

இயேசு பிறப்பதற்குப் பலநூறு ஆண்டுகளுக்கு முன்பு இஸ்ரவேலுக்கும் சிரியா தேசத்துக்கும் இடையில் போரும் தொடர்ந்த தாக்குதல்களும் நடந்துகொண்டே இருந்தன. நூற்றுவர் குழு எனப்படும் நூறு போர் வீரர்கள் அடங்கிய குழுக்கள் திடீரென இஸ்ரவேலின் ஏதாவது ஒரு பகுதிக்குள் நுழைந்து அங்கு வசிக்கும் மக்களைத் தாக்கி, பொருட்களைக் கொள்ளையடிப்பதுடன் ஆண்கள், பெண்கள், குழந்தைகளையும் அடிமைகளாகச் சிரியாவுக்குக் கொண்டுசென்றனர். இப்படிக் கொண்டு செல்லப்படுபவர்களைச்
சிலகாலம் வேலை வாங்கிவிட்டு அடிமைகளுக்கான சந்தையில் அவர்களை விற்றுப் பொருளீட்டவும் செய்தனர்.
சிரியாவை இரண்டாம் பெனாதாத் என்ற அரசன் ஆட்சி செய்துகொண்டிருந்த காலம் அது. அவரிடம் படைத்தளபதியாக இருந்தவர் நாகமான். அரசனுக்கு இணையான செல்வாக்கு பெற்றவராக நாகமான் இருந்தார். சிரியாவுக்குப் பல வெற்றிகளைக் கொண்டுவந்து சேர்த்ததால் நாகமானை ‘மாவீரன்’ என்று மக்கள் போற்றினார்கள். அதனால் அரசனும் நாகமான் மீது பெருமதிப்பும் மரியாதையும் வைத்திருந்தார்.
கரும்புள்ளியாக ஒரு நோய்
செல்வாக்கும் புகழும் மிக்கத் தளபதியாக நாகமான் இருந்தபோதும் அவரது புகழுக்கு இழுக்கை ஏற்படுத்தும்விதமாக தொழுநோய் அவரைப் பீடித்து இருந்தது. ஒருமுறை, சிரியர்களின் நூற்றுவர் குழு இஸ்ரவேலின் ஒரு ஊரில் திடீர்த் தாக்குதல் நடத்தியது. அப்போது, ஒரு சிறுமியை அடிமையாகப் பிடித்துக்கொண்டு வந்த நாகமானின் வீரர்கள், அவளை நாகமானின் மனைவியிடம் கொண்டுவந்தார்கள்.
சிறுமியைப் பார்த்த அவள், தனக்குப் பணிவிடை செய்யும் பணிப் பெண்ணாக அமர்த்திக்கொண்டார். புதிய தேசம், புதிய மனிதர்களைக் கண்ட அந்தச் சிறுமி (விவிலியத்தில் சிறுமியின் பெயர் குறிப்பிடப்படவில்லை), சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், மரங்கள், செடிகள் ஆகியவற்றை சிரியர்கள் வணங்குவதைக் கண்டு ஆச்சரியப்பட்டாள்.
சிறுமியின் வழிகாட்டல்
எந்த உருவமும் இல்லாத வெற்றிடத்தில் வானுலகத் தந்தையை நோக்கி கைகளை உயர்த்தி பணிப்பெண் சிறுமி பிரார்த்தனை செய்வதைக் கண்ட நாகமானின் மனைவி, “எனது கணவர் இந்தத் தொழுநோயால் எவ்வளவு கஷ்டப்படுகிறார் பார்த்தாயா; அவரைப் போன்றவர்களுக்கு உங்களது இஸ்ரவேல் தேசத்தில் என்ன மருத்துவம் செய்வீர்கள்?” என்று ஆவலோடு கேட்டார்.
