Published : 11 Apr 2019 09:47 AM
Last Updated : 11 Apr 2019 09:47 AM

மேஷம் - விகாரி வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்

மேஷ ராசி வாசகர்களே !

அன்றாட வாழ்வில் ஏற்படும் நெளிவு சுளிவுகளை அறிந்து அதற்கேற்ப வாழக் கற்றுக் கொண்டவர்களே! உங்களுடைய லாப வீட்டில் சுக்கிரன் அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். புதிய திட்டங்கள் நிறைவேறும். வீட்டில் அடுத்தடுத்து சுபநிகழ்ச்சிகள் நடக்கும். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் ஏற்படும்.

பழைய நகைகளை விற்று புது டிசைனில் ஆபரணங்கள் வாங்குவீர்கள். உங்கள் ராசிக்கு 4-ம் வீடான சுகவீட்டில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் இழுபறியாக இருந்த வேலைகள் விரைந்து முடியும். மனக்குழப்பம் நீங்கும். குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் ஏற்படும். கல்யாணம், சீமந்தம், காதுகுத்து என வீடு களைகட்டும். கனிவான பேச்சாலேயே காரியங்களைச் சாதிப்பீர்கள்.

இந்த ஆண்டு முழுக்க ராகு பகவான் 3-ம் வீட்டிலேயே தொடர்வதால் மனோபலம் அதிகரிக்கும். எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். வீண் விவாதங்கள், சண்டையிலிருந்து ஒதுங்குவீர்கள். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். கைமாற்றாகவும், கடனாகவும் வாங்கியிருந்த பணத்தைத் திருப்பித் தருவீர்கள். சித்தர்கள், ஆன்மிகப் பெரியோரின் ஆசி பெறுவீர்கள். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும்.

சனிபகவான் இந்த ஆண்டு முழுக்க 9-ம் வீட்டிலேயே இருப்பதால் தன்னம்பிக்கை பிறக்கும். தோல்வி மனப்பான்மையிலிருந்து விடுபடுவீர்கள். அதிக வட்டிக் கடனைக் குறைந்த வட்டிக்குக் கடன் பெற்று பைசல் செய்வீர்கள். ஆனால் இந்த ஆண்டு முழுக்க கேதுவும் 9-ம் வீட்டிலேயே நீடிப்பதால் செலவுகளைக் குறைக்க முடியாமல் அவ்வப்போது திணறுவீர்கள். கடந்த கால இழப்புகளை நினைத்து அவ்வப்போது கொஞ்சம் சங்கடத்துக்குள்ளாவீர்கள்.

நல்ல வாய்ப்புகளையெல்லாம் பயன்படுத்தாமல் விட்டுவிட்டோமே என்று வருத்தப்படுவீர்கள். தந்தையாருக்கு நெஞ்சு வலி, நீரிழிவு, கை கால் வலி வந்து போகும். அவருடன் மனத்தாங்கல் வரும். பிரச்சினைகளில் வழக்கறிஞரைக் கலந்தாலோசித்து முடிவெடுக்கப் பாருங்கள். குற்றம் பார்க்கின், சுற்றம் இல்லை என்பதை நீங்கள் உணர்ந்து செயல்படுவது நல்லது.

இந்த வருடம் தொடக்கம் முதல் 18.05.2019 வரை குரு அதிசார வக்ரமாகி 9-ம் வீட்டில் நிற்பதால் இக்கால கட்டத்தில் எதிர்பார்த்த வகையில் பணம் வரும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தைத் தந்து முடிப்பீர்கள். வீடு, மனை சேரும். கல்யாணம், மஞ்சள் நீராட்டு, கிரகப்பிரவேசம் எனப் பல விசேஷங்களிலும் உங்களுக்கு முதல் மரியாதை கிடைக்கும். அதிக மைலேஜ் தரக் கூடிய வாகனம் வாங்குவீர்கள்.

