Last Updated : 07 Mar, 2019 11:12 AM

 

Published : 07 Mar 2019 11:12 AM
Last Updated : 07 Mar 2019 11:12 AM

விவிலிய மாந்தர்கள்: புல்வெளி முதல் அரியணை வரை

தாவீதின் சந்ததி வழியாகவே தனது ஒரேமகன் இயேசுவைப் பூமிக்கு அனுப்பினார் கடவுள். அப்படிப்பட்ட தாவீதின் வாழ்க்கை பல திருப்பங்களைக் கொண்டதாக இருந்தது. ஆடு மேய்த்துக்கொண்டிருந்த ஒரு இளைஞனை இஸ்ரவேல் தேசத்தின் அரியணையில் அரசனாய் அமரச்செய்த கடவுளின் விருப்பத்தை என்னவென்று சொல்வது…!

இஸ்ரவேலர்கள் ‘எங்களுக்கு ஒரு அரசன் வேண்டும், நீதித் தலைவர்களின் ஆட்சி போதும்’ என்று கடவுளிடம் கேட்டுக்கொண்டார்கள். அதனால் அவர்களுக்கு இஸ்ரவேலின் முதல் ராஜாவாக சவுலைத் தேர்தெடுத்துத் தந்தார். அவர், 40 ஆண்டுகள் ஆட்சி செய்தார். அதன் பின்னர் சவுலின் மோசமான நடத்தையைக் கண்ட கடவுள், சவுலுக்குப் பின் தாவீதைத் தேர்ந்தெடுத்தார்.

பெத்லகேம் ஊரில் வசித்துவந்த ஈசாய் என்பவரின் கடைக்குட்டிப் பையன் இந்த தாவீது. கடவுள் அவரைத் தேந்தெடுத்தபோது, குலத் தொழிலான ஆடுமேய்க்கும் பணியில் அக்கறையுடன் ஈடுபட்டிருந்தார் இளைஞன் தாவீது. யாழ் வாசிப்பதில் தலைசிறந்து விளங்கினார். தன் பெற்றோருக்குப் பணிந்து நடப்பவராக, தன் சகோதரர்கள் மீது பாசம் கொண்டவராக, தனது ஆடுகளின் மீது அதிக அன்புகொண்டவராக விளங்கினார்.

மேய்ச்சல் முடிந்து நிழலில் படுத்துறங்க தன் ஆடுகளுக்காக யாழ் வாசிப்பார். எந்த ஓநாயும் தாவீதின் மந்தையை நெருங்க முடியவில்லை. தோற்றத்தில் சிறியவராக இருந்தாலும், கவண் கல் கொண்டு ஓநாய்களை விரட்டி அடிப்பதில் இளம் வயதிலேயே மாவீரராக இருந்தார்.

தாவீதுக்கான தருணம்

தாவீதின் யாழ் வாசிக்கும் திறமையை அறிந்த சவுல், தாவீதை அழைத்து வரச்செய்து அரண்மனையில் தனக்கு உதவியாளனாக வைத்துக்கொண்டார். தாவீதின் யாழ் இசையில் மயங்கி, தனது கவலைகளை விரட்டியடித்தார். தாவீதை அரசன் சவுலுக்கு நிறையவே பிடித்துவிட்டது. அழகான இளைஞனாக அரண்மனையில் வலம் வந்த தாவீதை உயர்த்தும் ஒரு மாபெரும் தருணத்தைக் கடவுள் கொண்டுவந்தார்.

இஸ்ரவேலர்களுக்கும் பெலிஸ்தியர்களுக்கும் பெரும் போர் மூண்டது. பெலிஸ்தியப் படையில் கோலியாத் என்ற மாவீரன் இருந்தான். அவன் மலைபோல் இருந்தான். அவன் ஒருவனைக் கண்டே இஸ்ரவேல் படை மொத்தமும் நடுங்கியது. தினமும் போர்க்களத்துக்கு வந்து இஸ்ரவேலர்களை அவன் எவ்வளவு முடியுமோ அவ்வளவு கிண்டல் செய்தான்.

“என்னோடு சண்டையிட உங்களில் ஒருவனும் இல்லையா; அப்படி ஒருவன் இருந்தால் அவனை அனுப்புங்கள். அவன் என்னை வென்றால், நாங்கள் அனைவரும் உங்களுக்கு அடிமைகள். மாறாக நான் வென்றால், நீங்கள் அனைவரும் எங்களுக்கு அடிமைகள்” என்று வானம் கிடுகிடுக்கக் கத்தினான்.

தாவீதின் அண்ணன்கள் இஸ்ரவேல் படையில் காலாட்படை வீரர்களாக இருந்தார்கள். அதனால், அவர்களுக்குச் சாப்பாடு எடுத்துக்கொண்டு, போர் முகாமுக்கு தாவீது வந்தான். கோலியாத் சொன்னது அவனுடைய காதிலும் விழுந்தது. அதனால், தாவீது பொறுக்க முடியாமல் “ நான் சென்று அவனோடு சண்டை போட விரும்புகிறேன்” என்றான்.

தாவீது சொன்னதைக் கேட்ட சவுல் அரசன், “ நீ பொடிப் பையன். உன்னால் இவ்வளவு பெரிய ராட்சசனை எப்படி வெல்ல முடியும்?’ என்று கேட்டார். அப்போது தாவீது, “ நம் கடவுளாகிய பரலோகத் தந்தை எனக்குப் பக்கத் துணையாக இருப்பார்” என்று சொன்னான்.

