Published : 28 Mar 2019 11:27 AM
Last Updated : 28 Mar 2019 11:27 AM

நவநரசிம்மர்கள் உறையும் இடம்

அகோபிலம் க்ஷேத்திரத்தின் முக்கியமான அம்சம் என்னவென்றால், ஒன்பது நரசிம்மர்கள் உறையும் ஆலயங்களும் நல்லம்மா காடுகளுக்குள் பத்து கிலோமீட்டர் சுற்றளவுக்குள் அமைந்திருப்பதே.

அகோபில, பார்கவ, யோகானந்த, சத்ரவாத, குரோத, வர்ஷ, கரஞ்ச, மாலோல, ஜ்வாலா, பாவன நரசிம்மர்கள் அனைவரும் இங்கே தரிசனம் தருகிறார்கள்.

அத்துடன் உக்ர ஸ்தம்பம், ப்ரஹ்லாத மெட்டு, பாவனஸ்ரீ ஆறு, ரக்த குண்டம், மண்டபங்கள், பிரகலாத வரதன் ஆலயம் ஆகியவையும் முக்கியத்துவம் வாய்ந்தவை.

திருமங்கை ஆழ்வார், அகோபிலம் பற்றி அத்தனை எளிமையாகச் சென்றடைய முடியாத இடம் என்று குறிப்பிட்டுள்ளார். 44 மற்றும் 45-வது மடாதிபதிகளான முக்கூர் அழகியசிங்கர், வில்லிவலம் அழகியசிங்கர் போன்றோரின் முயற்சியால் மேல் அகோபிலத்துக்கு பக்தர்கள் யாத்திரை போகும் பாதை வசதிப்படுத்தப்பட்டது. வாலிபர்களாக இருப்பவர்களுக்கும் வலிமையானவர்களுக்கும் இன்னும் சிரமம் கொடுப்பவையாகக் குன்றுகளில் உள்ள ஆலயங்கள் இருக்கின்றன. ஜ்வாலா நரசிம்ம சுவாமி தலத்தை அடைவதற்கும் கயிறுகளைப் பிடித்து ஊன்றுகழிகளுடன் செல்வதே சாத்தியம். டோலிகளில் செல்வதற்கு 3 ஆயிரம் ரூபாய் கட்டணம் தர வேண்டும்.

ஜ்வாலா நரசிம்மர் ஆலயம்

அமைதிப் பள்ளத்தாக்கு என்று சொல்லக்கூடிய இடத்தில் இரண்டு வடிவங்களில் குகைக்கோயிலாக இருக்கும் தலம் இது. நரசிம்மர் தூணிலிருந்து வெளிப்படுவது போல ஒரு உருவமாகவும், அசுரர் குல அரசன் இரண்யகசிபுவைக் கொல்பவராகவும் இருக்கிறார். மேல் அகோபிலத்திலிருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவில் அசலாச்சல மேருவில் இந்த ஆலயம் அமைந்துள்ளது.

அகோபில நரசிம்மர் ஆலயம்

கீழ் அகோபிலத்திலிருந்து எட்டு கிலோமீட்டர் தூரம் மேலேறிச் சென்றால் வரக்கூடிய கோயில் இது. இதுதான் புராதனமானதும்கூட. உக்கிர நரசிம்மர் இங்கே காட்சி தருகிறார். இரண்யகசிபு கொல்லப்பட்ட பிறகு தேவர்களும் முனிவர்களும் உக்கிர நரசிம்மரை ‘அஹோ வீர்யம் அஹோ சௌர்யம் அஹோ பாகுபராக்கிரம நரசிம்ஹம் பரம் தெய்வம் அகோபிலம் அஹோ பலம்’ என்று புகழ்ந்த இடம் இது. ஆதிசங்கரர் நிறுவிய சுதர்சன வடிவம் இங்கே உள்ளது.

பார்கவ நரசிம்ம ஆலயம்

இது கீழ் அகோபிலத்தின் அருகிலேயே அமைந்துள்ளது. இங்கே கிருஷ்ணனின் அவதாரமான பரசுராமர் இன்னொரு அவதாரமான மகாவிஷ்ணுவை வணங்கும் காட்சி உள்ளது. இந்த ஆலயம் அடர்ந்த காட்டுக்குள் உள்ளது.

