Last Updated : 14 Mar, 2019 10:20 AM

 

Published : 14 Mar 2019 10:20 AM
Last Updated : 14 Mar 2019 10:20 AM

உட்பொருள் அறிவோம் 07: வெளிச்சத்தில் சாவி தேடிய கதை

இரவு நேரம். வீட்டு வாசலில் குனிந்து உட்கார்ந்துகொண்டு தெருவிளக்கின் வெளிச்சத்தில் மண்ணைக் கிளறி எதையோ தேடிக்கொண்டிருக்கிறான் ஒருவன். தூரத்தில் இருந்து இதைப் பார்த்தபடியே வந்த வழிப்போக்கன் ஒருவன் இவன் அருகில் வந்து, ‘என்ன தேடிக்கொண்டிருக்கிறீர்கள்?' என்று கேட்கிறான். ‘சாவி காணாமல் போய்விட்டது. அதைத்தான் தேடிக்கொண்டிருக்கிறேன்,' என்கிறான் இவன்.

வழிப்போக்கனும் கூடச் சேர்ந்து தேடத் தொடங்குகிறான். சிறிது நேரம் தேடிய பிறகு, ‘எங்கே தொலைத்தீர்கள் சாவியை?' என்று கேட்கிறான். ‘வீட்டிற்கு உள்ளே,' என்கிறான் இவன். இந்த பதிலைக் கேட்டு அதிர்ந்து போன வழிப்போக்கன், ‘வீட்டிற்கு உள்ளே சாவியைத் தொலைத்துவிட்டு வெளியில் ஏன் வந்து தேடிக் கொண்டிருக்கிறீர்கள்?' என்று எரிச்சலோடு கேட்கிறான்.

‘இங்கேதான் வெளிச்சமாக இருக்கிறது. வீட்டிற்கு உள்ளே இருட்டாக இருக்கிறதே. அங்கே எப்படித் தேடுவது?' என்கிறான் இந்த புத்திசாலி!

இது ஒரு ஜென் கதை. என்ன அர்த்தம் இதற்கு? ஜென் கதைகளுக்குப் பல விதங்களில், பல தளங்களில் உட்பொருள் சொல்லலாம். சந்தர்ப்பத்துக்குத் தக்கவாறு அதற்குப் பொருள் கொள்ள முடியும். இந்தக் கதையில் வரும் சாவி எதைக் குறிக்கிறது? பல விஷயங்களுக்கு இந்தச் சாவியை உதாரணமாகக் கொள்ளமுடியும்.

அன்பு, சந்தோஷம், நாம் யார் என்பதைப் பற்றிய உண்மை, இந்தப் பிரபஞ்சம் என்றால் என்ன என்ற கேள்விக்கான பதில், அல்லது கடவுள் என்னும் தத்துவத்தின் உட்பொருள் என்ன என்பதுபோன்ற பல விஷயங்களுக்கு இந்தக் கதையில் வரும் சாவி ஒரு குறியீடாக இருக்கிறது என்று கொள்ளலாம். இந்தப் பன்முகத்தன்மைதான் ஜென் கதைகளின் சிறப்பு.

எங்கேயோ தேடுகிறோம்

தான் முக்கியம் என்று கருதும் எந்த விஷயத்தையும் இந்த இடத்தில் ஒவ்வொருவரும் போட்டுப் பார்த்துக்கொள்ளலாம். உதாரணத்துக்கு அன்பு என்பதை எடுத்துக்கொள்வோம். தொலைந்துபோன ஒரு விஷயத்தை, எங்கே, எப்படி அது தொலைந்து போயிற்று என்பதைக் கணக்கில் எடுத்துக்கொள்ளாமல், எங்கேயோ தேடுகிறோம்.

சிறுவயதில் நமக்குள் இயல்பான அன்பு எப்போதும் பரிணமித்துக் கொண்டிருந்தது. உறவினரோ, நண்பர்களோ நம் வீட்டுக்கு வந்தால் அவர்கள் நம்முடனேயே சில நாட்களுக்குத் தங்கிவிட வேண்டும் என்று விரும்புவோம். அவர்கள் மீது தன்னியல்பான அன்பு ஊற்றெடுக்கும். ஆனால் வளரும்போது நம்மையும் அறியாமல் அந்த அன்பு காணாமல் போய்விடுகிறது.

