

மஞ்சுநாதன் என்று அழைக்கப் படும் சிவனும் சமணத் தீர்த்தங்கரர்களில் ஒருவரான சந்திரபிரபாவும் சேர்ந்து வழிபடப்படும் சமய, கலாசார நல்லிணக்கத்தின் அடையாளத் தலமாக தர்மஸ்தலா விளங்குகிறது.
தர்மஸ்தலாவில் நடைபெறும் ஒவ்வொரு செயலும் ஆன்மிக நிலைக்குச் செல்லும் அத்தியாவசியமான அடிவைப்புகளைச் சுட்டிக்காட்டுபவையாக உள்ளன. இந்து சமயத்திலும் சமணத்திலும் முக்கியத்துவம் வாய்ந்த நெறிகளாகக் கருதப்படும் தர்மமும் துறவும் இங்கே வாழ்க்கை முறையாகவே இருக்கிறது.
இந்து சமயத்தில் வாழ்க்கையைத் துறப்பது சன்னியாசம் என்று அழைக்கப்படுகிறது. ஆன்மிக ரீதியான பரிணாமத்தை அடைவதில் முக்கியமான கட்டம் அது. உடைகளைப் பற்றிய கவலையின்றி திகம்பரர்களாய் இருக்கும் சமணத் துறவிகள், ஆசைகளை விடுத்து ஆன்மிக வாழ்க்கையில் மலர்ந்து தன்னை அறியும் பயணத்தில் இருப்பதையே வெளிப்படுத்துகின்றனர்.
சமண ஓவியங்கள், சிற்பங்கள்
சமணச் சிற்ப மரபில் தியானநிலையிலிருக்கும் நிர்வாணத் தீர்த்தங்கரர்கள், தெய்வங்களின் சிற்பங்கள் முக்கிய அம்சங்களாக உள்ளன. உடல் நிர்வாணம் என்பது உச்சகட்ட துறப்பை வெளிப்படுத்துவதாக உள்ளது. சமணக் கலை மரபில் தீர்த்தங்கரர்கள், யக்ஷர்கள், யக்ஷிணிகள், தாமரை, சுவஸ்திக் போன்ற அடையாளங்களைப் பார்க்க முடியும்.
“கிழக்கு இந்தியப் பகுதியான பிஹாரில் தோன்றிய சமணம், கங்கை நதித் தீரத்தில் பரவி உத்தரப்பிரதேச மாநிலத்திலுள்ள மதுராவில் செழித்தது. மதுரை அப்போது குஷாணர்களின் தென்னகத்து தலைநகரமாக இருந்தது. தொடக்க காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட சமணச் சிற்பங்கள் எல்லாமும் நிர்வாணச் சிற்பங்களே.
ஆடைகள், ஆபரணங்கள் ஏதுமற்று மகாபுருஷனின் லட்சணமாக கருதப்பட்ட ஸ்ரீவத்சா அடையாளம் பொறிக்கப்பட்ட அந்த நிர்வாணச் சிலைகள் அக்காலகட்டத்திய புத்தர் சிலைகளிலிருந்து வேறுபட்டவை. மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த புகழ்பெற்ற வெண்கலச் சிற்பமான ரிஷபநாதர் சிற்பம்தான் தொன்மையானது. காயோத்சர்க நிலையில் நின்றபடி தியானிக்கும் உருவம் அது.” என்கிறார் மெட்ரோபாலிட்டன் மியூசியம் ஆப் ஆர்ட்-ஐச் சேர்ந்த ஜான் கை.
எழில் வாய்ந்த பாகுபலி
சமணக் கலையில் பாகுபலி தொடக்கத்திலிருந்து இடம்பெற்றவர். அவர் தீர்த்தங்கரர் அல்ல. ஆனால் சித்தபுருஷராகக் கருதப்பட்டவர். கர்நாடகத்தில் சிரவணபெலகோலாவில் பிரம்மாண்டமான உயரத்தில் காட்சியளிக்கும் பாகுபலி உலகமெங்கும் புகழ்பெற்றவர்.
