Last Updated : 28 Mar, 2019 11:24 AM

 

Published : 28 Mar 2019 11:24 AM
Last Updated : 28 Mar 2019 11:24 AM

விவிலிய மாந்தர்கள்: தீமைக்குப் பயப்படாத தலைமை குரு

இயேசு தன் சீடர்களுக்குப் போதித்துக் கொண்டிருந்தபோது, ‘யாருக்குப் பயப்படலாம்; யாருக்குப் பயப்படத் தேவையில்லை’ என்பதைக் குறித்துத் தெளிவாகக் கூறினார்.

“மூடிமறைக்கப்படுகிற எதுவும் வெளியில் தெரியாமல் போகாது, ரகசியமாக வைக்கப்படுகிற எதுவும் வெட்டவெளிச்சமாகாமல் போகாது. நான் உங்களுக்கு இருட்டில் சொல்வதை நீங்கள் வெளிச்சத்தில் சொல்லுங்கள்; காதோடு காதாகச் சொல்வதை வீட்டு மாடிகளிலிருந்து பிரசங்கியுங்கள். உங்கள் உடலைக் கொல்ல முடிந்தாலும் உங்கள் உயிரைக் கொல்ல முடியாத ஆட்களுக்குப் பயப்படாதீர்கள்.

உயிர், உடல் இரண்டையுமே கெஹென்னாவில் (மீண்டு வரமுடியாத நிரந்தர அழிவு) அழிக்க முடிந்தவருக்கே பயப்படுங்கள்” இயேசுவின் இந்த வார்த்தைகளுக்கு அவருக்குப் பலநூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒருவர் ஆலய குரு உதாரணமாக இருந்தார். அவர்தான் யோய்தா.

ஒரு கெட்ட அரசி

இஸ்ரவேல் தேசத்தை உம்ரி என்ற அரசன் ஆட்சி செய்துவந்தார். இவருடைய பேத்தியின் பெயர் அத்தாலியாள். கடவுளாகிய வானுலகத் தந்தையை மறந்து, பாகல் என்ற உருவத்தை வழிபட்ட அரசர்களின் வழிவந்தவள். அதனால் உண்மைக் கடவுள் மீது எந்தப் பயமும் இல்லாதவளாக இருந்தாள். இவள் யோராம் என்ற யூதேயாவின் அரசன் இஸ்ரவேலுக்கு அரசனாகியபோது அவனை மணந்துகொண்டாள். இவர்களுக்கு அகசியா என்ற மகன் பிறந்தான்.

யோராம் போரில் மடிந்தபோது அகசியா தனது 22 வயதில் முடிசூட்டப்பட்டான். ஆனால், அவனுடைய தாய் அத்தாலியாள் தீய வழியில் அவனை நடத்தினாள். அகசியாவும் தாயின் வழியில் தீயவனாகவே இருந்ததால் ஓரு வருடம் மட்டுமே ஆட்சி செய்த அவனும் போரில் மாண்டான். மகன் இறந்த செய்தியைக் கேள்விப்பட்டதும் அதை உறுதிப்படுத்திக்கொண்ட அத்தாலியாள், மனத்துக்குள் பதவி ஆசை கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது.

தன்னுடைய மகனுக்குப் பின்னர் தானே அரசி என முடிவுக்கு வந்தவள் தனது இடத்தை யாரும் பிடித்துவிடக் கூடாது என்று நினைத்தாள். அதனால், தன் மகன் ஆகாசியாவின் வாரிசுகளைக்கூடத் தன்னுடைய பேரப் பிள்ளைகள் என்று பார்க்காமல் கொன்று குவித்தாள். தளபதி தொடங்கி அமைச்சர்கள், குடிமக்கள் என அனைவரும் அவளைப் பார்த்துப் பயந்து நடுங்கினார்கள்.

பயப்படாத தலைமை குரு

கடவுளால் அபிஷேகம் செய்யப்படாமல், மூத்தோர், அமைச்சர்கள், குருமார்கள் என யாரையும் கலந்தாலோசிக்காமல் அத்தாலியாள் செய்தது பெரிய தவறு என்பது யோய்தாவுக்கும் அவருடைய மனைவி யோசேபாளுக்கும் தெரிந்தது. அத்தாலியாள் காலத்தில் கடவுளாகிய வானுலகத் தந்தையின் ஆலயத்தில் சேவை செய்து வந்த தலைமைக் குருதான் யோய்தா. அத்தாலியாள் எவ்வளவு கொடூரமாக மக்களை மிரட்டிக் கொன்று பணியவைத்தாலும் யோய்தாவும் அவருடைய மனைவி யோசேபாளும் கடவுளுக்கு மட்டுமே பயப்படுபவர்களாக இருந்தார்கள்.