அதற்கு அந்தச் சிறுமி சிறிதும் அஞ்சாமல் தன் எஜமானியிடம், “என் எஜமான், இஸ்ரவேலின் சமாரியாவில் இருக்கிற தீர்க்கதரிசியைப் போய்ப் பார்த்தால் நன்றாக இருக்கும். இவருடைய தொழுநோயை அவர் குணப்படுத்திவிடுவார்” என்று சொன்னாள். அதைக் கேட்ட நாகமானின் மனைவி ஆச்சரியப்பட்டு அரசனிடம் ஓடோடிச் சென்று இஸ்ரவேல் சிறுமி கூறியதைத் தெரிவித்தார்.
அப்போது அரசன், நாகமானை அழைத்து, “உடனே புறப்பட்டுச் செல்லுங்கள் தளபதியாரே..! இஸ்ரவேல் அரசரிடம் நான் எழுதியிருக்கும் இந்தக் கடிதத்தைக் கொடுங்கள்” என்று பரிந்துரைக் கடிதம் கொடுத்து அனுப்பினார்.
நாகமான் ஒரு நூறு வீரர்கள், படை ரதங்கள் ஆகியவற்றுடன் பத்து தாலந்து அளவுக்கு வெள்ளி, ஆறாயிரம் சேக்கல் தங்கம், பத்து புதிய உடைகளையும் எடுத்துக்கொண்டு 150 கிலோ மீட்டர் பயணம் சென்று இஸ்ரவேலை அடைந்தார்.
ஆடையைக் கிழித்த அரசன்
நாகமானின் நோயின் பொருட்டு அவரைச் சந்திக்கவே பயந்தான் இஸ்ரவேலின் அரசன் யோராம். தன் அரசன் கொடுத்தனுப்பிய கடிதத்தைத் தூதுவன் மூலம் கொடுத்தனுப்பினார் நாகமான். அதில், “இந்தக் கடிதத்துடன் என் தளபதி நாகமானை உங்களிடம் அனுப்பியிருக்கிறேன். அவருடைய தொழுநோயைக் குணப்படுத்துங்கள்” என்று எழுதப் பட்டிருந்ததைப் படித்துப் பார்த்த இஸ்ரவேலின் அரசன், “உயிரைக் கொடுப்பதற்கும் எடுப்பதற்கும் நான் என்ன கடவுளா?
இந்த ஆளுக்கு வந்திருக்கிற தொழுநோயைக் குணப்படுத்தச் சொல்லி இவனை என்னிடம் அனுப்பியிருக்கிறானே! நீங்களே பாருங்கள், அவன் என்னை வம்புக்கு இழுக்கப் பார்க்கிறான்” என்று தன் சபையோரைப் பார்த்துப் புலம்பியதோடு கோபத்தின் தன் ஆடையைக் கிழித்துக்கொண்டான்.
ஆணவத்தின் அடையாளம்!
அரசன் தன்னுடைய ஆடையைக் கிழித்துக்கொண்ட விஷயத்தைக் கடவுளாகிய வானுலகத் தந்தையின் ஊழியர் எலிசா தீர்க்கதரிசி கேள்விப்பட்டார். உடனே, அரசருக்குச் செய்தி அனுப்பிய அவர், “ நீங்கள் ஏன் ஆடையைக் கிழித்துக்கொண்டீர்கள்? தயவுசெய்து, அவரை என்னிடம் அனுப்புங்கள். இஸ்ரவேலில் ஒரு தீர்க்கதரிசி இருப்பதை அவர் தெரிந்துகொள்ளட்டும்” என்று சொல்லி அனுப்பினார்.
அதனால், நாகமானை எலிசாவிடம் செல்லும்படி அனுப்பினார் அரசன் யோராம். தன் வீரர்களோடும் போர் ரதங்களோடும் குதிரைகளோடும் எலிசாவின் வீட்டு வாசலில் போய் குதிரையைவிட்டு இறங்காமல் ஆணவத்துடன் நின்றார் நாகமான். எலிசா ஓடோடிவந்து நாகமான் முன்னால் பணிந்து, நின்று குணமாக்குவார் எனக் காத்திருந்தார்.
