Published : 21 Mar 2019 08:00 AM
Last Updated : 21 Mar 2019 08:00 AM

உட்பொருள் அறிவோம் 08: காளிங்க நர்த்தனம் என்றால் என்ன?

கிருஷ்ணனின் பிள்ளைப் பிராய விளையாட்டுகளும் நிகழ்ச்சிகளும் மனித மனத்தின், மனிதப் பிரக்ஞையின், அமைப்பு குறித்தும் அதன் செயல்பாட்டைப் பற்றியும் பல குறிப்புகளைத் தருகின்றன. அந்தக் குறிப்புகளை நாம் புரிந்துகொண்டால் நமக்குள்ளே நாமறியாமல் நிகழ்ந்துகொண்டிருக்கும் இயக்கங்களைப் பற்றி அறிந்துகொள்ள முடியும். அவற்றிலிருந்து விடுபடவும் முடியும். கிருஷ்ணனின் பிள்ளைப் பிராய நிகழ்ச்சிகளில் காளிங்க நர்த்தனம் மிகவும் முக்கியமான ஒன்று.

யமுனை நதியுடன் காளிந்தி நதி சங்கமிக்கும் இடத்தில் தண்ணீர் கறுத்துச் சுழித்து ஓடிக்கொண்டிருந்தது. காளிங்கன் என்னும் பெயர் கொண்ட நூற்றுக்கணக்கான தலைகள் கொண்ட பாம்பு அங்கு தன் மனைவி மக்களுடன் வசிப்பதுதான் காரணம். நதிக்கரையின் அந்தப் பகுதியே காளிங்கனின் நச்சுக் கலந்த நீரிலிருந்து எழும் ஆவியால் சூழப்பட்டிருந்தது. விவரமறியாத ஆடுமாடுகளும் சில நேர சிறுவர் சிறுமியரும் நீரைக் குடிக்க முற்படும்போது தங்கள் உயிரை இழப்பது அவ்வப்போது நடந்து வந்தது.

தேடிப்போன கிருஷ்ணன்

ஒரு முறை கிருஷ்ணனும் அவன் நண்பர்களும் யமுனைக் கரையில் விளையாடிக்கொண்டிருந்தபோது நண்பர்களில் சிலர் தாகம் தணித்துக்கொள்ளும் பொருட்டு நதிக்கரைக்குச் சென்று நீரைக் குடிக்கச் சுருண்டு விழுந்து உயிர்விட்டனர். அந்த நண்பர்களைக் காணாத மற்ற சில நண்பர்களும் அவர்களைத் தேடிச் சென்று அங்கே நீரைக் குடித்து மாண்டனர்.

நண்பர்கள் திரும்பி வராததைக் கண்ட கிருஷ்ணன் தன்னுடன் இருந்த மற்ற நண்பர்களுடன் நதிக்கரைக்குச் சென்றான். அங்கே தன் நண்பர்கள் உயிரற்றுக் கிடப்பதைக் கண்டு, நடந்ததை அறிந்துகொண்டான். காளிங்கனின் செய்யும் பிரச்சினைகள் பற்றி ஏற்கெனவே கேள்விப்பட்டிருந்தான். அதற்கு அன்று ஒரு முடிவு கட்ட நினைத்து நதிக்குள் குதித்தான்.

கூட இருந்த நண்பர்கள் அவனைத் தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனால் அவர்களால் கிருஷ்ணனைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. அவர்கள் அழுதுகொண்டே ஊருக்குள் சென்று யசோதை, நந்தகோபரிடம் நடந்ததைச் சொன்னார்கள். அனைவரும் அழுது புலம்பிக்கொண்டே நதிக்கரைக்கு விரைந்து வந்தனர். அங்கே தண்ணீரின் மேல் பகுதி அலைபாய்ந்துகொண்டிருப்பதைக் கண்டனர். கிருஷ்ணனின் சுவடுகூடத் தெரியவில்லை.

தண்ணீருக்குள் அழகிய அந்தச் சிறுவன் வருவதைக் கண்ட காளிங்கனின் மனைவியர் தம் கணவனின் நச்சுக்கு அவன் பலியாகப் போவதை நினைத்து வருந்தினர்.

