Published : 21 Feb 2019 10:37 AM
Last Updated : 21 Feb 2019 10:37 AM

உயிர் வளர்க்கும் திருமந்திரம் 67: திருமூலராகும் வாய்ப்பு திருடருக்கும் உண்டு

“மரங்கள் தூங்குவதை நீங்கள் கவனித்திருக்கிறீர்களா? அதன் இலைகள் தங்களுடைய இச்சைக்கேற்ப அசைவதில்லை. காற்றின் வேகத்திற்கேற்பவே அசைகின்றன. ஆனால் இந்நேரத்தில் (இரவு ஒன்றரை மணி முதல் மூன்று மணிவரையிலான நேரம்) இலைகளும் அசையாது.

வாயு இல்லையென்பதாலா? காற்று ஒருபோதும் நிச்சலனம் ஆவதில்லை. அது உறங்குவதில்லை. கடவுளுக்குப் பூமியில் ஒரு பிரதிபிம்பம் உண்டென்றால் அது காற்று மட்டும்தான். கண்களை மூடி, மனதை ஒருமுகப்படுத்தப் பழகினால் காற்றின் சலனங்களை நம்மால் உணர இயலும். சூட்சுமக் காற்றைக்கூட இப்படி உணர இயலும். இதுவொரு சுகமான அனுபவம்.

ஆகவேதான் சொல்கிறேன்: இறையுணர்வை அனுபவிக்க வேண்டியது நம்முள் நாம் ஆழ்ந்துப் பயணிப்பதன் மூலம்தான். இது சுய அனுபவங்களினூடே ஒவ்வொருவரது ஆன்ம அனுபூதியெனும் நிலையில் அமைய வேண்டும். மாறாக ஆன்மாவுக்குக் கூடமைத்துத் தந்த ஆண்டவனுக்கே கூடமைத்துக் கொடுப்பதன் மூலமல்ல. நம்மை உருவகப்படுத்திய ஆண்டவனுக்கு உருவகம் கொடுப்பதல்ல. என்ன செய்வது? மனிதன் பலவீனமானவன். சுயத்தின் மீதான நம்பிக்கைதான் கடவுள்.

சுயநம்பிக்கை நலிகிறபோது மனத்தை ஒருமுகப்படுத்த இயலாமல் போகிறது. மனிதம் சிதறிப் போகிறது. அதாவது தனிமனிதன் தனக்குள் பல நூறு துண்டுகளாகச் சிதறுகிறான். இவற்றைக் கோர்த்தெடுத்து ஒன்று சேர்த்துக்கொள்ள இயலவில்லையென்பதுதான் நம்முடைய மிகப் பெரிய தோல்வியாக இருக்கிறது.”

(திருடன் மணியன் பிள்ளை என்னும் வாழ்க்கை வரலாற்று நூலில் ஒரு பகுதி, மலையாளத்தில் ஜி.ஆர்.இந்துகோபன், தமிழில்: குளச்சல் மு.யூசுப்)

மேற்கண்டது, திருட்டைக் கொஞ்ச காலம் தன் தொழிலாகக் கொண்டிருந்த மணியன் பிள்ளை என்ற மனிதர், தான் தொழிலுக்குச் சென்ற காலத்தில் பட்டறிந்து சொன்னவற்றில் ஒரு சிறுதுளி. திருமூலர் சொல்லத் தக்கவற்றைத் திருடர் மணியன் சொல்கிறார் என்றால், திருமூலராகும் வாய்ப்புத் திருடருக்கும் உண்டு என்றே சென்று ஊதாய் கோத்தும்பீ என்று பாடத் தோன்றவில்லையா?

மாடு மேய்க்கும் இடையரான மூலர் ஓகியாகித் திருமூலர் ஆகியிருக்க வாய்ப்பில்லை என்று கருதி, அவரைக் கயிலை யோகி சுந்தரநாதராக்கி, வடக்கே இருந்து இறக்குமதி செய்து, இடையர் மூலரின் உடம்புக்குள் கூடுவிட்டுக் கூடு பாய்ச்சித் திருமூலராக்கி அழகு பார்க்கும் மரபு மீளவும் கருதிப் பார்க்கப்பட வேண்டிய இடம் இது.