அதை எப்படியோ தொலைத்துவிடுகிறோம். அந்த அன்பு நமக்குள் கசிந்துகொண்டிருந்த வரையிலும் இனங்காண முடியாத இயல்பான சந்தோஷம் நமக்குள் இருந்துகொண்டிருந்தது என்பதைக் கூட வெகு காலம் கழித்துத்தான் நாம் உணர்கிறோம். அதன் பிறகுதான் நாம் அன்பின் வேட்டையில் இறங்கத் தொடங்குகிறோம்.

எங்கே கிடைக்கும் அந்த அன்பு என்று எல்லோரிடமும் தேடத் தொடங்கிவிடுகிறோம். நம்மிடம் அன்பு செலுத்தாதவர்களிடம் நமக்குக் கோபம் ஏற்படுகிறது. இதில் துரதிருஷ்டமான விஷயம் என்னவென்றால் மற்றவர்களும் நம்மைப் போலவே தமக்கு வெளியில் அன்பைத் தேடி அலைபவர்களாகவே இருக்கிறார்கள் என்பதுதான்.

எப்போது கண்டுபிடிக்கப் போகிறோம்?

எங்கே தொலைத்தோம் அந்த அன்பை? இப்போது எங்கே தேடுகிறோம்? அந்த வயதில் நமக்குள் அன்பு கசிந்து கொண்டிருந்தபோது அதை வெளியில் எங்கும் தேடினோமா? நமக்கு உள்ளே அந்த அன்பு தன்னியல்பாக அப்போது சுரந்துகொண்டிருந்தது. அதை இப்போது வெளியே மற்றவரிடத்தில் தேடிக் கொண்டிருப்பது என்ன பேதைமை?

எந்த ஒரு பொருளையும் தொலைந்து போவதற்கு முன்னால் கடைசியாக எங்கே பார்த்தோம் என்றுதானே நாம் பொதுவாகத் தேடுவது வழக்கம்? எங்கே உணர்ந்தோம் கடைசியாக அந்த அன்பை? உள்ளேதானே? இப்போது ஏன் வெளியில் தேடுகிறோம்? உள்ளே அன்பு இல்லாதபோதுதான் நாம் அதை வெளியில் தேடுகிறோம், இல்லையா?

கதையில் வருவது போலவே நமக்கு உள்ளே எப்போதும் இருட்டாக இருக்கிறது. அங்கே நமக்குக் கொஞ்சமும் வழி தெரியாது! அதனால் அங்கே செல்வதற்கு நமக்கு மிகவும் பயமாக இருக்கிறது. இந்தக் காரணத்தால் வெளியே இருக்கும் உலகம் என்ற இந்தப் பொய்யான வெளிச்சத்தில் அந்த அன்பைத் தேடிக் கொண்டிருக்கிறோம். எப்போதும் நாம் அங்கே அதைக் கண்டுபிடிக்கப் போவதில்லை.

சரி, அன்பு உலகத்தில் இல்லையென்றால் வேறெங்கே இருக்கிறது? மனத்திலா? ஆமாம் என்றுதான் பலரும் நினைப்பார்கள். ஆனால், அது சரியல்ல. அன்பு மனத்தில் விளைவதில்லை! அப்படியென்றால்? உலகத்திலும் இல்லை, மனத்திலும் இல்லையென்றால் வேறெங்கேதான் அன்பைத் தேடிக் கண்டுபிடிக்க முடியும்? இந்தக் கேள்விக்குப் போவதற்கு முன்னால் நாம் புரிந்துகொண்டாக வேண்டிய மிக முக்கியமான ஒரு விஷயம் இருக்கிறது.