மாலோல நரசிம்ம ஆலயம்

வேதாத்ரி மலையின் மேல் சமதளப் பரப்பில் அமைந்துள்ள கோயில் பக்தர்களிடையே புகழ்பெற்றது. மாலோல நரசிம்மரையே அகோபில மடத்தின் ஜீயர்கள் பயணங்களில் சுமந்து செல்கின்றனர். மாலோல நரசிம்மர் சாந்தமாக தரிசனம் தரும் ஆலயம் இது. மா என்றால் லக்ஷ்மி. லோல என்றால் அன்புக்குரியவர். தியானம் செய்வதற்கு அமைதியான இடமாகும்.

குரோத நரசிம்மர் ஆலயம்

இங்கேயுள்ள நரசிம்மர் வராக வடிவத்தில் காணப்படுகிறார். இந்த அவதாரத்தில் தான் பகவான் பூமியை உயிர்ப்பித்தார். வேதங்களையும் பூமிக்குக் கொண்டுவந்தார்.

காரஞ்ச அல்லது சாரங்க நரசிம்மர் ஆலயம்

காரஞ்ச மரங்களுக்கிடையே இத்தலம் உள்ளதால் இப்பெயர் பெற்றது. பத்மாசனத்தில் காரஞ்ச மரத்தினடியில் ஆதிசேஷனைச் சூடியபடி நரசிம்மர் அமர்ந்திருக்கிறார். இந்த ஆலயம் பாவநாசினி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.

யோகானந்த நரசிம்மர் ஆலயம்

யோகத்தில் அமர்ந்திருப்பதால் இந்தப் பெயர் வந்தது. யோகானந்த நரசிம்மரிடம் பக்த ப்ரகலாதன் யோகம் கற்றதாகக் கூறப்படுகிறது. கீழ் அகோபிலத்துக்கு அருகே இத்தலம் அமைந்துள்ளது.

சக்ரவட நரசிம்மர் ஆலயம்

பத்மாசனத்தில் கண்ணுக்கு எழிலுடன் நரசிம்மர் உட்கார்ந்திருக்கிறார். மேரு மலையிலிருந்து கந்தர்வர்கள் ஆடிப்பாடி மகிழ்விப்பதாக நம்பிக்கை நிலவுகிறது. இங்குள்ள நரசிம்மர் பெரும் இசை ரசிகர். சக்ரவட நரசிம்மரைக் குளிர்விக்க பக்தர்கள் பஜனைகளைப் பாடுகின்றனர்.

பாவன நரசிம்மர் ஆலயம்

மேல அகோபிலத்துக்கு ஆறு கிலோமீட்டர் தொலைவிலுள்ள இந்த ஆலயம் பாவனா ஆற்றங்கரையில் வனம் சூழ உள்ளது. செஞ்சு லக்ஷ்மியுடன் காட்சி தரும் நரசிம்மர் மற்ற அனைத்து நரசிம்மர்களையும்விட சாந்தமும் நளினமும் கொண்டு காட்சி தருகிறார். பரத்வாஜ முனிவர் பிரம்மஹத்தி தோஷம் நீங்கப்பெற்றது இத்தலத்தில்தான்.

bookjpg

Abode of Nava Narasimhas

தி இந்து க்ரூப் பப்ளிகேஷன்ஸ், 859&860, அண்ணா சாலை,

சென்னை– 02 | விலை : ரூ. 299/-

தபால் வழியாகக் காசோலை அனுப்பிப் பெறலாம். THG Publishing Private Limited என்ற பெயரில் ரூ. 334/-க்குக் காசோலை அனுப்ப வேண்டும்.

இதில் தபால் செலவு: ரூ. 35/-

இணையவழியில் வாங்க: www.thehindu.com/publications

மொத்தமாகப் பிரதிகள் வாங்க tobookstore@thehindu.co.in-க்கு

மின்னஞ்சல் செய்யுங்கள்.

மேலும் விவரங்களுக்கு 1800 3000 1878

தமிழில்: ஷங்கர்

(‘தி இந்து குரூப்’ பப்ளிகேஷன்ஸ் வெளியிட்டுள்ள AHOBILAM Abode of Nava Narasimhas நூலில் அகோபிலம் குறித்த இதுபோன்ற சிறந்த கட்டுரைகள் வெளியாகியுள்ளன.)

 

- தேசு கேசவ ராவ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x