கள்வன், கடியன்,

கலதிஎன்று எண்ணாதே,

வள்ளல் வரவர

வந்துஒழிந்தான் என்மனத்தே;

உள்ளத்து உறுதுயர்

ஒன்றுஒழியா வண்ணம்எல்லாம்

தெள்ளும் கழலுக்கே

சென்றுஊதாய் கோத்தும்பீ.

(திருவாசகம், திருக்கோத்தும்பி, 11)

இறைவன் கலியாண குணங்கள் உடையவர்களிடத்தில் மட்டுமே உறைவான் என்று பொதுவாக நம்பப்படுகிறது; ஆனால், அது ஒரு மூட நம்பிக்கை. இவன் திருட்டுப் பயல், கடின மனம் உடையவன், தீக்குணமுடைய கீழ்மகன் என்று எண்ணாமல் என்னிலும் வந்து தங்கினான் வள்ளல். என் உள்ளத் துயர்களையெல்லாம், இருள் களையும் அவன் திருவடிகளிடம் போய், ஒன்றுவிடாமல் சொல்வாய், அரசவண்டே!

காற்றும் கடவுளும் முதல்வரை மட்டுமா தழுவும்? இடையரையும் தழுவும்; கடையரையும் தழுவும்; இல்லையா?

காலும் தலையும் அறியார் கலதிகள்;

கால்அந்தச் சத்தி அருள்என்பர்; காரணம்

பால்ஒன்று ஞானமே; பண்பார் தலைஉயிர்;

கால்அந்த ஞானத்தைக் காட்ட,வீடு ஆகுமே. (திருமந்திரம் 2425)

நிலவரம் தெரியாமல் குதிப்பவரைக் கண்டால் தலைகால் புரியாமல் குதிக்கிறார் என்பார்கள். திருமூலரும் சொல்கிறார்: காலையும் தலையையும் அறியாதவர்கள் வீணர்கள். இங்குக் கால் என்பது கால் இல்லை; தலை என்பது தலை இல்லை. கால் என்பது காற்று; தலை என்பது உயிர். காற்றை, உயிரை, காற்றுக்கும் உயிருக்கும் உள்ள தொடர்பை அறியாதவர்கள் வீணர்கள்.

காற்று என்பது உயிருக்கு வலு உண்டாக்கும் ஆற்றல்; காற்று என்பது உயிருக்காகச் சுரக்கப்பட்ட அருள்; காற்றே கடவுளைக் காட்டுகிறது. காற்றோடு ஒன்றுகிறபோது கடவுளோடு ஒன்றுகிற அறிவு உண்டாகிறது.

அருள் தந்து, ஆற்றல் தந்து, அறிவையும் தரும் காற்று நம்மைக் கட்டி வைக்கும் சடங்குகளிலிருந்து விடுதலையையும் தருகிறது. இடையர் திருமூலரின் இந்தப் பாட்டுக்கு விளக்கஉரை எழுதியதுபோல் அல்லவா திருடர் மணியர் பேசியிருக்கிறார்? நல்லது. வேதாந்திகள் பேசாதவற்றையெல் லாம் ஏகாந்திகள் பேசி விடுகிறார்கள். வேதாந்திகள் வேத முடிவுகளைப் பேசுகிறார்கள்; ஏகாந்திகளோ தங்கள் முடிவுகளைப் பேசுகிறார்கள்.

காத்தல் தொழில் செய்யும் காற்று

கேரளத்தின் வடகரைச் சிவானந்தர் தாம் செய்த, ‘மோட்ச சூத்திரம் என்கிற சித்த வேதம்’ என்னும் நூலில் காற்றையே கடவுள் என்கிறார். சுக்கிலம் என்கிற வெள்ளியை (விந்தை) ஊதித் தள்ளிக்கொண்டு போய்க் கருப்பையில் இருக்கும் சுரோணிதம் என்கிற பொன்னில் (முட்டையில்) சேர்த்து உருவாக்குவதும், உருவாக்கியதை முக்கி முக்கி வெளித் தள்ளுவதும் காற்றே; ஆகவே படைப்புத் தொழில் செய்கிறது காற்று.