அதாவது, உலகமும் மனமும் வெவ்வேறல்ல என்ற உண்மைதான் அது! ஆமாம். உலகமும் மனமும் ஒன்றுதான். நம் மனத்தின் பிம்பங்களைத்தான் நாம் வெளியில் உலகமாகப் புறவயப்படுத்துகிறோம் என்பது சற்று நிதானமாகக் கவனித்துப் பார்த்தால் தெளிவாக விளங்கும். உண்மையில் நாம் ‘வெளியே’ என்று நினைப்பதும் மனத்தைச் சார்ந்ததுதான். அகவயமாக இருக்கும்போது எது மனமாக இருக்கிறதோ, அதுவேதான் புறவயமாக இருக்கும்போது உலகமாகத் தெரிகிறது.

‘உள்ளே' என்பது உண்மையில் மனத்தையும் கடந்த ஒரு அகத்தளம். ‘அகம்' என்பது மனம் அல்ல. அது ஒரு எல்லையற்ற அகப்பெருவெளி. அதுதான் ‘உள்ளது’. அந்தப் பெருவெளியில் இருந்துதான் அன்பு, சந்தோஷம், எல்லாம் ஊற்றெடுத்து வருகிறது. நம் ஜீவனைப் பற்றிய உண்மை, இந்தப் பிரபஞ்சத்தைப் பற்றிய உண்மை அனைத்தும் அந்த அகவெளியில் நிலைகொண்டால்தான் தெளிவாகத் தெரிய முடியும்.

மனம் என்பது ஒரு முப்பட்டைக் கண்ணாடி (Prism) போன்றது. பார்வையின் ஒளியை அது சிதற அடிக்கிறது. காண்பவை எல்லாவற்றையும் அது சிதைத்துக் காட்டுகிறது. உண்மையின் அந்தச் சிதைந்த உருவம்தான் உலகம்!

அன்பின் சிதைந்த வடிவங்கள்

அதனால், மனத்தைப் புரிந்துகொண்டு, அதிலிருந்து விடுபட்டு, தெளிவான, சிதையாத பார்வையுடன் நம் உள்ளே விரிந்திருக்கும் அகவெளியில் நிலைகொண்டு பார்த்தால்தான் நம்மைப் பற்றியும், மற்றவர்களைப் பற்றியும், நமக்கு முன்னே தோற்றம் கொண்டிருக்கும் இந்தப் பிரபஞ்சத்தைப் பற்றிய உண்மையும் நமக்குத் தெளிவாக விளங்கும்.

அப்போதுதான் அன்பின் சிதைந்த தோற்றங்களான கோபம், பேராசை, வெறுப்பு, மமதை, பொறாமை, நிம்மதியின்மை, மற்றவர்களைப் புண்படுத்தும் நடவடிக்கைகள், போன்ற இழிகுணங்களிலிருந்து நாம் விடுபட முடியும். நாம் வாழும் இந்தப் பிரபஞ்சம் அன்பின் உருவாக்கம் என்னும் பேருண்மையும் அப்போதுதான் நமக்குத் தெரியவரும்.

உள்ளே விரிந்திருக்கும் அந்தப் புனிதமான, எல்லையற்ற அகவெளியில் புகுந்து சஞ்சரிக்க நாம் நம்மை ஆயத்தப்படுத்திக்கொள்ள வேண்டாமா? இடமும் காலமும் அற்று, தொடக்கமும் முடிவுமற்ற அந்தப் பெருவெளியின் ஆழத்தில் நுழைந்து பார்க்க நாம் தயாரா?

மனத்தின் பார்வையில் இருள் போலத் தெரிந்து, மனத்தின் எல்லையைக் கடந்த பெருவெளியின் உள்ளே நுழைந்ததும் ஒளிமயமாய் விரிந்து நிலைகொண்டிருக்கும் பேருண்மை, சக்தியின் பேரூற்று அங்கே நமக்காகக் காத்துக்கொண்டிருக்கிறது இல்லையா?

(இருளைக் கடப்போம்)
கட்டுரையாசிரியர் தொடர்புக்கு: sindhukumaran2019@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x