அதனால், தங்களுக்கு என்னவானாலும் பரவாயில்லை என்று தங்கள் உயிரைத் துச்சமாக நினைத்து அத்தாலியாளின் பேரன்களில் ஒருவன் கொல்லப்படாமல் காப்பாற்றினார்கள். அவன் பெயர் யோவாஸ். குழந்தையாக இருந்த அவனை ஆலயத்தில் வைத்துக் கண்ணும்கருத்துமாக வளர்த்தார்கள்.

கடவுள் தந்த துணிவு

ஏழு ஆண்டுகள் உருண்டோடின. மூடி மறைத்து வளர்த்து வந்த யோவாசுக்கு ஏழு வயதானபோது, யோய்தா எல்லாத் தலைவர்களையும் லேவியர்களையும் கடவுளின் ஆலயத்தில் கூட்டினார். தன் வீரர்களிடம் “ஆலயத்தின் கதவுகளுக்கு அருகிலேயே காவலுக்கு நில்லுங்கள். நான் அழைக்கா, யாரையும் உள்ளே அனுப்பாதீர்கள்” என்று சொன்னார். பிறகு யோவாசை எல்லா யூதக் கோத்திரத்தாருக்கான தலைவர்கள் முன்பாகவும் யூதேயே தேசத்தின் அரசனாக முடிசூட்டி அவனது அவன் தலையில் கிரீடத்தை வைத்தார்.

பின்னர் ஆலயத்தின் முன்பாகத் திரண்டிருந்த மக்கள் முன்பு புதிய அரசனை அழைத்துக்கொண்டு வந்தார். மக்கள் அனைவரும் ‘அரசே வாழ்க!’ என்று உரக்க வாழ்த்துக் கோஷம் எழுப்பினார்கள். அந்தச் சத்தியம் எருசலேம் நகர் முழுவதும் எதிரொலித்தது.

மக்கள் போட்ட வாழ்த்துக் கோஷம் சர்வாதிகார அரசி அத்தாலியாளின் காதுகளில் விழுந்தது. அவள் வேகமாக ஆலயத்துக்கு ஓடி வந்தாள். புது அரசனைப் பார்த்ததும், “ என் எதிரிகள் சதி செய்துவிட்டார்கள்.. வீரர்களே.. விடாதீர்கள்.. அவர்களைக் கொல்லுங்கள்” என்று கத்தினாள். ஆனால், அந்த ராணியின் அட்டூழியங்களால் சோர்ந்துபோய் இருந்த வீரர்கள் ஒரு அடி கூட எடுத்து வைக்கவில்லை.

கருநாகத்தைப் போல் அவள் சீறிக்கொண்டே இருந்தாள். ஆனால், அவளது சீற்றம் அறச்சீற்றம் அல்ல; கயமையின் சீற்றம் என்பதைக் கண்டுகொண்ட மக்கள், “ அரசி ஒழிக” என்று கத்தியபோது புலப்பட்டுப்போனது. இப்போது தலைவர்கள் தீமையின் உருவாக இருந்த அவளை இழுத்துக்கொண்டு போய் மரண தண்டனை வழங்கினார்கள். அவள் மடிந்துபோனாள். ஆனால், யோய்தாவுக்கு அவளால் சீரழிக்கப்பட்டிருந்த தேசத்தின் வாழ்க்கை முறையை மீட்டெடுப்பதே முக்கியமானதாக இருந்தது.

சீரிய சீர்திருத்தம்

வானுலகத் தந்தையின் ஆலயமாகிய எருசலேம் ஆலயத்துக்குப் போய் உருவமற்ற வானுலகத் தந்தையைப் பழையபடி வணங்கத் தொடங்கினார்கள். மக்களுக்கு உண்மை வணக்கத்தைப் பற்றி எடுத்துக் கூற குருமார்களையும் லேவியர்களையும் யோய்தா நியமித்தார். தூய்மையாக இல்லாதவர்களையும் மது அருந்துபவர்களையும் ஆலயத்துக்குள் நுழையவிடாமல் அனுமதி மறுத்தார்.

அதைக் கண்காணிக்கக் காவலர்களையும் நியமித்தார். பின்னர் அரண்மனையைத் தூய்மைப்படுத்தி யோவாசை அரண்மனைக்கு அழைத்துச் சென்று சிம்மாசனத்தில் அமர வைத்தார்கள். யூதேயாவின் மக்கள் மிகவும் மகிழ்ந்தார்கள். சர்வாதிகாரத்துக்குப் பயப்படாமல் யோய்தா காட்டிய துணிவால் அந்தத் தேசத்துக்கே நன்மை கிடைத்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x