

மகா சிவராத்திரி திருநாள் இன்று (4.3.19 திங்கட்கிழமை).
இந்தநாளில், இரவு முழுவதும் சிவாலயங்கள் நடை திறந்திருக்கும். பூஜைகள், வழிபாடுகள், அபிஷேக, ஆராதனைகள் என விமரிசையாக நடைபெறும்.
மகா சிவராத்திரி நாளில், நான்கு கால பூஜைகளிலும் கலந்துகொண்டு, சிவ தரிசனம் செய்தால், மகா புண்ணியம் என்கின்றனர் சிவாச்சார்யர்கள்.
மகா சிவராத்திரியின் நான்காம் கால பூஜை விவரம் பார்ப்போமா?
4ம் கால பூஜை நேரம்:
முதல் கால பூஜை இரவு 7.30 மணிக்கும் 2ம் கால பூஜை இரவு 11 மணிக்கும் 3ம் கால பூஜை இரவு 12.30 மணிக்கும் நடைபெறும். 4ம் கால பூஜை, அதிகாலை 4.30 முதல் காலை 6 மணி வரை நடைபெறும்.
அப்போது சிவலிங்கத் திருமேனிக்கு கரும்புச்சாறு அபிஷேகம் நடைபெறும். நீலப்பட்டாடை அணிவித்து அலங்கரிப்பார்கள். அரிசி, பயறு, உளுந்து முதலானவற்றால் அட்சதை இட்டு, முத்து முதலான ஆபரணங்கள் கொண்டு அணிவிப்பார்கள்.
அப்போது, சிவலிங்கத்துக்கு நந்தியாவட்டை மலர்களும் அல்லி நீலோற்பவ மலர்களும் அர்ச்சித்து அலங்கரிப்பார்கள்.
புனுகும் சந்தனமும் குங்குமப்பூவும் கலந்து தூப ஆராதனை காட்டப்படும். சுத்த அன்னம் கொண்டும், நெய், சர்க்கரை கலந்து உணவைக் கொண்டும், பழங்கள் கொண்டும் நைவேத்தியம் படைக்கப்படும்.
தேவார, திருவாசகங்கள் பாடி, ருத்ர பாராயணம் செய்து, நமசிவாயம் சொல்லி, சிவாய நம ஜபித்து சிவனாரை வழிபட்டால், இந்த இப்பிறவியில் மோட்சம் கிடைப்பது நிச்சயம் என்கிறார்கள் சிவாச்சார்யர்கள்!