Published : 28 Mar 2019 11:29 AM
Last Updated : 28 Mar 2019 11:29 AM

உயிர் வளர்க்கும் திருமந்திரம் 71: கொடும்கூற்றுதான் என்ன செய்யும்?

கோயில்களல் ஒன்பான் கோள்களுக்கென்று (நவக்கிரகங்களுக்கு) ஒரு தனி முகப்பு அமைக்கப் பெற்றிருக்கும். கோளாறு பார்த்தலும் கோள் வழிபாடும் ஆசீவகச் செல்வாக்கால் வந்த பழைய மரபுகளே என்றாலும் கோள்கள் ஒன்பதையும் ஒருங்கே பீடமேற்றி, ஒன்றாக வழிபடும் முறைமை பதினோராம் நூற்றாண்டில் முதலாம் குலோத்துங்கச் சோழன் (பொ.ஆ.1070-1122) காலத்தில் ஏற்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. முதலாம் குலோத்துங்கன் இந்த முறைமையை எங்கிருந்து பிடித்தான்? உத்தரப் பிரதேசத்துக் கன்னோசியில் நிலையெடுத்து ஆண்டுகொண்டிருந்த காகடவாள மன்னர்களிடமிருந்து பிடித்திருக்கலாம்.

காகடவாளர்கள் குலோத்துங்கனோடு நட்புறவு பூண்டவர்கள். காகடவாளன் கோவிந்தசந்திரன் (பொ.ஆ.1114-1155) அல்லது அவனது தகப்பன் மதனபாலனின் (பொ.ஆ.1104-1113) நிறைவுபெறாத கல்வெட்டொன்று குலோத்துங்க சோழனின் ஆட்சியாண்டு 41-ல் சோழத் தலைநகரான கங்கை கொண்ட சோழபுரத்தில் காணப்படுவது காகடவாள-சோழ நட்புறவுக்குச் சான்று சொல்கிறது.

சூரியனுக்குத் தனிக்கோயில்

‘காகடவாளர்கள்’ என்பது ‘கிரகவாரர்கள்’ என்பதன் சிதைவாம்; ‘கிரகவாரர்கள்’ என்றால் ‘கோளை வென்றவர்கள்’ என்று பொருளாம். இந்தக் காகடவாளர்களின் பின்னாளைய அரசர்களில் ஒருவனான செயச்சந்திரனின் (பொ.ஆ.1170-1194) மகளாகிய சம்யுக்தையைப் பிருதிவிராசன் (பொ.ஆ.1178-1192) தூக்கிக்கொண்டு போனதாக ஒரு கட்டுக்கதை வழங்கி வருவது தனி.

சூரிய வழிபாட்டில் நாட்டம் மிகுந்த காகடவாளர்களின் தொடர்பில்தான் முதற் குலோத்துங்கன், அதுவரை இல்லாத வகையில், சூரியனுக்குத் தனிக் கோயில் கட்டியிருக்க வேண்டும்; அக்கோயிலில் தனிப்பீடம் அமைத்துக் கோள்கள் அனைத்தையும் ஒருங்கே வழிபடும் முறைமையை உண்டாக்கியிருக்க வேண்டும்.

தற்போது சூரியனார் கோயில் என்று வழங்கப்பட்டு வரும் அந்த ஆலயம் அப்போது ‘குலோத்துங்கச் சோழ மார்த்தாண்ட ஆலயம்’ என்று வழங்கப்பட்டது. மார்த்தாண்டம் என்பது சூரியனுக்கு வழங்கப்படும் பெயர். எட்டாம் நூற்றாண்டில் காசுமீரத்தின் அனந்தநாகில் கட்டப்பட்ட சூரியனார் கோயிலுக்கு மார்த்தாண்டம் என்று பெயர்.

