

நீ கடலில் கலந்திருக்கும்
ஒரு துளி அல்ல,
ஒரு துளிக்குள்
ஒளிந்திருக்கும் பெருங்கடல்...!
- ஜலாலுதீன் ரூமி
எதையும் தர்க்கரீதியாக அணுகுவது ‘முஹம்மது இப்னு அலீ திர்மிதீ’யின் இயல்பு. ஞானத்தின் பிழம்பாக, அறிவின் ஊற்றாக விளங்கிய அவரது சிந்தனை ஆற்றல் அபரிமிதமானது. திர்மதி நகரில் ஒன்பதாம் நூற்றாண்டில் அவர் பிறந்தார். அளவற்ற அறிவை வரமாகப் பெற்றிருந்த அவர், சிறுவயது முதலே, எல்லாவற்றையும் கேள்வி கேட்பவராக இருந்தார். ஞானத்தின் அனைத்து வழிகளையும் ஏனென்ற ஒற்றைக் கேள்வியின் மூலம் தனது அறிவினுள் அடக்க முயன்றார்.
அந்த முயற்சியில் அவர் வெற்றியும் பெற்றார். இதனால்தான், ஆழமான கோட்பாடுகளையும் சிக்கலான சித்தாந்தங்களையும் சாமானியருக்கும் புரியும் வகையில் எளிய மொழியில் அவரால் எழுத முடிந்தது; விளக்க முடிந்தது. தனது அறிவையும் தர்க்கத்தையும் எந்த அளவு நம்பினாரோ, அதைவிட ஒருபடி மேலாக இறைவனை நம்பினார். வாழ்வில் ஒருபோதும் அந்த நிலையை அவர் மாற்றிக்கொள்ளவில்லை.
இளம் வயதில் இறைவணக்கமும் தர்க்கமும் திர்மிதியின் வாழ்வில் ஒருவிதத் தேக்கத்தை ஏற்படுத்தின. வெளியூருக்குப் பயணம் மேற்கொண்டால், அந்தத் தேக்க நிலையிலிருந்து விடுபடலாம் என்று அவர் நம்பினார். தன்னுடைய நண்பர்கள் இருவருடன் இணைந்து ஆன்மிகப் பயணம் செல்வதற்கு ஆயுத்தமானார். நண்பர்களின் பெற்றோர்கள் அவர்களை ஆசிர்வதித்து வழியனுப்பினர். ஆனால், திர்மிதீயின் தாயார் மட்டும் மிகுந்த கவலையுடன் இருந்தார்.
அன்னையின் அருகில் அமர்ந்து, கையைப் பிடித்தபடி, ஏனென்று? திர்மிதீ காரணம் கேட்டார். “நானோ மிகுந்த இயலாமையில் இருக்கிறேன். வயதும் முதிர்ந்துவிட்டது. நோயும் என்னை வாட்டி எடுக்கிறது. நீயோ ஓர் உன்னதப் பயணத்தை மேற்கொள்ள இருக்கிறாய். உன்னைத் தடுக்கவும் எனக்கு மனமில்லை. ஆனால், துணைக்கு யாருமின்றித் தனியாக இருக்கும் என்னை நீ யாரிடம் ஒப்படைத்துச் செல்வாய்?” என்று அவருடைய தாயார் கவலையுடன் பதில் கேள்வி கேட்டார்.
தனது மனிதாபிமானமற்ற செயலின் வீரியத்தை திர்மிதீ உணர்ந்தார். பெரும் தவறு இழைக்கவிருந்தோம் என்று எண்ணி வெட்கித் தலைகுனிந்தபடி, தாயின் கையைப் பிடித்து அழுதார். பின் சிறிதும் தாமதிக்காமல், தன்னுடைய நண்பர்களைச் சந்தித்து, “மன்னித்துக்கொள்ளுங்கள். என்னால் இந்தப் பயணத்துக்கு வரமுடியாது. நீங்கள் மட்டும் சென்று, ஞானத்தை எனக்கும் சேர்த்துப் பெற்று வாருங்கள்” என்று சொல்லிவிட்டு மீண்டும் தாயிடம் வந்தார்.
தாயைக் கவனிப்பது, இறைவணக்கம், சிந்தனையை எழுத்தில் வடிப்பது, தனியே தர்க்கிப்பது ஆகிய செயல்களே அவரது வாழ்வாக மாறின. இருந்தாலும், திர்மிதீயின் ஆழ்மனத்தில் பயணம் செல்ல முடியாதது குறித்து வேதனையும் ஏக்கமும் இருந்தன. “பயணத்தின்மூலம் ஞானம் பெறும் வாய்ப்பு தனக்குக் கிடைக்காமல் போய்விட்டதே” என ஒரு நாள் தனிமையில் அமர்ந்து அழுதுகொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு முதியவர், “ஏன் அழுகிறாய்?” எனக் கேட்டார்.
