

வரலாற்றுச் சிறப்புமிக்க விருதுநகரில் கௌசிகா மகாநதிக்கரையில் அமைந்துள்ளது பஞ்ச லிங்கேஸ்வரர் ஆலயம். கௌசிகா மகாநதி அருகே காயத்ரி மந்திரத்தை ஒரு முறை கூறினால், ஆயிரம் முறை கூறிய பலன் கிட்டும் எனக் கூறியுள்ளார் விஸ்வாமித்திரர். இத்திருக்கோயிலில் அகஸ்தியர், போகர் ஆகியோர் பஞ்சாட்சர மந்திரம் ஓதி தினமும் தவம்செய்வதாக ஐதீகம். ஹயக்ரீவர் தினமும் லலிதா சகஸ்ரநாமம், பாராயணம்செய்து தவம் ஏற்றுள்ளதாகவும் இத்தலம் பூஜிக்கப்படுகிறது.
மாலையில் அருணன் மறையும் தருவாயில் சிவ பூஜைசெய்து மறைவதாகவும் நம்பிக்கை. இங்குள்ள நவக்கிரகங்களை வழிபடுவதால் நவக்கிரக தோஷங்கள் விலகும் என்றும் நம்பப்படுகிறது. காலை வேளயில் கிழக்கு நோக்கி வழிபாடு செய்யும்போது சிவனையும் சூரியனையும் சேர்த்து வழிபடும் பாக்கியம் இத்தலத்தில் கிடைக்கிறது.
உடலால், மனதால், பிணியால் அவதிப்படுவோர் காலை வேளையில் சிவனை வழிபடுவதோடு, சூரியனையும் சேர்த்து வழிபட்டால் பிரச்சினைகள் தீரும். இத்தலத்தில் மூலிகைகளால் செய்யப்பட்ட மூலவர் லிங்கம், பாதரச லிங்கம், ஜோதி லிங்கம், ஸ்படிக லிங்கம், மூலிகை செம்பால் செய்யப்பட்ட செம்பு லிங்கம், சக்தி பீடம் எனப்படும் மகாமேரு பீடம், அதிகார நந்தியும் இந்த ஆலயத்தில் அமைந்துள்ளன.
இங்கே அமாவாசைதோறும் பிதுர் சாபம், பிரம்மகத்தி தோஷம் மற்றும் ஜாதகத்தில் நவகிரகங்களால் ஏற்படக் கூடிய சகல தோஷ நிவாரணத்துக்கு அகஸ்திய பிரம்மன் ஏட்டில் எழுதிவைத்த மோட்ச தீப வழிபாடும், சித்தர் வேள்வியும், கூட்டுப் பிரார்த்தனையும் நடைபெறுகின்றன.
தற்போது இந்த ஆலயத்தை விரிவுப்படுத்தும் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதில் மூலிகைத் தைலக் கிணறு, ராம காசி தீர்த்தம், நம் நாட்டில் கிடைக்கும் மூலிகை உப்புக்கள், மூலிகை சாந்து வகைகள் கலக்கப்பட்டு இத்திருத்தலம் அமைய உள்ளது என்கிறார் ஆலயத்தை நிர்வகத்து வரும் சிவ ஸ்ரீ முருகேசன் சுவாமிகள்.