நவக்கிரகங்கள் இல்லாத வைணவக் கோயில்கள்

சிவன் கோயில்களில் மட்டுமே ஒன்பான் கோள்களை ஒருங்கிணைத்துப் பீடம் அமைக்கப் பட்டிருப்பதைப் பார்க்கலாம். பெருமாள் கோயில்களாகிய விண்ணகரங்களில் ஒன்பான் கோள் வழிபாடு கிடையாது. வைணவத்தில் பெருமாளைத் தவிர வேறு எதற்கும் முதன்மை கிடையாது. மதுரை, கூடலழகப் பெருமாள் கோயிலில் மட்டுமே ஒன்பான் கோள்களுக்குத் தனி முகப்பு அமைந்திருக்கும் நிலையில், சைவக் கோயில்களிலோ ஒன்பான் கோள்கள் அமையாத ஆலயங்களே கிடையாது எனலாம்.

‘பாண்டி நாட்டில் சமண சமயம் மேலோங்கி நிற்கிறது; வந்து சைவம் தழைத்தோங்க வகை செய்க’ என்று பாண்டிமாதேவி மங்கையர்க்கரசியும் அமைச்சர் குலச்சிறையும் திருஞான சம்பந்தர்க்குத் தூது விடுத்தார்கள். சம்பந்தர் கிளம்பினார். அப்போது உடனிருந்த திருநாவுக்கரசர் சம்பந்தருக்குச் சொன்னதாகப் பெரிய புராணத்தின் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் புராணத்தில் சேக்கிழார் எழுதுகிறார்:

அரசுஅருளிச் செய்கின்றார்:

‘பிள்ளாய்! அந்த

அமண்கையர் வஞ்சனைக்குஓர்

அவதி இல்லை;

உரைசெய்வது உளது:உறுகோள்

தானும் தீய;

எழுந்துஅருள உடன்படுவது

ஒண்ணாது’ என்னப்

‘பரசுவது நம்பெருமான்

கழல்கள் என்றால்

பழுதுஅணையாது’ எனப் பகர்ந்து

பரமர் செய்ய

விரைசெய்மலர்த் தாள்போற்றிப்

புகலி வேந்தார்

வேய்உறுதோ ளியை எடுத்து

விளம்பி னாரே!

(பெரிய புராணம், 28:616)

‘பிள்ளையே! சமணர்கள் வஞ்சனைக்கு அளவில்லை; கோள்களின் நிலைமையும் நன்றாக இல்லை; ஆகவே சொல்வதைக் கேளுங்கள்; பாண்டி நாட்டுக்குப் பயணம் போகவேண்டாம்’ என்றாராம் திருநாவுக்கரசர். ‘சிவனின் திருவடிகளையே சிந்தித்திருப்பவரை எந்தக் கோள் என்ன செய்துவிடும்? ஒரு சிக்கலும் வராது’ என்று சொல்லிவிட்டு வேயுறு தோளி பங்கன் என்னும் கோள்அறு திருப்பதிகத்தைப் பாடினாராம் திருஞான சம்பந்தர்.

வேய்உறு தோளிபங்கன்,

விடம்உண்ட கண்டன்

மிகநல்ல வீணை தடவி,

மாசுஅறு திங்கள்கங்கை

முடிமேல் அணிந்துஎன்

உளமே புகுந்த அதனால்

ஞாயிறு, திங்கள், செவ்வாய்

புதன், வியாழம், சனிபாம்பு

இரண்டும் உடனே

ஆசுஅறு நல்லநல்ல

அவைநல்ல நல்ல

அடியார் அவர்க்கு மிகவே.

(தேவாரம், 2:85:1)

மூங்கில் போன்ற தோள் உடையவளான உமையாளைத் தன் ஒரு பாகமாகக் கொண்டவன், நஞ்சுண்டு கறுத்துப்போன கழுத்தன், மிக நல்ல வீணை மீட்டுகிறவன், நிலாவையும் கங்கையையும் தலையில் சூடிக்கொண்டு என் உள்ளத்தில் புகுந்து குடிகொண்டவன்; அடியேன் நிலைமை இவ்வாறிருக்க, ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி, இரண்டு பாம்புகளாகிய ராகு, கேது ஆகிய ஒன்பான் கோள்கள் நல்லன செய்வதைத் தவிர எனக்கு வேறு என்ன செய்துவிட முடியும்?