கிருஷ்ணன் தன்னிடத்தை நோக்கிச் சிறிதும் அச்சமின்றி நீந்தி வருவதைக் கண்டான் காளிங்கன். வியப்பு மிகுந்து, சினம்கொண்டு சீறி எழுந்தான். அவன் சீற்றத்தில் நதியின் அந்தப் பகுதி கொதித்துக் கொப்பளித்தது. அவனருகில் வந்த கிருஷ்ணன் காளிங்கனின் வாலைப் பிடித்துக்கொண்டான். தன் பலம் முழுவதையும் பயன்படுத்தித் தன் வாலை விடுவித்துக்கொள்ளக் காளிங்கன் செய்த முயற்சி எல்லாம் வியர்த்தமாகப் போயிற்று.

அவன் வாலைப் பிடித்துச் சுழற்றினான் சிறுவன் கிருஷ்ணன். காளிங்கனின் மனைவிகளுக்கு என்ன நடக்கிறது என்று புரியவில்லை. இதுவரையில் தம் வாழ்வில் கண்டிராத அந்தக் காட்சியைக் கண்டு அவர்கள் ஸ்தம்பித்துப் போயிருந்தனர். கிருஷ்ணன் தாவிக் குதித்துக் காளிங்கனின் தலைமேல் ஏறிக் கொண்டான்.

அளிக்கப்பட்ட உயிர்ப்பிச்சை

காளிங்கனின் நூற்றுக்கணக்கான வாய்களிலிருந்து வெளிப்பட்ட நச்சு நிறைந்த மூச்சில் நதிநீர் நுரைத்துப் பொங்கியது. கிருஷ்ணனின் பிடியிலிருந்து விடுபட முயன்ற காளிங்கன் தண்ணீருக்கு மேலே வந்தபோது அவன் தலைமீது கிருஷ்ணன் நின்று ஆடிக்கொண்டிருப்பதைக் கண்ட அனைவரும் திடுக்கிட்டுப் போயினர். கிருஷ்ணனின் ஆட்ட வேகத்தைத் தாங்க முடியாமல் காளிங்கன் சோர்ந்து போனான்.

விரைவில் அவன் கதை முடிந்துவிடும் என்பது தெளிவாகத் தெரிந்தது. கதை தலைகீழாக மாறிப் போய்விட்டதைக் கண்ட காளிங்கனின் மனைவியர் தண்ணீருக்கு மேலே வந்து கிருஷ்ணனிடம் வந்து காளிங்கனுக்கு உயிர்ப் பிச்சை தருமாறு வேண்டினர்.

அந்தப் பிரதேசத்தை விட்டுப் போய்விடுவதானால் அவனுக்கு உயிர்ப்பிச்சை அளிப்பதாகக் கிருஷ்ணன் கூறினான். தன் கர்வம் அடங்கிய காளிங்கனும் அவ்வாறே செய்வதாக வாக்களித்தான். வெகு தொலைவில் கடலில் இருந்த ஒரு தீவுக்குத் தன் மனைவி மக்களுடன் போய்விட்டான் காளிங்கன். காளிங்கன் தலைமீது அன்று கிருஷ்ணன் புரிந்த நர்த்தனம் மனிதப் பிரக்ஞையில் என்றும் அழியாத காட்சியாகப் பதிந்துவிட்டது. இதுதான் கதை.

இந்தக் கதையின் உட்பொருள் என்ன? என்ன செய்தியைச் சொல்கிறது இது? இந்தக் கேள்விக்குப் பதில் சொல்ல வேண்டுமென்றால் சில அடிப்படைகளை முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.

தாவரம் விலங்கு மனிதன்

பிரக்ஞை என்பது பல தளங்களும் பல நிலைகளும் கொண்டது. பாறையிலிருந்து தொடங்கி மறுகோடியில் முழுப்பிரக்ஞை நிலையான ஸ்திதப்ரக்ஞன் என்னும் நிலைவரையில் எண்ணற்ற தளங்கள் உள்ளன. பாறை என்னும் நிலையில் பிரக்ஞை முற்றிலும் அகவயப்பட்டு உள்ளார்ந்து இருக்கிறது.

