ஞானம் மூழ்கிக் குளிக்கும் நதி

ஞானம் மூழ்கிக் குளிக்கும் நதி
Updated on
2 min read

“நான் மறைந்த புதையலாக இருந்தேன், அறியப்பட விரும்பினேன். எனவே, மனிதனைப் படைத்தேன்” என்கிறான் இறைவன். இறைவனில் தன்னைக் கலந்தும் தன்னில் இறைவனை நிறைத்தும் இறைவனுக்கே உரியவனாக வாழ்ந்த அதேநேரத்தில், சக மனிதர்களையும் மானுடத்தையும் அப்பழுக்கற்று நேசித்ததன் தடயங்களாக ஞானி பீர்முஹம்மது அப்பாவின் ஞானப்பாடல்கள் திகழ்கின்றன.

“இறைவனுக்கு உரியவனாகவும் மக்களுக்கு உகந்தவனாகவும் இருப்பவனே சூபி ஞானி” என்கிறார் ஷெய்க் அப்துல் காதிர் ஜீலானி. இந்த இலக்கணத்தின் இலக்கியமாக அமைந்ததுதான் பீர்முஹம்மது அப்பாவின் பெருவாழ்வு.

தென்காசியிலிருந்து தக்கலைக்கு...

விஜயநகர தெலுங்கு தளகர்த்தர்களால் மதுரை பிடிக்கப்பட்டு திருச்சிராப்பள்ளி, மதுரை, திருநெல்வேலி மாவட்டங்கள் முழுவதும் தெலுங்குப் பாளையக்காரர்களின் குடியேற்றங்களால் ஆன பதினாறாம் நூற்றாண்டு காலகட்டம் அது. அப்போது தெலுங்கு இலக்கியமே முக்கியத்துவம் பெற்றிருந்தது. தமிழ் மொழி இலக்கியங்களை ஆதரிக்கும் புரவலர்கள் இல்லாத சூழலில் அந்த வெற்றிடத்தை நிரப்பிய வெளிச்சப் பிறைகளாக தென்காசியிலிருந்து பீர்முஹம்மது அப்பாவும், எட்டயபுரத்தில் உமறுப்புலவரும் தோன்றினார்கள்.

சித்தர்களில் ஒருவராக அறியப்படும் பீர்முஹம்மது அப்பா, தென்காசி நடுப்பேட்டையில் வாவாஞ்சி என்பவரின் பேரனாகவும் சிறுமலுக்கர் என்பவரின் மகனாகவும் சாமூர் குலத்தின் வம்சாவளியில் 16-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பிறந்தவர். வீரசைவ வேளாளர்களும், பாளையப்பட்டுக்காரர்களும் பட்டுநூல் நெய்பவர்களும் நெருங்கி வாழ்ந்த இடம் அது. தென்காசி விஸ்வநாத சாமி கோயிலின் தர்மகர்த்தாவும் சிறுமலுக்கரும் நல்ல நண்பர்களாக இருந்தனர்.

பரநோக்கு ஒன்றேயன்றி பிறநோக்கு எதுவுமில்லாமல் பிரபஞ்சத்தில் பயணம் செல்பவர்களாக அறியப்படும் சூபிகளில் ஒருவரான பீர் முஹம்மது அப்பா, ஆனைமலை, பீர்மேடு என அலைந்து திரிந்தார். பின்னர் கன்னியாகுமரி மாவட்டத்தின் தக்கலையில் நிலைகொண்டார்.

தனது ஞானநூல்களுள் ஒன்றான ‘றோசுமீஸாக்கு மாலை’யில் தனது வருகையின் நோக்கத்தைக் குறித்து அவர் பதிவும் செய்துள்ளார்.

வீரம் புகழும் தென்காசி நகர் சிறுமலுக்கர் மைந்தன் பீருமுஹம்மதன்

மீறாவாக்குக் காரக்கவிதை நபிஷபாஅத் கத்தனருள்

பார்புகழும் தக்கலை கொந்தால் கால்முகமாய் வந்துதித்த

இனம்புகழ மாமன்னர்க்கு மீனமானியன்பாகச் சொல்லும்

மற்றொரு சமய நம்பிக்கையைப் பின்பற்றி வாழும் கோயில்களுக்கும் குடிகளுக்கும் அரசாகத் திகழும் மாமன்னருக்கு இஸ்லாத்தின் செய்தியைச் சொல்வதற்கென்றே கொந்தாலெனும் நெசவுத் தொழில் நடக்கும் தக்கலைக்கு அருள்வருகை தந்ததாகத் தெளிவுபடுத்துகிறார். அவரது வருகை 1564-க்கும் 1587-க்கும் இடையிலோ சற்று முன்போ நடந்திருக்கலாமென்று கருதப்படுகிறது.

சொல் புதிது பொருள் புதிது

சொல் புதிதாக, பொருள் புதிதாக ஏடு தாங்கி நிற்கும் பீர்முஹம்மது அப்பாவின் பல்லாயிரம் ஞானப்பாடல்களிலும் அவரது எழுத்தாணி பதிந்திருக்கிறது. ‘லிவிங்’ என்ற ஆங்கிலச் சொல்லுக்கு ‘வாழ்மை’ என்று வண்ணத்தமிழ் தருகிறார் பீரப்பா. அப்பாவின் செறிவான கவிதைகளில் வட்டாரச் சொற்களும் புழங்குகின்றன.

தக்கலையைச் சேர்ந்த அஞ்சுவன்ன முஸ்லிம்களின் பேச்சுவழக்கில் வெள்ளனே (சீக்கிரமே), அம்புட்டும் (அத்தனையும்), காலம்பற (அதிகாலை), அஞ்சுவட்டம் (ஐந்து தடவை), தொக்கு (வழக்கமாக), சிணம் (விரைவு), பழையபோல (முன்போன்று), மிளுங்கும் (விழுங்கும்), பகுமானம் (பெருமிதம்) போன்ற வட்டாரச் சொற்கள் இடம்பெறுகின்றன.

பீர்முஹம்மது அப்பா பேரறிவின் பிரம்மாண்டம், ஞானம் மூழ்கிக் குளிக்கும் ஒரு நதி, சதாவும் ஊறிக்கொண்டிருக்கும் அறிவின் ஸம்ஸம் (வற்றாத நீரூற்று).

ஞானப்புகழ்ச்சி, ஞானப்பால், ஞானப்பூட்டு, ஞானமணிமாலை, பிஸ்மில்குறம், ஞான ஆனந்தக் களிப்பு, திருநெறி நீதம், றோசு மீஸாக்குமாலை என்று பீர்முஹம்மது அப்பாவின் நூல்கள் இன்னும் இன்னுமென்று விரிந்து செல்கின்றன. பீர்முஹம்மது அப்பாவின் காப்பிய நடை கம்பீரமானது.

திருக்குர்ஆனும் நபிமொழிகளுமே அப்பா அவர்களின் ரிஷிமூலம். மௌலானா ரூமியின் சுனைகளில் இந்த நதி முங்கி எழுந்து வருகிறது.

விண்ணொளி காண வேண்டின் மெய்யிரை யருளினாலே

கண்ணொளி யுருகச் சேர்த்துக் கருத்தொளி நடுவில் நோக்கிப்

பொன்னொளி மேவும் போருல்ராசா

மருந்தி மேலாந்

தன்னொளி கண்டு ஞானத்

தானவ னாக லாமே

- தக்கலை பீர்முஹம்மது அப்பா

- தக்கலை ஹலீமா, கட்டுரையாசிரியர்,
தொடர்புக்கு: thuckalayhaleema@gmail.com

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in