“தக்காணப் பகுதி சமணத்திலுள்ள திகம்பரப் பிரிவினர் செல்வாக்கு செலுத்தும் பகுதியாக இருந்தது. அத்துடன் தமிழ்நாட்டில் சமணம் பரவி நிலைபெற்று பாண்டியர்கள், பிற ஆட்சியாளர்களையும் கவர்ந்தது. அப்பகுதிகளில் உள்ள சிற்பங்களில் சமணர்கள் திகம்பரர்களாக அலங்காரமே இல்லாமல் காட்சியளிக்கின்றனர்.
உடலை ஒறுத்துச் செய்யப்படும் தவத்தைக் காட்டுவதற்காக அவர்களது தோள்கள் முறுக்கேறியதாகச் சித்தரிக்கப்பட்டுள்ளன. சுருள் சுருளான தலைமுடிகள் மட்டுமே பவுத்தத் துறவிகளை ஒத்திருக்கின்றன. ஏனெனில் சமணத்தில் ஒவ்வொரு முடியும் கையாலேயே பிடுங்கப்பட வேண்டும்.
சமணச் சிற்ப உருவங்களுக்கு இருக்கும் நீண்டு தொங்கும் காதுகள் கனத்த நகைகளை அணிந்திருந்த அவர்களது முந்தைய உயர்குடி வாழ்க்கையைச் சுட்டிக்காட்டுபவையாக உள்ளன.
லௌகீக உலகைத் துறந்து எல்லாவற்றையும் ஒறுத்து நின்றபடி தியானம் செய்யும் அந்த தீர்த்தங்கரர்களின் சிற்பங்கள் துறவின் பெருமையைப் பற்றி மட்டும் சொல்லாமல் சிற்பக்கலையின் எழிலையும் சொல்லிக்கொண்டிருப்பவை” என்கிறார் ஜான் கை.
செயலில் துறவு வகிக்கும் பங்கு
துறவு நெறியைப் போதிப்பதாக தர்மஸ்தலா இருப்பினும், பகவத் கீதை சொல்வதுபோலச் செயலில் துறவைத் தான் முக்கியத்துவப்படுத்துகிறதே தவிர, செயலைத் துறப்பதையல்ல.
பற்றற்ற செயல் குறித்து பகவத் கீதை அதிகமாக கவனப்படுத்துகிறது. “வாழ்க்கை கோரும் பணிகள், கடமைகளைச் செய்வதற்கான அழைப்பு அது; அதேவேளையில் பிரபஞ்ச இருப்புக்கான உயர் அர்த்தத்தையும் ஆன்மிக இயல்பையும் சேர்த்தே அனுசரிப்பதும்.” என்று எழுதியுள்ளார் ஜவாஹர்லால் நேரு.
பயன்கருதாச் செயல் அல்லது நிஷ்காம்ய கர்மம் என்று சொல்லப்படும் தத்துவத்தால் ஈர்க்கப்பட்டு தர்மஸ்தலாவில் சமூக மேம்பாட்டு திட்டங்களும் ஆன்மிகப் பணிகளோடு சேர்ந்தே நடத்தப்பட்டு வருகின்றன.
Shri Dharmasthala Manjunatha Temple Essence of Dharma தி இந்து க்ரூப் பப்ளிகேஷன்ஸ், 859-860, அண்ணா சாலை, சென்னை– 02 விலை : ரூ. 250/- தபால் வழியாக காசோலை அனுப்பிப் பெறலாம். THG Publishing Private Limited என்ற பெயரில் ரூ. 285/-க்கு காசோலை அனுப்பிப் பெறலாம். தபால் செலவு ரூ. 35/- இணையவழியில் வாங்க: www.thehindu.com/publications மொத்தமாகப் பிரதிகள் வாங்க tobookstore@thehindu.co.in-க்கு மின்னஞ்சல் செய்யவும். மேலும் விவரங்களுக்கு 1800 3000 1878 |
- சந்தோஷ் கே. தம்பி | (தமிழில்: ஷங்கர்)