

மகா சிவராத்திரி நன்னாள் இன்று (4.3.19 திங்கட்கிழமை). இந்த நாளில், இரவு முழுக்க விடிய விடிய சிவபெருமானுக்கு பூஜைகள் நடைபெறும்.
மகா சிவராத்திரி அன்று மட்டுமே சிவாலயங்களில் நள்ளிரவும் திறந்திருக்கும். பூஜைகள், அபிஷேக ஆராதனைகள் விமரிசையாக நடைபெறும்.
மொத்தம் 4 கால பூஜைகள் நடைபெறும்.
முதல் கால பூஜையானது இரவு 7.30 மணிக்கும் 2ம் கால பூஜையானது இரவு 11 மணிக்கும் நடைபெறும். சுமார் ஒன்றரை மணி நேரம் இந்த பூஜையானது நடைபெறும்.
3ம் கால பூஜை நேரம்:
இரவு 12.30 மணிக்குத் தொடங்கி, 3.30 மணி வரை 3ம் கால பூஜை நடைபெறும்.
அப்போது சிவனாருக்கு தேன் கொண்டு அபிஷேகம் நடைபெறும். அபிஷேகத்துக்குப் பிறகு, வெண்பட்டாடை அணிவித்து அலங்கரிப்பார்கள். கோதுமை அட்சதையிட்டு, மாணிக்கத்தாலான ஆபரணங்கள் அணிவிப்பார்கள்.
அருகம்புல், வில்வம் இலைகளால் அத்தி மற்றும் பிச்சிப்பூக்களால் அர்ச்சித்து அலங்கரிப்பார்கள். அப்போது கஸ்தூரி, சந்தனம், கற்பூரம் கலந்து தூப தீப ஆராதனைகள் காட்டப்படும். பஞ்சமுக தீபாராதனை காட்டி பூஜிக்கப்படும்.
எள் கலந்த சாதம், நெய்யும் மாவும் கலந்த பட்சணங்கள் நைவேத்தியமாகப் படைத்து வழிபடுவார்கள். சிவபுராணம், லிங்காஷ்டகம், திருவாசகம், தேவாரம் பாராயணம் செய்து வழிபடுவது சகல நல்லதுகளையும் பெற்றுத் தரும்!