

ஜென் குரு டோஜோவின் மடாலயத்துக்கு ஒரு பணக்காரன் வந்து பத்தாயிரம் தங்க நாணயங்களை நன்கொடையாக அளித்தான். டோஜோ அந்த நன்கொடையை ஒன்றுமே சொல்லாமல் ஏற்றுக்கொண்டார். அந்தப் பணக்காரனோ கடுமையாகத் தொந்தரவுக்குள்ளானான். “நான் கொடுத்த நன்கொடை பத்து ஆயிரம் தங்க நாணயங்கள் தெரியுமா?” என்று ஆதங்கத்துடன் கேட்டான்.
டோஜோ தெரியுமென்று சொன்னார்.
“எனக்குக்கூட, பத்தாயிரம் தங்க நாணயங்கள் என்பது மிகவும் பெரிய தொகைதான். ஒரு நன்றியைத் தானே உங்களிடம் எதிர்பார்க்கிறேன். சொல்லக் கூடாதா?”
“நீயும் திரும்பத் திரும்பச் சொல்லிவிட்டாய். நானும் கேட்டுவிட்டேன். எனக்குக் காது செவிடென்று நினைத்தாயா? நான் உனக்கு நன்றியாக இருக்க வேண்டுமென்று நினைக்கிறாயா?” என்றார்.
“அதுபோதும்…அதுவே எதிர்பார்க்கப்படுகிறது” என்றார் பணக்காரர்.
“உனது தங்க நாணயங்களை நீ திரும்ப எடுத்துச் செல்லலாம். நீ உண்மையிலேயே ஆலயத்துக்குக் கொடையளிக்க விரும்பினால் நான் அந்த நன்கொடையை ஏற்றுக்கொண்டதற்கு நீதான் நன்றியுடன் இருக்க வேண்டும்.” என்றார் டோஜோ.
டோஜோ குருவாக இருந்த அந்த ஆலயத்தில் இன்னும் அவை வாக்கியங்களாக எழுதப்பட்டுள்ளன. கொடுப்பவன் எவனோ அவனே நன்றியுடன் இருக்க வேண்டும். அதுதான் மெய்யான பகிர்ந்து கொள்ளுதல். ஒருவர் ஒரு பரிசை உன்னிடமிருந்து பெறுகிறார் என்றால், அது உனக்களிக்கப்பட்ட வரமாகும்.
அவர் அதைப் பெறுவதற்கு மறுத்திருக்கலாம். உன்னுடைய பரிசை ஏற்றுக்கொள்வதன் வழியாக அவர் உன்னை ஏற்றுக்கொள்கிறார். கொடுப்பவன் எவனோ அவனே நன்றிக்குரியவனாக இருத்தல் வேண்டும். இல்லையே அது பகிர்ந்து கொள்ளுதல் அல்ல; பேரம்.
கொடுப்பதற்குப் பலனை எதிர்பார்ப்பவரோ கொடையைவிட மதிப்புமிக்க ஒன்றை எதிர்பார்க்கிறார். ஞானமடைந்த ஒருவராலேயே பகிரவும் முடியும்.ஓஷோ சொன்ன கதை