உருவாகி வெளியில் வந்தது, நீடித்து வாழ்ந்திருக்குமாறு, அதற்குள் தன்னை ஊதிக்கொண்டு உயிரூட்டுவதும் காற்றே; ஆகவே காத்தல் தொழில் செய்கிறது காற்று. வாழ்ந்திருக்கின்ற ஒன்று, காற்றைத் தனக்குள் உறிஞ்சிக்கொள்ளாமல் விட்டுவிட்டால், அதனைக் காலமாகச் செய்வதும் காற்றே; ஆகவே அழித்தல் தொழிலையும் செய்கிறது காற்று. படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய மூன்று தொழில்களையும் செய்கிற காற்றைக் கடவுள் என்று சொல்லாமல் வேறென்ன சொல்ல?

காற்றுக்கும் சரி, கடவுளுக்கும் சரி, உருவமோ பெயரோ கிடையாது. காற்றுக்கும் சரி, கடவுளுக்கும் சரி, தொடக்கமோ முடிவோ கிடையாது. காற்றுக்கும் சரி, கடவுளுக்கும் சரி, உள்ளென்றும் புறமென்றும் கிடையாது. யாதுமாகி, எங்கும் நிறைந்து ஒளிர்வன காற்றும் கடவுளும்—அல்லது காற்றாகிய கடவுள்—அல்லது கடவுளாகிய காற்று. அதை நமக்குள் தக்க வைத்துக்கொண்டால் நாம் வாழ்கிறோம். தள்ளி விட்டுவிட்டால் சாகிறோம்.

‘தாமே வந்து நம்மைத் தலை அளித்து ஆட்கொண்டு அருளும்’ கடவுளை, உள்ளுக்குள் வைத்துக்கொள்ளாமல் வெளியில் வைத்துக்கொள்வது அறிவுடைமையா? நோய்க்கு மருந்தெழுதுகிற மருத்துவர், ஆறு கழஞ்சு (ஓர் எடை) சீந்தில் கொடியும், நான்கு கழஞ்சு கடுக்காய்த் தோலும், இரண்டு கழஞ்சு சுக்கும் அரைப்படி நீரில் கியாழம் (கசாயம்) வைத்து வீசம்படியாகச் சுண்டக் காய்ச்சி, இறக்கி, வடிகட்டி, அதில் ஓர் அச்சுவெல்லம் தட்டிப் போட்டு உட்கொள்ளுமாறு சொல்கிறார். அவ்வாறு செய்து, அதை உட்கொண்டால்தான் நோய் தீருமே ஒழிய, அதை வெளியில் வைத்துத் தீபம் காட்டிக் கும்பிட்டால் நோய் தீருமா? என்று கேட்கிறார் வடகரைச் சிவானந்தர்.

கால்கொண்டுஎன் சென்னியில்

கட்டுஅறக் கட்டுஅற,

மால்கொண்ட நெஞ்சின்

மயக்கில் துயக்குஅறப்

பால்கொண்ட என்னைப்

பரன்கொள்ள நாடினான்;

மேல்கொண்டுஎன் செம்மை

விளம்பஒண் ணாதே. (திருமந்திரம் 2433)

காற்றாகி நின்று என் உயிரின் கட்டுகளை அறுத்தான் கடவுள்; கட்டுகள் அற அற, என் நெஞ்சின் மயக்கங்களும் சோர்வுகளும் நீங்கின; மயக்கமும் சோர்வும் நீங்கியதால் என்பால் அவன் வந்தானா, என்பால் அவன் வந்ததால் மயக்கமும் சோர்வும் நீங்கினவா? ஏதாயினும் ஆகுக. பரன் என்னை நாடியதால் நான் அடைந்தேனே செம்மை, அதைச் சொல்லவா முடியும்?

வேதாந்தம் மாயையைத்தான் சொல்ல ஒண்ணாதது (indescribable) என்கிறது; சித்தாந்தமோ சிவம் ஆகிய செம்மையைச் சொல்ல ஒண்ணாதது என்கிறது. காற்றாகி வந்து கட்டறுக்கும் கடவுளை உள்ளுக்குள் உறுக; செம்மை நலம் பெறுக.

(உள்ளே யாரும் நலம் பெறலாம்)கட்டுரையாசிரியர்,
தொடர்புக்கு: arumugatamilan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x