ஆனால், 19.05.2019 முதல் 27.10.2019 வரை உங்கள் ராசிக்கு 8-ம் வீட்டில் குரு அமர்வதால் எதையோ இழந்ததைப் போல் ஒருவிதக் கவலை, சிலர் மீது நம்பிக்கையின்மை, வீண் அலைச்சல் நேரும். மறைமுக எதிரிகள் முளைப்பார்கள். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். முன்கோபத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க நேரிடும். குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை, மனைவி, பிள்ளைகளுடன் மனம்விட்டுப் பேச முடியாத நிலை வந்து போகும்.

ஆனால் 28.10.2019 முதல் 27.03.2020 வரை உங்களின் பாக்கியஸ்தானமான 9-ம் வீட்டில் குரு நுழைவதால் இடையூறுகளைக் கடந்து வெற்றி பெறுவீர்கள். சில இடங்களில், சில நேரத்தில் அமைதியாக இருந்து காரியம் சாதிப்பீர்கள். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். பாதியில் நின்ற வீடு கட்டும் பணியைத் தொடங்குவீர்கள். அரசாங்கத்தால் அனுகூலம் உண்டு. குடும்பத்தில் தள்ளிப் போன சுப நிகழ்ச்சிகளெல்லாம் ஏற்பாடாகும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு எதிர்பார்த்த நிறுவனத்தில் வேலை கிடைக்கும். மறைமுக எதிர்ப்புகள் அடங்கும்.

mesham-2jpgright

வியாபாரிகளே! பெரிய முதலீடுகள் செய்து மாட்டிக் கொள்ளாதீர்கள். வாடிக்கையாளர்களை அதிகப்படுத்த புதிய சலுகைகளை அறிவிப்பீர்கள். நல்ல வேலையாட்களைப் பணியில் அமர்த்துவீர்கள். நன்கு அறிமுகமானவர்களானாலும் கடன் தரவேண்டாம். கமிஷன், ஷேர் மூலம் ஆதாயம் உண்டு.

உத்தியோகஸ்தர்களே! நேரம் காலம் பார்க்காமல் உழைத்தும் அதற்கான அங்கீகாரம் கிடைக்கவில்லையே என வருந்துவீர்கள். சக ஊழியர்களுடன் மனத்தாங்கல் வரும். மேலதிகாரியுடன் அவ்வப்போது மனஸ்தாபங்கள் இருந்தாலும் அனுசரித்துச் செல்லுங்கள். திடீர் இடமாற்றம் உண்டு.

பெண்களுக்கு: ராகுபகவான் சாதகமாக இருப்பதால் திடீர் யோகம், பணவரவு, அந்தஸ்து உயரும். நாத்தனார் உங்கள் வேலையைப் பகிர்ந்து கொள்வார். குழந்தை பாக்கியம் உண்டு. வேற்றுமதத்தவரால் ஆதாயம் உண்டு. கணவர் மனம் விட்டுப் பேசுவார். உங்கள் ஆலோசனைகளையும் ஏற்றுக்கொள்வார்.

மே முதல் அக்டோபர் மாதம் வரை குரு மறைவதால் வீண் சந்தேகத்தால் நல்லவர்களின் நட்பை இழந்துவிடாதீர்கள். சட்ட நிபுணர்களைக் கலந்தாலோசித்து முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடுவது நல்லது. இந்தப் புத்தாண்டு உங்களுக்கு ஒரு பக்கம் அலைச்சலையும் செலவுகளையும் தந்தாலும் மற்றொருபக்கம் விடாமுயற்சியாலும், தன்னம்பிக்கையாலும் சாதிக்க வைக்கும்.

பரிகாரம்: அருகிலிருக்கும் சிவன் கோயிலுக்கு பிரதோஷ நாளில் சென்று வணங்குவதுடன். இளநீரைத் தானமாகக் கொடுங்கள். எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x