நடந்த அனைத்தையும் ஒன்றுவிடாமல் அவரிடம் திர்மிதீ சொல்லத் தொடங்கினார். “என்னுடைய நண்பர்கள் ஞானம் பெற்றுவிடுவார்கள். நான் மட்டும் இங்கேயே தேங்கிவிட்டேன்” என்று கவலையுடன் சொன்னபடி திர்மிதீ அழத் தொடங்கினார்.
விஸ்வரூபமெடுத்த ஞானம்
“கடமையே வாழ்வின் உன்னத ஆசான். அதுவும் குறிப்பாகத் தாயைக் கவனிக்கும் கடமை. எனினும், கவலை வேண்டாம். பயணங்களில் கிடைக்கும் ஞானத்தைவிட மேலான ஞானத்தை நான் உனக்குக் கற்றுக்கொடுக்கிறேன். அழுவதை நிறுத்து. கற்றலை நாம் இன்றே தொடங்குவோம்” என்று சொன்னபடி திர்மிதீக்கு அவர் ஞானத்தைப் போதிக்கத் தொடங்கினார். திர்மிதீயின் தர்க்கங்கள் பயனுள்ள ஒன்றாயின. அவருடைய கேள்விகள், முதியவரின் ஞானத்தில் மோதி பதிலாகத் திரும்பி, புது ஒளியை திர்மிதீயின் ஆன்மிக வாழ்வில் பாய்ச்சின.
திர்மிதீயின் ஆன்மிக ஞானம் விஸ்வரூபமெடுத்தது. உண்ணுவதற்குக்கூட நேரமின்றித் தனது நேரத்தை திர்மீதி அந்த முதியவருடன் செலவிட்டார். ஒன்றல்ல, இரண்டல்ல, மூன்று வருடங்கள் அவ்வாறு கழிந்தன. அறிவின் வடிவாக ஞானத்தின் பிழம்பாக திர்மிதீ ஒளிரத் தொடங்கியபோது, அந்த முதியவர் மறைந்து போனார். அவரை ஊரெங்கும் திர்மீதி தேடினார். ஆனால், அந்தத் தேடல்களால் அந்த முதியவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. மீண்டும், திர்மீதி கவலையில் மூழ்கத் தொடங்கினார்.
ஒரு நாள், தூய ஆடை உடுத்தி, இறைவணக்கத்துக்கு திர்மிதீ கிளம்பிச் சென்றார். அப்போது மாடியிலிருந்து குப்பையை அவருடைய பணிப்பெண் தவறுதலாக அவர்மீது எறிந்துவிட்டார். அந்தப் பெண்ணிடம் மிகுந்து கோபத்துடன் திர்மிதீ ஏதோ சொன்னார். அந்தச் சொல்லின் வலி தாங்காமல் சினங்கொண்டு, தன்னிடமிருந்த குப்பை முழுவதையும் திர்மிதீயின் மேல் அந்தப் பெண் கொட்டினார். ஏனோ அதற்கு திர்மிதீ கோபம் கொள்ளவில்லை.
பொறுமையின் உருவமாய், அந்தப் பெண்ணை நோக்கி அன்புடன் புன்னகைத்தார். அதற்கு அடுத்த நொடி, அந்த முதியவர் மீண்டும் திர்மிதீயின் முன் வந்து நின்றார். அந்த நிகழ்வுக்குப் பின், திர்மிதீ தன் வாழ்வில் ஒருபோதும் கோபம் கொள்ளவில்லை. “கோபம் கொள்ளும் சூழ்நிலை ஏற்பட்டால், அவர் வழக்கத்தைவிட அமைதியாகவும் அன்பாகவும் இருப்பார்” என அவருடைய சீடர்கள் பின்னாளில் தெரிவித்தனர்.
சாமானியர்கள் ஞானிகளை ஈர்த்த சுயசரிதை
எண்ணற்ற புத்தகங்களை திர்மிதீ எழுதியுள்ளார். சூபி தத்துவ இயலையும் மனித உளவியலையும் விளக்கும் ஓளியாக அவரது எழுத்துகள் இன்றும் விளங்குகின்றன. அவரது சுயசரிதை மனிதகுலத்தின் பொக்கிஷமாகக் கருதப்படுகிறது; போற்றப்படுகிறது; இன்றும் பாதுகாக்கப்படுகிறது. இந்தச் சுயசரிதையே ‘இமாம் கஸ்ஸாலியின் சூபி உலக வாழ்வுக்கும் எழுத்துக்கும் அடித்தளமாக இருந்தது. ‘ஷைகுல் அக்பர் இப்னு அரபி’யை சூபி உலகின் மிகப் பெரும் ஞானியாக்கியதிலும் இந்தச் சுயசரிதைக்கு முக்கியப் பங்குண்டு. சாமானியர்கள் மட்டுமல்லாமல் சூபி ஞானிகளுக்கும் வழிகாட்டியாகத் திகழ்ந்த அவர், கி.பி. 898-ம் ஆண்டில் இந்த உலகை விட்டு மறைந்தார்.
(ஞானிகள் தொடர்வார்கள்)
கட்டுரையாளர் தொடர்புக்கு: mohamed.hushain@thehindutamil.co.in