Published : 04 Apr 2019 10:57 AM
Last Updated : 04 Apr 2019 10:57 AM

உயிர் வளர்க்கும் திருமந்திரம் 72: வெட்ட வெளி வானம் பார்த்து வாழ்க

சர ஓட்டத்தைத் திருமூலர் வார சரம் என்ற பெயரில் ஒரே வாரத்துக்குள்ளாக அடக்கிக் காட்டியிருக்க, சிவ சர உதயம் என்ற நூலும் அதையொட்டித் தமிழில் எழுதப்பட்ட பூரணானந்தர் சிவயோக சாரம் என்ற நூலும் சர ஓட்டத்தை ஒரு மாதத்துக்கானதாக விரித்துக் காட்டுகின்றன.

(சிவயோக சாரமும் ஞானசர நூலும் பிரேமா பிரசுரம் வெளியிட்ட சித்தர் பெரிய ஞானக்கோவை என வழங்கும் சித்தர் பாடல்கள் என்னும் நூலில் சேர்க்கப்பட்டிருக்கின்றன. பயில்வார் பயில்க).

ஒரு மாதம் இரண்டு பாகங்களாகப் பிரிக்கப்படுகிறது. அவை: தேய்பிறைக் காலம் (கிருட்டிண பட்சம்), வளர்பிறைக் காலம் (சுக்கில பட்சம்). தேய்பிறைக் காலத்தில் நிலா பதினான்கு நாட்கள் தேய்ந்து பதினைந்தாம் நாளில் கார்உவா (மறைமதி / அமாவாசை) ஆகிறது. வளர்பிறைக் காலத்தில் நிலா பதினான்கு நாட்கள் வளர்ந்து பதினைந்தாம் நாளில் வெள் உவா (நிறைமதி / பௌர்ணமி) ஆகிறது. இந்த நாட்களில் சரம் இயங்கும் முறைமை இது என்று சிவ சர உதயம் சிலவற்றைக் கற்பிக்கிறது:

தேய்பிறைக் காலத்தின் முதல் மூன்று நாட்கள், அதாவது 1-3 ஆகிய நாட்களில் சரம் பிங்கலையில் (வலது நாசித் துளையில்) ஓட வேண்டும்; அடுத்த மூன்று நாட்கள், அதாவது தேய்பிறைக் காலத்தின் 4-6 ஆகிய நாட்களில் சரம் இடகலையில் (இடது நாசித் துளையில்) ஓட வேண்டும். அடுத்த மூன்று நாட்கள், அதாவது தேய்பிறைக் காலத்தின் 7-9 ஆகிய நாட்களில் சரம் பிங்கலையில் ஓட வேண்டும்;

அடுத்த மூன்று நாட்கள், அதாவது தேய்பிறைக் காலத்தின் 10-12 ஆகிய நாட்களில் சரம் இடகலையில் ஓட வேண்டும்; இறுதி மூன்று நாட்களில், அதாவது தேய்பிறைக் காலத்தின் 13-15 ஆகிய நாட்களில் சரம் பிங்கலையில் ஓட வேண்டும்.

அவ்வாறே வளர்பிறைக் காலத்தில் இதன் நேர் எதிராக, முதல் மூன்று நாட்கள், அதாவது 1-3 ஆகிய நாட்களில் சரம் இடகலையில் ஓட வேண்டும்; அடுத்த மூன்று நாட்கள், அதாவது வளர்பிறைக் காலத்தின் 4-6 ஆகிய நாட்களில் சரம் பிங்கலையில் ஓட வேண்டும். அடுத்த மூன்று நாட்கள், அதாவது வளர்பிறைக் காலத்தின் 7-9 ஆகிய நாட்களில் சரம் இடகலையில் ஓட வேண்டும்; அடுத்த மூன்று நாட்கள், அதாவது வளர்பிறைக் காலத்தின் 10-12 ஆகிய நாட்களில் சரம் பிங்கலையில் ஓட வேண்டும்; இறுதி மூன்று நாட்களில், அதாவது வளர்பிறைக் காலத்தின் 13-15 ஆகிய நாட்களில் சரம் இடகலையில் ஓட வேண்டும்.