பிறகு, தன்னுடைய கவணை எடுத்துக்கொண்டு சற்றுத் தூரத்தில் சிலுசிலுத்து ஓடிக்கொண்டிருந்த சிற்றோடைக்குச் சென்றான். அங்கே ஐந்து கூழாங்கற்களைத் தேர்ந்தெடுத்து, தோளில் மாட்டியிருந்த தனது சிறு தோல் பையில் போட்டுக்கொண்டான். பிறகு, கோலியாத்தை நோக்கி ஓடினான்.

கோலியாத் அவனிடம், “ அடேய் பொடியா என் அருகில் வா! உன்னைக் கொன்று பறவைகளுக்கும் காட்டு விலங்குகளுக்கும் உன்னை உணவாகப் போடுகிறேன்” என்று கத்தினான். ஆனால், தாவீது பயப்படவில்லை. அவன் கோலியாத்திடம், “ நீ வாளையும் ஈட்டியையும் எடுத்துக்கொண்டு சண்டையிட வருகிறாய்.

நானோ கடவுளின் பெயரால் வருகிறேன். நீ எங்களோடு சண்டையிடவில்லை, கடவுளோடு சண்டை போட வருகிறாய். உன்னுடைய வாளையும் ஈட்டியையும் விடக் கடவுள் சக்தியுள்ளவர் என்பதை இப்போது எல்லாரும் தெரிந்துகொள்வார்கள்” என்று கூறி, தாவீது ஒரு கூழாங்கல்லைத் தன் கவணில் வைத்து, வேகமாகச் சுழற்றி வீசினான். அது நேராக கோலியாத்தின் நெற்றியில் சடாரென்று தாக்கியது. அத்தனைப் பெரிய மாவீரன் மரம்போல் சரிந்து கீழே விழுந்தான். இதை எதிர்பார்க்காத பெலிஸ்தியர்கள் நாலாப்புறங்கறிலும் தப்பித்து ஓடினார்கள்.

பொறாமைப் போராட்டம்

தாவீது கோலியாத்தைக் கொன்ற பிறகு, சவுல் ராஜா தன்னுடைய படைக்கு தாவீதைத் தளபதி ஆக்கினார். அதன்பிறகு தாவீது நிறைய இஸ்ரவேல் மக்களுக்கு எதிரான போர்களில் வெற்றிகளைக் குவித்தார். வெற்றியுடன் தாவீது திரும்பி வரும்போதெல்லாம், ‘சவுல் கொன்றது ஆயிரம், தாவீது கொன்றது பல்லாயிரம்’ என்று மக்கள் போற்றிப் பாடினார்கள். அதனால், தாவீதுமேல் சவுல் பொறாமைப்பட்டார், அதனால் தாவீதை தனக்குப் போட்டியாக நினைத்தார். பலமுறை முயன்று சவுலால் தாவீதைக் கொல்ல முடியவில்லை.

சவுலிடமிருந்து தப்பித்து ஓடிய தாவீது, பாலைவனத்தில் தலைமறைவு வாழ்க்கை வாழ வேண்டிய இக்கட்டான போராட்ட வாழ்க்கையை எதிர்கொண்டார். அங்கேயே தனக்கென ஒரு படையை உருவாக்கிக்கொள்ள தாவீதுக்குக் கடவுள் ஆசீர்வதித்தார்.

சவுலின் மகனும் அரச வாரிசுமான யோனத்தான் தாவீதின் நெருங்கிய நண்பனாக இருந்தார். அவர், தன் தந்தையிடம் தாவீதின் பக்கமே கடவுள் இருக்கிறார், அவரைக் கொல்ல வேண்டாம் என்று எடுத்துக் கூறியும் சவுல் கேட்கவில்லை. சவுல் மூவாயிரம் சிறந்த வீரர்களோடு தாவீதைப் பிடிக்கப் போனார். அப்போது சவுல், தனக்கே தெரியாமல் தாவீதும் அவருடைய வீரர்களும் ஒளிந்திருந்த குகைக்குள் தனியாகப் போய்விட்டார்.

‘சவுலைக் கொல்ல இதுதான் சரியான தருணம்’என்று தாவீதின் வீரர்கள் கிசுகிசுத்தார்கள். தாவீது சத்தமில்லாமல் சவுலிடம் போய் அவருடைய உடையின் ஓரத்தை வெட்டி எடுத்துக்கொண்டார். தன் வீரர்களையும் சவுலைத் தாக்க தாவீது அனுமதிக்கவில்லை. அவர், சவுலைச் சத்தமாகக் கூப்பிட்டு, அவரைக் கொல்ல வாய்ப்பு கிடைத்தும் தான் கொல்லவில்லை என்று சொன்னார்.

அதற்குப் பிறகாவது, சவுல் தன் மீதான கொலைவெறியைக் கைவிடுவார் என நினைத்தார். பின்னர் மற்றொரு சந்தர்ப்பத்தில், சவுல் தாவீதிடம், ‘நீ நினைத்திருந்தால் என்னைக் கொலை செய்திருக்கலாம். ஆனால், அப்படிச் செய்யவில்லை. நீதான் இஸ்ரவேலின் அடுத்த அரசன் என்று எனக்குத் தெரியும், என்று தாவீதை ஏற்றுக்கொண்டார்.

சவுல் இறந்த பிறகு, தாவீது தனது 30-ம் வயதில் அரசன் ஆனார். அவரது நல்லாட்சியில் மக்கள் மகிழ்ந்தார்கள். ஆனால் தாவீது, பிறன்மனை நயந்தார். உரியா என்ற போர் வீரனின் மனைவியான பத்சேபாள் என்பவளைச் சூழ்ச்சிசெய்து கவர்ந்துகொண்டார். அதற்காகக் கடவுளின் கோபத்துக்கு ஆளாகி பல்வேறு தண்டனைகளையும் கஷ்டங்களையும் தாவீது அனுபவிக்க வேண்டிவந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x