

போலி தீர்க்கதரிசிகள் எல்லாக் காலத்திலும் வாழ்ந்திருக்கிறார்கள். பிலேயாம் இதற்கு ஒரு உதாரணம். அவன் ஒருவரை வாழ்த்தினால் எல்லா வளமும் பெற்று அவர் வாழ்வார் என்றும் அவன் ஒருவரைச் சபித்தால் அனைத்தையும் இழந்து அழிந்துபோவார் என்றும் நம்பினார்கள். பிலேயாம் சாத்தானை வழிபட்டுவந்தான். அந்தத் தீயசக்தி அவனுக்குத் தற்காலிகமாக கைகொடுத்துவந்தது. அவனுக்கு இஸ்ரவேலர்களின் வழியாகக் கடவுள் அழிவைக் கொண்டுவந்தார்.
பாலைவனத்தில் 40 ஆண்டுகள் கடுமையான போராட்ட வாழ்க்கை நடத்தியபின் கடவுள் வழிநடத்திய கானான் தேசம் நோக்கி இஸ்ரவேலர்கள் முன்னேறிக்கொண்டிருந்தார்கள். எண்ணிக்கையில் பல்கிப் பெருகியிருந்த இஸ்ரவேலர்கள் கானானின் கோட்டைகளை ஒவ்வொன்றாகக் கைபற்றிக்கொண்டே வந்தார்கள். போரில் வெற்றிபெற, கடவுள் அவர்களுக்கு அரணாக நின்று உதவினார்.
யோர்தான் நதி பாய்ந்து வளம் கொழித்த அதன் கிழக்குச் சமவெளியில் மோவாப் என்ற நகரம் இருந்தது. அதைக் கைப்பற்றும் நோக்கத்துடன் இஸ்ரவேலர்கள் நதியருகே முகாமிட்டிருந்தார்கள். மோவாப் நகரை பாலாக் என்பவன் ஆட்சி செய்துவந்தான். தன்னைவிடச் சற்று பெரிய நிலபரப்பை ஆண்டுவந்த சீகோன், ஓக் ஆகிய இரு அரசர்களை இஸ்ரவேலர்கள் தோற்கடித்துவிட்டு முன்னேறி வந்துகொண்டிருக்கும் செய்தி பாலாக்கை கலங்கச் செய்தது.
அதனால் குறுக்குவழியில் இஸ்ரவேலர்களை தோற்கடித்துவிடமுடியுமா என்று பாலாக் யோசித்தான். அப்போது அவனது நினைவுக்கு வந்தவன் பிலேயாம்தான். இஸ்ரவேலர்களோடு மோதுவதற்கு முன்பு, பிலேயாமை அனுப்பி, இஸ்ரவேலர்களுக்கு வெற்றி கிடைக்காதவாறு அவர்களை சபிக்கச் செய்துவிடலாம் என்று திட்டமிட்டான்.
பிலேயாமின் பேராசை
மோவாப் நகரை ஒட்டியிருந்த பெத்தூர் என்ற ஊரில்தான் பிலேயாம் வசித்துவந்தான். உடனே அவனுக்கு அவசரச் செய்தி அனுப்பினான் பாலாக். “பிலேயாமே..! பிலேயாமே..! உடனே புறப்பட்டுவா..! நீ வந்து எனக்கு உதவிசெய்தால், அதற்குக் கைமாறாக என்ன வேண்டுமோ கேள், தருகிறேன். நீ செய்ய வேண்டியதெல்லாம் இவ்வளவுதான்... என் படையைவிட இஸ்ரவேலர்கள் பலமிக்கவர்களாக இருக்கிறார்கள்.
நீ வந்து, அவர்கள் போருக்குக் கிளம்பும் முன்பாக அவர்களைச் சபித்துவிடு. அதனால் நான் அவர்களை எளிதில் வென்றுவிடுவேன்.” என்று செய்தி அனுப்பினான். பிலேயாம் தனது கழுதை மேலேறி அரசன் பாலாக்கிடம் முதலில் வெகுமதிகளைப் பெற்றுக்கொண்டு அங்கிருந்து இஸ்ரவேலர்களை மூன்று முறை சபித்துவிடக் கிளம்பினான்.
