

அதர்வண வேதத்தைச் சேர்ந்த சில உபநிடதங்களில் மாண்டூக்ய உபநிடதம் முதன்மையானது. மண்டூகம் என்றால் தவளை. விழிப்பு, கனவு, தூக்கம் என்ற மூன்று நிலைகளில் மனித மனம் மாறி மாறி சஞ்சரிப்பதைப் பற்றி இந்த உபநிடதம் விவரிக்கிறது. இம்மூன்று நிலைகளிலும் மனம் தவளைபோல் தாவிக்குதிப்பதாகக் கொண்டு இப்பெயர் வழங்கப்பட்டதாகவும் கூறுவர்.
இதனை அருளிய முனிவரின் பெயரால் வழங்கப்படுகிறது என்றும் கூறுவர். உலகம், உயிர்கள், இறைவன் என்று தனித்தனியாக எதுவும் இல்லை. இருப்பவை அனைத்தும் ஒன்றே என்ற மிக உயர்ந்த உண்மை இந்த உபநிடத்தில் ஓங்கார மந்திரத்தின் வாயிலாக விளக்கப்படுகிறது.
உயர்ந்தவற்றை நாடி
பன்னிரண்டு மந்திரங்கள் மட்டுமே உடையது மாண்டூக்ய உபநிடதம். ஒவ்வொரு மந்திரமும் ஆழ்ந்த கருத்துச் செறிவுடையது. இவற்றைப் புரிந்துகொள்வது கடினம் என்பதால் ஸ்ரீசங்கரரின் குருவிற்கு குருவாகிய ஸ்ரீகெளடபாதர் 215 சுலோகங்கள் கொண்ட ‘மாண்டூக்ய காரிகை’ என்ற நூலை இயற்றி உள்ளார்.
முதலில் சாந்தி மந்திரம் ஓதப்படுகிறது. உலகியலில் மூழ்கடிப்பதற்கான விஷயங்கள், உயர் வாழ்க்கையை நோக்கிய விஷயங்கள் இரண்டும் மனித வாழ்வில் குறுக்கிட்டுக்கொண்டே இருக்கின்றன. உயர்வாழ்க்கையை நோக்கிய பயணத்தைத் தேர்வு செய்ய நமது புலன்களுக்கு தெளிவும் உறுதியும் அவசியம். வேத காலத்தில் இயற்கையின் சக்திகள் ஒவ்வொன்றையும் ஒரு தேவனாக உருவகப்படுத்தி வழிபடும் பழக்கம் இருந்தது.
சூரியன் உதிப்பது, கடல் அலைகள் தவழுவது, வானவெளியில் நட்சத்திரங்கள் மின்னுவது என்ற எல்லா இயற்கையின் ஆற்றல்களும், இந்திரன், வருணன், வாயு என்ற தேவர்களாக உருவகப்படுத்தப்பட்டன. இவ்வுலகில் மனித வாழ்வு வளம் பெற வேண்டும் என்றால், இந்த இயற்கை ஆற்றல்களும் வளமுற்றதாக இருக்க வேண்டும். அதற்கு தேவர்கள் துணை புரிய வேண்டும் என்று தொடங்குகிறது சாந்தி மந்திரம்.
ஒருமையை நோக்கி
ஒரு குயவர் களிமண் கொண்டு உருவங்களைச் செய்கிறார். அவர் கைவண்ணத்தில் சுண்டெலி, பூனை, யானை, சிட்டுக்குருவி எல்லாம் உருவாகின்றன. அவற்றின் மூலப்பொருள் ஒன்றே. ஆனால், வடிவம் பெற்றபின் அவை தனித்தன்மை உடையதாகின்றன.
களிமண் சுண்டெலியும், களிமண் பூனையும் ஒன்றல்ல. அதுபோல இவ்வுலகத்தில் ஒவ்வோர் உயிரும், உயிரற்ற பொருளும் அதனதன் தனித்தன்மையில் வெவ்வேறானவை. ஆனால், புறத்தோற்றங்கள் மட்டுமே. ஆன்ம நிலையில், அனைத்தும் இறைவனே. குயவரின் மூலப்பொருளைப் போன்று ஆன்ம நிலை ஒன்றே என்ற உண்மையினை, ஒருமை நிலையினை அடைவதே இந்த உபநிடதத்தின் நோக்கம்.
உலகெங்கும் ஓங்காரம்
அடிப்படை உண்மைகளான உலகம், மனிதன், இறைவன் ஆகிய மூன்றும் ஓங்காரமே, ஒன்றே என்பதையே மாண்டூக்ய உபநிடதம் விளக்குகிறது. அகர உகர மகர ஒலிகளின் சேர்க்கையாகிய ஓங்காரம், இறைவனைக் குறிக்கிற குறியீடாகும். இந்த ஒலி மிகவும் புனிதமானதாக, மந்திரங்களுக்கெல்லாம் ஆதி மந்திரமாகப் போற்றப்படுகிறது.