‘நான்' இருக்கிறேன் என்று பிரக்ஞை பூர்வமாகப் பாறைக்குத் தெரியாது. தாவரம், விலங்கு, மனிதன் என்று இடையில் பல நிலைகள். இன்றைக்கு மனிதப் பிரக்ஞை இருக்கும் நிலை இறுதியானதல்ல. மேலும், பல தளங்களையும் நிலைகளையும் கடந்துதான் முழுப்பிரக்ஞை நிலையை அடைய வேண்டும்.

பாறையின் நிலையிலிருந்து வெகுதூரம் வந்துவிட்டோம். ஆனால், இன்னும் முழுப்பிரக்ஞையை அடையவில்லை. முழுப்பிரக்ஞை இல்லாத நிலையில் நாம் அறியாமல் நமக்குள்ளேயும் பல தளங்கள் இயங்கிக்கொண்டுதான் இருக்கின்றன. அங்கே என்ன நடந்துகொண்டிருக்கிறது என்று நமக்குப் பிரக்ஞைபூர்வமாகத் தெரியாது.

ஆனால், தெரிந்ததை வைத்துக்கொண்டு, தெரியாத விஷயங்களையும் தெரிந்ததுபோல் பாவனை செய்துகொண்டு, தவறான கருத்துகள் கொண்டு தவறான முடிவுகளும் எடுக்கிறோம். வாழ்க்கை சிக்கல் மிகுந்ததாகிறது. அதாவது நமக்குத் தெரியாது என்பதே நமக்கு இன்னும் சரியாகத் தெரியவில்லை!

நம் நனவு நிலைக்குக் கீழே நமக்குள் இருளில் என்னென்னவோ நடந்துகொண்டிருக்கின்றன. ஆழ்மனச் சக்திகளும், கோபதாபங்களும், வன்முறை, வெறுப்பு, பொறாமை, அசூயை, சுய பச்சாதாபம், போட்டி, பூசல் போன்ற எதிர்மறையான உணர்ச்சிகளும் நிறைந்து நம் அடிமனம் பெரும் போர்க்களமாக இருக்கிறது.

அதன் வலியையும் வேதனையையும் நாம் அனுபவித்துக்கொண்டிருக்கிறோம். ஆனால், அங்கே என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதைப் பற்றிய தெளிவு நமக்குச் சிறிதுமில்லை. விழித்துக்கொண்டிருக்கும்போது மட்டுமல்லாமல் தூக்கத்திலும் இந்தச் சக்திகள் கனவுகளாக நம்மை அலைக்கழித்துத் துன்புறுத்துகின்றன.

இதுவரையிலான சரித்திரம் முழுவதிலும் மனித இனம் அனுபவம் கொண்ட பயம், வன்முறை, எதிர்கொண்ட அதிர்ச்சிகள், சிக்கல்கள் போன்ற உணர்ச்சிகள் என அனைத்தின் சாரமும் மனிதப் பிரக்ஞையின் அடித்தளத்தில் இன்னும் தொடர்ந்து இருந்து வருகின்றன. அடிமன இருளில் நம் ஜீவன் துடித்துக்கொண்டு இருக்கிறது.

அங்கிருந்து மேலெழும் எதிர்மறை உணர்ச்சிகள் நம் உறவுகளைச் சீர்குலைத்துக்கொண்டிருக்கின்றன. என்ன செய்வது என்று நமக்குத் தெரிவதில்லை. அந்தச் சக்திகளோடு போர் புரிந்து நாம் வெற்றி அடைய முடியாது. நம்மைவிட அவை அதிகம் சக்தி வாய்ந்தவை. இந்த அடிமன இருளை வென்று கடந்து, உள்ளொளி பெற்று, தெளிவுடன் நாம் வாழ வேண்டுமானால் அடிப்படையான சில விஷயங்களை நாம் அறிந்துகொண்டாக வேண்டும்.

(காளிங்க நடனம் தொடரும்)
கட்டுரையாசிரியர் தொடர்புக்கு: sindhukumaran2019@gmail.com

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x