கழுதை பேசியது
ஆனால் கடவுள் பிலேயாமிடம், “நீ இஸ்ரவேலர்களைச் சபிக்கக் கூடாது” என்று அவனது கனவில் தோன்றி கூறினார். அதனால் பிலேயாம் மோவாபுக்கு செல்லமாட்டேன் என்று முதலில் சொன்னான். ஆனால் பேராசை அவனை ஆசை வார்த்தைகள் கூறி இழுத்தது. அரசன் பாலாக் இரண்டாவது தடவையாக செய்தி அனுப்பினான். இரண்டாவது செய்தியில் “ நீ எதைக் கேட்டாலும் தருகிறேன்”என உறுதிமொழி அனுப்பியிருந்தான்.
கடவுளின் எச்சரிக்கையால் பிலேயாம் போகவில்லை. ஆனாலும் சாத்தானோ பிலேயாமை தூண்டிக்கொண்டே இருந்தான். பின்னர் போவது என்று முடிவெடுத்துத் தூங்கிப்போனான். அப்போது கடவுள் அவனது கனவில் வந்து, “நீ பாலாக்கிடம் போகலாம். ஆனால், நான் சொல்வதைத்தான் நீ இஸ்ரவேலர்களிடம் சொல்ல வேண்டும்”என்று சொன்னார்.
பின்னர், பிலேயாம் தன் கழுதைமேல் ஏறி, தெற்கில் இருந்த மோவாப் நகரத்துக்கு கிளம்பினான். இஸ்ரவேலர்களைச் சபிக்கக் கூடாது என்று கடவுள் சொல்லியிருந்தாலும் அவர்களைச் சபிக்க வேண்டும் என்று முடிவு செய்துகொண்டான். அவனது மனதை அறிந்த கடவுள், தனது தூதனை அனுப்பி பிலேயாமை அவன் செல்லும் வழியில் தடுத்து நிறுத்தினார்.
பிலேயாமினால் அவரைக் காண முடியவில்லை. ஆனால், அவனுடைய கழுதையால் தூதரைக் காண முடிந்தது. அவனது கழுதை, ஒளிவீசும் வாளுடன் நிற்கும் தேவதூதரைக் கண்டு சாலை நடுவில் படுத்துக்கொண்டது. ஒவ்வொரு முறையும், பிலேயாம் அந்தக் கழுதையைத் தடியால் அடித்துத் துவைத்தான்.
அழிவை தேடித்தந்த ஆசை
மூன்றாம் முறை அடித்தபோது, கடவுள் அந்தக் கழுதையைப் பேச வைத்தார். ‘நீங்கள் இத்தனை ஆண்டுகளாக என்மேல் சவாரி செய்கிறீர்களே, எப்போதாவது இப்படிச் செய்திருக்கிறேனா?’ என்று கேட்டது.
அப்போது கடவுள் பிலேயாமின் கண்களுக்கு தன் தேவதூதரை தெரியும்படி செய்தார். “நான் தவறு செய்துவிட்டேன். இப்போதே இப்படியே வீட்டுக்குத் திரும்பிச் செல்கிறேன்” என்று சொன்னான். அப்போது அந்தத் தேவதூதர், “ நீ மோவாபுக்குப் போகலாம். ஆனால், நம் தந்தை சொல்வதைத்தான் நீ சொல்ல வேண்டும்” என்று கூறி மறைந்தார்.
ஆனால், அவனது ஆசை மீண்டும் தூண்டப்பட்டது. இஸ்ரவேலர்கள் முகாமுக்குச் சென்று அவர்களைச் சபிக்க பிலேயாம் மூன்று முறை முயற்சி செய்தான். ஆனால், மூன்று தடவையும் அவன் இஸ்ரவேலர்களை ஆசிர்வதிக்கும்படி கடவுள் அவனது நாக்கை மடைமாற்றினார். இறுதியில், இஸ்ரவேலர்கள் மோவாபைத் தாக்கினார்கள். அப்போது, பிலேயாம் அந்தப் போரில் மாண்டுபோனான். அவனது ஆசையே அழிவைக் கொண்டுவந்தது.