

எல்லாச் செயல்களுக்கும் பலன் எதிர்பார்ப்பது மனித குணம். இறைவனிடம் பக்தி கொள்வதுகூடக் காரண, காரியத்துடனேயே செய்யப்படுகிறது.
பலர் வேண்டுதல் நிமித்தமாகவே கோயில்களுக்குச் செல்கிறார்கள். அனைத்து வளங்களையும் பெறவே மனிதர்கள் ஆசைப்படுகிறார்கள். இதனை நிறைவேற்றித் தருபவள் சக்தி. பிரம்மா, சிவன், விஷ்ணு ஆகிய மூவரும் தியானித்து இருப்பதும் அந்த தேவியையே என்று தேவி பாகவதத்தில் விஷ்ணு குறிப்பிடுகிறார்.
தேவி பாகவதத்தைப் படிப்பதால், கிடைக்கும் நற்பலன்கள் அதிலேயே கூறப்பட்டுள்ளன. அதன்படி இதனை பாராயணம் செய்தால் அஸ்வமேத யாகம் செய்த பலனை அடையலாம். இப்புராணத்தைப் புத்தகமாகத் தானம் செய்தால், புத்திர பாக்கியம், தனம், கல்வி ஆகியன கிடைக்கும் என்பது ஐதீகம். தேவி பாகவதத்தை வைத்துப் பூஜித்தால், லஷ்மியும், சரஸ்வதியும் நீங்காத செல்வமாய் நிறைந்து இல்லத்தில் இருப்பார்கள். வேதாளம், பேய், பிசாசுகள் இல்லத்தை அண்டாது என்று தேவி பாகவதம் கூறுகிறது.
இதனை நவராத்திரியில் பாராயணம் செய்தால், வேண்டுதல் பன்மடங்கு பலிக்கும் என்றும், யார் பூஜித்தாலும் பேதமின்றி வரங்களை அள்ளிக் கொடுப்பவள் என்றும் தேவி பாகவதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. தேவி பாகவதம் எழுவதற்கான காரணமே ஒரு சுவையான கதைதான். வியாச முனிவர் வழக்கம்போல் ஒரு நாள் தியானத்தில் ஆழ்ந்திருந்தார். அப்போது இரண்டு ஊர்க்குருவிகள் ஆனந்தமாக விளையாடிக்கொண்டிருந்ததைக் கண்டார். குருவிகள்கூட ஆண், பெண்ணாய் இணைந்து இன்பமுற முடியுமா என்ற ஆச்சரியக் கேள்வி அவருள் எழுந்தது.
இதற்குள் பெண் குருவி கருவுற்றது. ஆண் குருவி கூடு கட்டித் தயாராக வைத்தது. குறித்த காலத்தில் பெண் குருவி முட்டையிட்டுக் குஞ்சு பொரித்தது. கீச், கீச் என்று குஞ்சுகள் சப்தமிட்டுத் தன் தாய், தந்தையருடன் கொஞ்சி விளையாடின. தந்தைக் குருவி, எங்கோ சென்று கஷ்டப்பட்டு உணவை எடுத்து வந்து குஞ்சுகளுக்கு அன்புடன் ஊட்டியது.
இதனைக் கண்ட வியாசருக்கு ஆச்சரியம். இந்தக் குஞ்சுகள் பெரியவர்களாகி இக்குருவிகளைக் காப்பது வழக்கத்தில் இல்லை. பெரிய குருவிகள் இறந்தால், பிள்ளை என்ற முறையில் தர்ப்பணம் முதலானவற்றைச் செய்யப் போவதுமில்லை. ஆனால் இருந்தும் இந்தப் பெற்றோர் குருவிகள், எந்தப் பிரதிபலனையும் எதிர்பாராமல் அன்பு பாராட்டும் காரணம் என்ன என ஆராயத் தொடங்கினார் வியாசர்.
அனைத்து உயிரினங்களும் `புத்` என்ற நரகத்தில் வீழாமல் இருக்க புத்திரன் தேவை என்பதை ஆய்வின் பலனாகக் கண்டார் வியாசர். தவசீலரான அவருக்கும் புத்திரன் வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. உத்தமமான ஞானவானாக அப்புத்திரன் இருக்க வேண்டும் என அவர் விரும்பினார். மேரு மலைக்குச் சென்று தவமியற்றி இப்பேறு பெற விரும்பினார்.
எந்தத் தெய்வத்தைக் குறித்து தியானித்தால் பலன்முழுமையாகக் கிடைக்கும் என்று வியாசர் யோசித்தார். அங்கு வந்த நாரதர், விஷ்ணு தியானிப்பதும் அந்த பராசக்தியைதான் என்று கூறி, பராசக்தியைத் தியானிக்கும்படி கூறினார். வியாசரும் அவ்வாறே தியானித்தார். தேவியைக் குறித்து தியானம் செய்ததால் இவருக்கு பிள்ளையாய் பிறந்தவர் கிளி முகம் கொண்ட அதி அற்புதமான ஞானி சுகர்.
எல்லாம் துறந்த முனிவருக்கே புத்திர பாக்கியம் கிடைக்கச் செய்தது தேவி உபாசனை என்றால், மனித குலம் முழுமைக்கும் ஆனந்தத்தை அளிப்பது தேவி பாகவத பாராயணம் என்று பாராயண பலனைச் சொல்லும் சுலோகத்தில் விளக்கப் பட்டுள்ளது.
இப்படிப் பாராயணம் செய்வதற்கான சிறந்த நாட்களாக நவராத்திரித் திருநாட்கள் கருதப்படுகின்றன.