கதிர் எழும் விழும் நேரம்

அன்றைய நாளுக்கான சர ஓட்டம் தொடங்குவது அந்த நாளின் தொடக்கத்தில். ஒரு நாளின் தொடக்கம் என்பது கதிர் எழும் காலம். காட்டாகத் தேய்பிறைக் காலத்தின் முதல் நாள் என்று வைத்துக் கொள்ளுங்கள். அன்றைய நாளின் தொடக்கத்தில், அதாவது கதிர் எழும் நேரத்தில், சரம் பிங்கலையில் ஓட வேண்டும். அதன்பிறகு ஒன்று முதல் ஒன்றரை மணி நேர இடைவெளியில் சரம் மடை மாறிக்கொண்டே இருக்கும். நாளின் தொடக்கத்தில் பிங்கலையில் ஓடத் தொடங்கும் சரம் ஒன்று முதல் ஒன்றரை மணி நேர இடைவெளியில் இடகலைக்கு மாறும். பிறகு மீண்டும் பிங்கலைக்கு. இவ்வாறு மாறி மாறி ஓடி, கதிர் விழும் நேரத்தில் சரம் இடகலையில் ஓடும்.

ஒரு நாளின் தொடக்கம், அதாவது கதிர் எழும் நேரம் என்பது பகுதிக்குப் பகுதி மாறும். நாளின் தொடக்கத்தில் இந்தியாவில் கிழக்கு முனையான அருணாசலப் பிரதேசத்தின் டாங் பகுதியில் விரைந்து எழும் கதிர், இந்தியாவின் மேற்கு முனையான குஜராத்தின் குகர் மோதியில், சற்றேறக்குறைய இரண்டு மணி நேரம் காலந்தாழ்ந்தே எழுகிறது. அவ்வாறே கதிர் விழும் நேரத்தைக் கணக்கெடுத்தாலும் அருணாசலப் பிரதேசத்தின் டாங்கில் விரைவாகவே விழும் கதிர், குஜராத்தின் குகர் மோதியில் காலந்தாழ்ந்தே விழுகிறது.

எனவே, நாளின் தொடக்கத்தையும் முடிவையும் மணிப்பொறி கொண்டு கணக்கிடாது, அவரவர் வாழும் பகுதியின் எழுகதிர், விழுகதிர்க் காலங்களைக் கொண்டே கணக்கிட்டுக் கொள்ள வேண்டும். எழுகதிர், விழுகதிர் நேரங்களைக் கணக்கெடுக்க வேண்டுமென்றால், முட்ட மேல் கூரை பார்த்து வாழாமல், வெட்ட வெளி வானம் பார்த்து வாழ வேண்டுவது கட்டாயம்.

மேற்கண்டவாறு சிவ சர உதயம் வகுத்து வைத்திருக்கும் சர ஓட்டத்தைத் திருமூலர் வகுத்த விதம் எளிமை.

கிழமைசரம்
ஞாயிறுபிங்கலை
திங்கள்இடகலை
செவ்வாய்பிங்கலை
புதன்இடகலை
வியாழன் (தேய்பிறை)பிங்கலை
வியாழன் (வளர்பிறை)இடகலை
வெள்ளிஇடகலை
சனிபிங்கலை

 

சரம் மாறி மாறி வரும் என்ற கருத்தமைவில் இரண்டு முறைமைகளுக்கும் இடையில் மாறுதல் எதுவும் இல்லை என்றாலும், சிவ சர உதயம் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு ஒரு சரமே தொடக்கச் சரம் என்று வகுக்க, திருமூலரோ இன்று ஒரு சரம், நாளை அடுத்த சரம் என்று தொடுக்கிறார்.

இரண்டும் வேறு வேறு கணக்கமைவுகள் என்று புலனாகிறதே தவிர, இரண்டுக்கும் இடையிலான வேறுபாடு எந்த அடிப்படையில் என்பது புலனாகவில்லை. சர ஓட்டத்தில் கவனம் செலுத்துகிறவர்கள் அது மாறி மாறி ஓடுவதை மட்டும் கணக்கெடுத்தால் போதாது. சரம் இடத்தையும் வலத்தையும் விட்டு நடுவுக்கு மடை மாறிச் சுழிமுனையில் பாயும் கணத்தைக் கவனிக்க வேண்டும். அதுவே சர ஓகத்தில் தலையாயது.

மாறி வரும்இரு பால்மதி வெய்யவன்

ஏறி இழியும் இடைபிங் கலைஇடை

ஊறும் உயிர்நடு வேஉயிர் உக்கிரம்

தேறி அறிமின் தெரிந்து தெளிந்தே.

(திருமந்திரம் 793)

சரம் இடகலை, பிங்கலை ஆகிய இரண்டு நாடிகளிலும் மாறி மாறி ஏறும்; இறங்கும். இவற்றில் ஏறி இறங்கும் இடைவெளியில் சரம் இரண்டுக்கும் பொதுவாக நடுநாடியான சுழிமுனையிலும் இயங்கும். சரம் சுழிமுனையில் இயங்கும் நேரமே உயிர் ஊற்றம் பெறும் நேரம். அதை அறிந்து தேர்க.

(உயிர் ஊற்றம் பெறுவோம்) கட்டுரையாசிரியர்,
தொடர்புக்கு: arumugatamilan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x