ஆனால், எலிசா அவரிடம் தன் பணியாள் ஒருவரை அனுப்பி, “நீங்கள் போய் யோர்தான் ஆற்றில் ஏழு தடவை மூழ்கி எழுங்கள். அப்போது, உங்களுடைய உடல் முன்புபோல் ஆகிவிடும். நீங்கள் சுத்தமாவீர்கள்” என்று சொல்லச் சொன்னார். அதைக் கேட்டு நாகமான் பயங்கரக் கோபமடைந்து, எலிசா வீட்டு வாசலிலிருந்து புறப்பட்டுப்போனார்.
போகும்போது “அந்த தீர்க்கதரிசி என்னுடைய பக்கத்தில் வந்து நின்று, தன்னுடைய கடவுளின் பெயரைச் சொல்லி வேண்டுவார்; தொழுநோய் இருக்கிற இடங்களில் கையை அப்படியும் இப்படியும் அசைத்துக் குணப்படுத்துவார் என்று நினைத்தே இங்கே வந்தேன். இஸ்ரவேலில் ஓடுகிற அத்தனை ஆறுகளும் தமஸ்குவில் ஓடுகிற ஆப்னாவுக்கும் பர்பாருக்கும் ஈடாகுமா? நான் அவற்றில் மூழ்கி எழுந்து குணமாக முடியாதா?” என்று சொல்லிவிட்டுக் கோபத்துடன் கிளம்பிப் போனார்.
ஆத்திரக்காரனுக்குப் புத்திமட்டு
அப்போது நாகமானுடைய ஊழியர்கள் அவரிடம், “எஜமானே, அந்தத் தீர்க்கதரிசி வேறு ஏதாவது கஷ்டமான காரியத்தை உங்களைச் செய்யச் சொல்லியிருந்தால், நீங்கள் செய்திருக்க மாட்டீர்களா? ‘ஆற்றில் மூழ்கி எழுங்கள், சுத்தமாவீர்கள்’ என்றுதானே உங்களிடம் சொன்னார்... இது ஒன்றும் பெரிய விஷயம் இல்லையே? நீங்கள் எதற்காக இப்படி ஆத்திரப்படுகிறீர்கள்” என்று கேட்டார்கள்.
ஊழியர்கள் ஒரே குரலாய்ச் சொன்னதைக் கேட்டு உடனே நாகமான் மனம் மாறினான். கடவுளின் ஊழியர் சொன்னபடி யோர்தான் ஆற்றுக்குப் போய், ஏழு தடவை முங்கி எழுந்தார். அப்போது, அவருடைய உடல், ஒரு சின்னக் குழந்தையின் உடல்போல மாறியது! அவர் நோய் நீங்கிக் குணப்பட்டார்.
தனக்கு நேர்ந்த அற்புதத்தை நம்ப முடியாமல் இதயம் படபடக்க நாகமான் தன்னுடைய ஊழியர்கள், வீரர்கள் அனைவரையும் எலிசா தீர்க்கதரிசியிடம் வந்து, தன் வாளைத் தளர்த்திக் கழற்றி வீரனிடம் கொடுத்துவிட்டு, தன் ஆணவத்தைத் துறந்து அவர் முன்பாக வணங்கினார்.
“நீங்கள் வணங்கும் வானுலகத் தந்தையே இனி எனது கடவுள். இனி எனக்கு வேறு கடவுள் இல்லை” என்று கூறி, “இந்தத் தேசத்திலிருந்து இரண்டு மூட்டை மண்ணை நான் சிரியாவுக்கு எடுத்துச் செல்ல எனக்கு அனுமதி வேண்டும்” என்று கேட்டார். அதற்கு எலிசா, “சமாதானமாகப் போய் வாருங்கள்” என்று அனுமதி கொடுத்தார்.