“இந்த உலகம் அனைத்தும் ஓங்காரமே. சென்றவை, இருப்பவை, வருபவை எல்லாம் ஓங்காரமே. மூன்று காலங்களையும் கடந்ததாக எது உள்ளதோ அதுவும் ஓங்காரமே” என்று முதல் மந்திரம் கூறுகிறது. “இவை அனைத்தும் இறைவனே. இந்த ஆன்மாவும் இறைவனே. இந்த ஆன்மா நான்கு பரிமாணங்களை உடையது” என்று இரண்டாவது மந்திரம் கூறுகிறது. படைப்பில் காணப்படும் அனைத்தும் இறையம்சம் உடையவையே எனும் போது, நாமும் அதில் அடக்கம். நம்மில் உள்ள ஆன்மாவும் இறைவனும் ஒன்றே. இதில் உள்ள “அயமாத்மா ப்ரஹ்ம” என்ற சொற்றொடர் மிக முக்கியமானதாகும்.
நான்கு பரிமாணங்கள்
நாம் புற உலகை அனுபவிப்பது நமக்குத் தெரிந்த, நாம் காண்கின்ற நமது தூல உடம்பினால் ஆகும். மனம், புத்தி, நான்-உணர்வு, சித்தம் ஆகிய நான்கும் மனத்தின் பல்வேறு நிலைகள் ஆகும். ஆன்மாவின் முதல் பரிமாணம் வைசுவானரன் எனப்படுகிறது. ஏழு அங்கங்களும், பத்தொன்பது வாய்களும் கொண்ட வைசுவானரன் விழிப்பு நிலையில் புறவுலகை அனுபவிக்கிறான்.
கண்ணுக்குத் தெரிகின்ற பூமி, தெரியாத நுண்ணுலகமான சொர்க்கம் மற்றும் பஞ்ச பூதங்கள் ஆகியவை வைசுவானரனின் அங்கங்களாகக் கூறப்படுகின்றன. ஞானேந்திரியங்கள் 5, கர்மேந்திரியங்கள் 5, பிராணன் 5 மற்றும் மனம், புத்தி, நான் எனும் உணர்வு, சித்தம் ஆகியவை சேர்த்து 19 கருவிகளின் மூலம் நாம் புற உலகை அனுபவிக்கிறோம். இதுவே நமது முதல் பரிமாணம்.
ஆத்மாவின் இரண்டாம் பரிமாணம் தைஜஸன் எனப்படுகிறது. இதன் உணர்வு அகமுகமாக உள்ளது. ஏழு அங்கங்களும், பத்தொன்பது வாய்களும் கொண்ட தைஜஸன் கனவுநிலையில் மனவுலகை அனுபவிக்கிறான். இந்நிலையில் அனுபவங்கள் அனைத்தும் மனவுலகிலேயே நிகழ்கின்றன. ஆழ்மனம் விழித்திருக்கிறது. அந்த மனம் ஒரு புதிய உலகத்தை உருவாக்குகிறது. அதுவே கனவு.
ஆசைகளோ கனவுகளோ எதுவும் இன்றி ஆழ்ந்து தூங்குகின்ற நிலை ஆன்மாவின் மூன்றாம் பரிமாணமாகும். இந்த நிலையை அனுபவிப்பவன் பிராஜ்ஞன். இந்த நிலையில் அனுபவங்கள் எதுவும் இல்லை. உணர்வு திரண்டிருக்கிறது. இவ்வாறு தூக்க நிலையை அனுபவிக்கிற ஆன்மா பிராஜ்ஞன் எனப்படுகிறது.
நான்காம் பரிமாணம் என்பது செயல்களற்ற புரிந்துகொள்ள முடியாத, அடையாளங்கள் இல்லாத, சிந்தனைக்கு அப்பாற்பட்ட, விளக்க முடியாத நிலை அது. அதனை ஆன்ம உணர்வால் மட்டுமே அறிய முடியும். அங்கே பிரபஞ்ச உணர்வு இல்லை. இன்னும் விவரித்துச் சொல்ல வேண்டுமெனில் விழிப்பு நிலை, கனவு, தூக்கம் ஆகிய மூன்று நிலைகளிலும் ஆன்மா இருக்கிறது. அம்மூன்றும் சேர்ந்ததும், அதே வேளையில் அவற்றைக் கடந்ததுமான ஒரு நிலைதான் இது.
ஆன்ம அனுபூதி
இந்த ஆன்மாவை ஒரு சொல்லால் குறிப்பிட வேண்டுமானால் அதுவே ஓம் என்னும் ஓங்காரம். ஸ்ரீ கெளடபாதரின் “மாண்டூக்ய காரிகை” இவ்வாறு சொல்கிறது. “அகாரத்தை உச்சரிக்கும் போது இதயத்தாமரை அவிழ்கிறது. உகாரத்தை உச்சரிக்கும்போது மலர்கிறது.
மகாரத்தை உச்சரிக்கும்போது நாதம் எழுகிறது. அர்த்த மாத்திரை வேளையில் அமைதியில் ஆழ்கிறது. இந்த இதயம் தூய படிகம் போன்றது. பகுதிகள் அற்றது. இதயத்தாமரை மலரும் போது பாவங்கள் அழிகின்றன. யோகத்தில் நிலைபெற்றவன் இந்த இதயத் தாமரையில் மேலான இறைவனைப் பெறுகிறான்.