதுதான் காவேரிக்கே ஜீவ மத்யமான ஸ்தானத்தில் இருக்கிறது. ‘உபய காவேரி' என்பதாக இருபக்கமும் காவேரி நதி சூழ, ‘காவேரி ரங்கன்' என்றே கியாதி பெற்றிருக்கிற பெருமாள் அங்கே பள்ளி கொண்டிருக்கிறார்.

ரங்கம் - தமிழில் ‘அரங்கம்' - என்றால் நாட்டிய நாடகங்கள் நடக்கும் மேடை. அதைப் பார்க்க ஜனங்கள் கூடியிருக்கும் ஹாலையும் சேர்த்து, என்றும் சொல்லலாம். அதாவது 'ஸ்டேஜ்' மாத்திரம் என்றும் சொல்லலாம்,‘தியேட்டர்' முழுவதும் என்றும் சொல்லலாம். லோக நாடகத்தை ஸ்வப்ன கற்பனையாகப் பண்ணும் மஹா பெரிய நாடகக்காரன் ரங்கத்தில்தானே அந்த நாடகம் நடத்தணும்? இதே காரியத்தைப் பரமேச்வரனாக இருந்து கொண்டு நாட்டியமாக அவன் பண்ணும் சிதம்பரத்தில் அவனுடைய சன்னிதிக்கு ‘சபை' என்று பெயர். 'சித்சபை' என்பார்கள்.

ஜனங்களுக்குத் தெரிந்த பெயர் ‘கனக சபை'. இந்த இடத்தில் ‘சபை' என்பதற்கு, 'ரங்க'த்துக்கு என்ன அர்த்தமோ அதே அர்த்தந்தான். அதாவது நாட்டிய - நாடக சாலை என்றே அர்த்தம். இப்போதுங்கூட சங்கீதக் கச்சேரி, நடனக் கச்சேரி நடத்துகிற சங்கங்களெல்லாம் ‘சபா', ‘சபா' என்றுதானே பேர் போட்டுக்கொள்கின்றன? ‘சபா'வில் ஒருத்தர் முதல் தடவையாக டான்ஸ் கச்சேரி பண்ணுவதை ‘அரங்கேற்றம்' என்கிறார்கள். இங்கே சித்சபை, ஸ்ரீரங்கம் இரண்டும் ஜாடையடிக்கின்றன.

வித்தியாசமே அழகு

நடைமுறையிலுள்ள வழக்கத்தை அனுசரித்து நாட்டியம் என்றால் டான்ஸ், நாடகம் என்றால் ட்ராமா என்ற அர்த்தத்தில் நாட்டிய - நாடக சாலை என்று நடுவே சொன்னேன், ஆனால் ‘நாட்டிய சாஸ்த்ரம்' என்கிற பரதரின் பெரிய ப்ரமாணப் புஸ்தகத்தில் 'நாட்டியம்' என்பது முக்கியமாக இப்போது நாம் ‘நாடகம்' என்று சொல்வதைத் தான் குறிக்கிறது, அதிலேயே நடனத்தைப் பற்றியும் வருகிறது.

அது மட்டுமில்லாமல் சங்கீதம் பற்றியும் வருகிறது. 'நட' என்ற வேர்ச் சொல்லிலிருந்துதான் நாடகம், நாட்யம், நடனம் - தமிழில் 'நடப்பது' - எல்லாமே வந்திருக்கின்றன. அது அசைவை, motion -ஐக் குறிக்கிற தாது (வேர்ச்சொல்) ....

நடனமாடும் தகப்பனாருக்குக் கோயிலாக ஒரு நாட்டிய - நாடக சாலை ‘சபை' என்றே இருக்கிறதென்றால், ஸ்வப்னமாகவே ட்ராமா பண்ணும் மாமாவுக்கும் அப்படி ஒன்று இருக்கணும் என்று தீர்மானித்த விக்நேச்வரர், தத்வத்தில் ஒன்றேயானாலும், பெயரில் வித்யாசம் இருந்தால்தான் அழகு என்று தாம் ப்ரதிஷ்டித்த மூர்த்தியின் சன்னிதிக்கு 'ரங்கம்' என்று பெயர் வைத்தார்.

(தெய்வத்தின் குரல் ஏழாம் பகுதி)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x