கோள்களின் மேல் அச்சம்

சிவன் கோயில்களில் ஒன்பான் கோள்கள் இருத்தப்பட்டிருப்பதும், அவற்றைச் சுற்றும் பாதையில் மேற்சொன்ன கோளறு திருப்பதிகப் பாடல் எழுதி இடப்பட்டிருப்பதும், அடியார்கள் அனைவரும் சிவனுக்குக் காட்டியதைவிடவும் மிகுந்த பணிவன்போடு மேற்படிப் பாட்டைப் முணுமுணுத்தபடி கோள்களைச் சுற்றி வந்து வணங்குவதும் இன்று காண்கிற காட்சிகள்.

சிவனை உறுதியோடு வழிபடுகிறவர்கள் கோள்களைப் பொருட்படுத்தத் தேவையில்லை என்பதற்காக எழுதப்பட்ட பாட்டு, கோள்களைக் கும்பிடும்போது பாடப்படுகிற வழிபாட்டுப் பாட்டானது முரண்தான். கோள்களின்மேல் அவ்வளவு அச்சம் மக்களுக்கு. காரிக் கிழவர் (சனீசுவரன்) குடியிருக்கும் திருநள்ளாற்றுக் குளக்கரையில் சாங்கியத்துக்காகக் கழற்றிப் போடப்பட்டிருக்கும் உள்ளாடைகளைக் கணக்கெடுத்தாலே விளங்கும்.

இவை இவ்வாறு இருக்க, மூச்சாக இழுத்து விடுகிற சரம் சரியாக இருந்தால், நாள் என்ன செய்யும்? வினைதான் என்ன செய்யும்? நமை நாடி வந்த கோள் என்ன செய்யும்? கொடும் கூற்று என்ன செய்யும்? என்று கேட்கின்றன சர நூல்கள்.

‘அழகியே! புராணம், சுமிருதி, வேதாங்கங்கள் என்று எல்லாச் சாத்திர நூல்களாலும் பேசப்படும் பர அறிவைக் காட்டிலும் சர அறிவே பேரறிவு;’

‘உங்களுக்குச் சரம் பார்க்கத் தெரிந்தால், நீங்கள் நாள் பார்க்க வேண்டாம்; மீன் (நட்சத்திரம்) பார்க்க வேண்டாம்; கோள் பார்க்க வேண்டாம்; வழிபடு தேய்வங்களைத் துணைக்கழைக்க வேண்டாம்; வளி, அழல், ஐயம் என்று பதைபதைக்க வேண்டாம்’ என்கின்றது சிவ சர உதயம் (25, 29).

சரம் பார்ப்பது எப்படி என்று சொல்லித் தருகிறார் திருமூலர்:

வெள்ளிவெண் திங்கள் விளங்கும் புதன்இடம்;

ஒள்ளிய மந்தன் இரவிசெவ் வாய்வலம்;

வள்ளிய பொன்னே வளரும் பிறைஇடம்;

தெள்ளிய தேய்பிறை தான்வலம் ஆமே. (திருமந்திரம் 790)

ஏழு கிழமைகளில் வெள்ளி, திங்கள், புதன் ஆகிய மூன்றில், நாளின் தொடக்கத்தில், இடது நாடி வழியாகச் சரம் ஓட வேண்டும். சனி, ஞாயிறு, செவ்வாய் ஆகிய மூன்றில், நாளின் தொடக்கத்தில், வலது நாடி வழியாகச் சரம் ஓட வேண்டும். வியாழன் வளர்பிறை நாள் என்றால் இடது நாடி வழியாகவும், தேய்பிறை நாள் என்றால் வலது நாடி வழியாகவும் சரம் ஓட வேண்டும்.

சரம் இந்த முறைமையில் ஓடுமானால் உடம்புக்கும் உயிருக்கும் எந்தக் குறையும் உண்டாகாது என்பதோடு அல்லாமல், தெள்ளிய பேரறிவும் கிட்டும். இவை கிட்ட, நாள் என்ன செய்யும்? கோள் என்ன செய்யும்? கொடும் கூற்றுதான் என்ன செய்யும்? ஆசறு நல்ல நல்ல, அவை நல்ல நல்ல, சரம் பார்த்தவர்க்கு மிகவே.


தொடர்புக்கு: arumugatamilan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x